இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்

புது தில்லி:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன், சனிக்கிழமை காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக இவர் தில்லி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இவரது முழுப் பெயர் அர்தேந்து பூஷண் பரதன்.

92 வயதான ஏ.பி. பரதனுக்கு, கடந்த 7ஆம் தேதி திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தில்லியில் உள்ள ஜி.பி. பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது உடல்நிலை சனிக்கிழமை மிகவும் மோசமடைந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சனிக்கிழமை இரவு 8.20 மணி அளவில் அவர் மரணமடைந்ததாக ஜி.பி.பந்த் மருத்துவமனையின் நரம்பியல் துறை இயக்குநர் வினோத் புரி தெரிவித்தார்.

திங்கள்கிழமை நாளை அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஏ.பி.பரதன், தேசிய அரசியலில் வருவதற்கு முன்பு மகாராஷ்டிரத்தில் வியாபாரிகள் சங்கத்தின் முக்கியத் தலைவராகவும், அந்த மாநில இடதுசாரித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 1957-ஆம் ஆண்டு சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், ஏஐடியூசி அமைப்பின் பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் உருவெடுத்தார்.

தேசிய அரசியலுக்கு கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் வந்த ஏ.பி. பரதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்தார். மேலும், இந்திரஜித் குப்தாவைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் வகித்தார்.

மறைந்த ஏ.பி.பரதனுக்கு அசோக் என்ற மகனும், அல்கா என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி, கடந்த 1986-ஆம் ஆண்டில் மரணமடைந்துவிட்டார்.