தனியார் கல்லூரிகளில் முதுநிலை பயிலும் அரசு டாக்டர்களுக்கு முழு ஊதியம் வழங்க கோரிக்கை

சென்னை:

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவக் கல்வி பயிலும் அரசு டாக்டர்களுக்கு முழு ஊதியமும், படிப்புக்கால விடுப்பும் வழங்கிட வேண்டும். தமிக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:

தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மருத்துவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மூலம் முதுநிலை மருத்துவம் பயின்று வருகிறார்கள்.
அவர்களுக்கு தமிழக அரசு ஊதியம் வழங்க மறுத்துவருகிறது.அவர்களது படிப்புக்கால விடுப்பை சர்வீஸ் காலமாக ஏற்கவும் மறுக்கிறது .இது வருத்தமளிக்கிறது.
முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் டிப்ளமோ படிப்பிற்கு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏறத்தாழ 1200 இடங்கள் உள்ளன.இவற்றில் 50 விழுக்காட்டு இடங்களை ,அதாவது 600 இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கி வருகிறோம்.

அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் அரசு மருத்துவர்களுக்கென்று தனி ஒதுக்கீடு இல்லை.
தமிழகத்திற்கான 50 விழுக்காடு இடங்களில் , அதாவது அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கியது போக மீதி உள்ள 600 இடங்களில் 50 விழுக்காடு இடங்கள் மட்டுமே ( 300 இடங்கள்) அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

மிகக் குறைவான இடங்கள் மட்டுமே அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதால், அரசு மருத்துவமனைகளில் போதிய முதுநிலை மருத்துவம் படித்த மருத்துவர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது.

இது அரசு மருத்துவமனைகளின் சேவைத் தரத்தை பாதிப்பதோடு, அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை எளிய மக்களையும் பாதிக்கிறது.பல அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பேராசிரியர்கள் பற்றாக்குறையும் ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டிற்கு முதுநிலை மருத்துவ இடங்களை வழங்கி வருகின்றன.அந்த அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மருத்துவர்களும் சேர்ந்து படிக்கிறார்கள்.இது அரசு மருத்துவமனைகளுக்கும். ஏழை எளிய மக்களுக்கும் நன்மை பயக்கும்.

எந்த அளவிற்கு கூடுதலான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அரசு மருத்துவமனைகளில் சேவை செய்கிறார்களோ அந்த அளவிற்கு பொதுமக்களுக்கு நல்லது.நன்மை பயக்கக்கூடியது.

ஆனால், இதை புரிந்து கொள்ளாமல் , தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் அரசு டாக்டர்களுக்கு உதவ மறுக்கிறது, தமிழக அரசு.இது வேதனையளிக்கிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் பயிலும் அரசு மருத்துவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவக் கல்வி பயிலும் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படுவது போல் ஊதியத்தையோ, விடுப்பையோ வழங்கிட தமிழக அரசு மறுத்து வருகிறது.இதனால், அந்த மருத்துவர்கள் பொருளாதார ரீதியா சிரமப்படுவதோடு, படிப்புக் காலத்தின் சர்வீஸையும் இழக்கின்றனர்.இதனால்,அவர்களது பணி மூப்பும் பாதிக்கப்படுகிறது.

எனவே, அரசு மருத்துவர்கள் எந்தக் கல்வி நிறுவனத்தில் படித்தாலும் அவர்களுக்கு முழுமையான ஊதியத்தையும், ஊதியத்துடன் கூடிய படிப்புக்கால விடுப்பையும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதுநிலை மருத்துவப் படிப்புக் காலத்தை சர்வீஸ் காலமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுடையே சர்வீஸ் எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவம் பயில்வதை ஊக்கப்படுத்தினால் தான், நமது புதிய மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க முடியும்.புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க முடியும்.அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் ஏழை நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்களின் மருத்துவ ஆலோசனையும்,சிகிச்சையும் இலவசமாக கிடைக்கும்.

அரசு மருத்துவர்களுக்கு முழு ஊதியத்துடன், படிப்புக்கால விடுப்புடன் முதுநிலை மருத்துவம் பயில வாய்ப்பளிப்பதை செலவீனமாக கருதாமல் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தப் போடும் முதலீடு எனக் கருதி அரசு செய்பட வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 விழுக்காட்டு எம்.பி.பி.எஸ் இடங்கள் அரசால் நிரப்பப்படுகிறது.இந்த மாணவர்கள் பயிற்சி பெற முதுநிலை மருத்துவம் பயிலும் அரசு மருத்துவர்களும் உதவுகிறார்கள்.

மத்திய அரசு மருத்துவர்கள்,மற்றும் இ.எஸ்.ஐ.சி மருத்துவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பயின்றாலும் முழு ஊதியத்துடன் படிப்புகால விடுப்பு வழங்கப்படுகிறது.அந்த உரிமையை தமிழக அரசு டாக்டர்களுக்கு தமிழக அரசு வழங்க மறுப்பது நியாயமல்ல.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் பயிலும், அரசு மருத்துவர்களின் நலன் கருதி , தமிழக அரசு இப்பிரச்சனை குறித்து காலம் தாழ்த்தாமல் உடனடி முடிவை எடுக்க வேண்டும்.

சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டிற்கு முதுநிலை மருத்துவ இடங்களை வழங்கும் போது, சில முக்கிய படிப்புகளுக்கான இடங்களை வழங்குவதில்லை. மருத்துவ சிகிச்சை சாராத இடங்களைத்தான் வழங்குகின்றன.இந்தக் குறைபாட்டையும் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குறிப்பேட்டிலும் உரிய மாற்றங்களை , இவை குறித்து செய்திட வேண்டும்.

அரசுக் குழு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
என்று, டாக்டர்.ஜி.ஆர்.இரவீந்திரநாத் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.