பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : அவசர தொலைபேசி எண் 100யை எடுக்காத காவல் துறையினர்

 
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 9 தனியார், அரசு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளிகளில் உள்ள மாணவ- மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
 
சென்னை கோவளம் பகுதியிலுள்ள ஸ்செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளிக்கு மர்ம ஆசாமி தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் மாணவர்கள் வெளியேற்றப் பட்டனர். மேலும் அந்த ஆசாமி தொலைபேசியில் பேசியபோது “உங்கள் பள்ளியிலும், சென்னையின் பத்து இடங்களிலும் வெடிகுண்டு வெடிக்கும்” என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
வெடிகுண்டு மிரட்டல் தகவல் அறிந்த தனியார் தொலைகாட்சி ஒன்று கோவளம் பகுதியில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் என்பதிற்க்கு பதில் அமைந்தகரை பகுதியில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாக தவறான செய்தியை வெளியிட்டதாக சொல்லப் படுகிறது.
மிரட்டல் சம்பவம் வைரலாக பரவியதால் பெற்றோர்கள் பதறி அடித்து கொன்டு பள்ளியை முற்றுகையிட்டனர். ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம், வெட்டுவாங்கேணி, நீலாங்கரையில் உள்ள பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
 
தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் குறித்து தகவல் அறிய பொது மக்கள் மற்றும் ஊடகதுறையினர் பலர் காவல் கட்டுப்பாட்டு அறையிலுள்ள அவசர தொலைபேசி எண் 100யை தொடர்புகொள்ள முயன்றபோது எவரும் தொலைபேசியை எடுக்கவில்லை எனும் குற்றசாட்டும் எழும்பியது குறிப்பிடதக்கது.