தைப் பொங்கல் திருநாள்: கருணாநிதி வாழ்த்து

சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி:

தைத் திங்கள் முதல் நாள். தமிழ்ப் புத்தாண்டு– பொங்கல் நன்னாள். தமிழர் இதயமும் இல்லமும் மகிழும் இன்பத் திருநாள்.

தி.மு.க. ஆட்சியிலே இருந்த போது, உழுது பயன்கண்டு அனைவரும் வயிறார உண்ண–உடுத்த வகை செய்திடும் உழவர் பெருமக்களின் துயர் தீர 7000 கோடி ரூபாய் கூட்டுறவு விவசாய கடன்களைத் தீர்த்து; வட்டியிலாப் பயிர்க்கடன் தந்து; விவசாயப் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் இலவசமாக வழங்கி; நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவச நிலம் வழங்கி; நெல்லுக்கும் கரும்புக்கும் விலைகளை உயர்த்தித் தந்து; தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு நிலுவையின்றி கரும்புக்கான விலைகளை வழங்கச் செய்து ஆண்டுதோறும் தமிழகம் முழுவதிலும் நியாய விலைக் கடைகள் மூலம் அனைவருக்கும் இலவச வேட்டிசேலைகள் வழங்கி; சர்க்கரைப் பொங்கல் தயாரித்திடத் தேவையான பொருள்கள் கொண்ட பைகளை நல்கி எல்லோரையும் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்திடச் செய்தோம்.

கடந்த 5 ஆண்டுகளாக, காவிரியில் ஜூன் 12இல் மேட்டூர் அணை திறக்கப்படாமல் விவசாயம் பாழ்பட்டு–வேதனையில் வாடிய விவசாயிகளின் விழிநீர் துடைத்திட வக்கில்லாமல்; பெருமழையின்போது செம்பரம்பாக்கம் ஏரி நீரை உரிய காலத்தில் திறக்காமல், ஒரே நேரத்தில்–அதிலும், நள்ளிரவு நேரத்தில் முன்னெச்சரிக்கை எதுவுமின்றி 30 ஆயிரம் கனஅடிகளுக்கு மேலாகத் திறந்து விட்டு; ஏராளமான உயிர்ப் பலிகள் நிகழ்ந்திட–வீடுகள், தொழிற்கூடங்கள், கார் முதலிய வாகனங்கள் எல்லாம் மூழ்கி வீணாகிட– காரணமான ஓர் அரசு– இன்றைய அரசு.

சட்டமன்றத் தேர்தலின் போது, கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, தேர்தலில் வென்ற பின் நடைபெற்ற பதவி ஏற்பு விழா மேடையிலேயே கையெழுத்திட்டு ஆணைகள் பிறப்பித்து வரலாறு படைத்தவர்கள் நாம்.

ஆனால், வாக்குறுதிகள் பலவற்றைத் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தாலும், அவற்றை நிறைவேற்றிட அக்கறை காட்டாத ஓர் அரசு– சட்டமன்றத்தில் ஒவ்வொரு நாளும் 110.

ஒவ்வொரு 110–லும் பல கோடி ரூபாய் மதிப்புடைய ஆரவார அறிவிப்புகள். அறிவித்த எதனையும் நிறைவேற்றாத ஓர் அரசு, இன்றைய அரசு.

“சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம்” என்ற கழக ஆட்சியில், தொழில் வளர்ந்தால் வேலை வாய்ப்புகள் பெருகும். பொருளாதாரம் உயரும். தமிழனின் வாழ்க்கைத் தரம் சிறக்கும் என திட்டமிட்டு– ஆட்சி அமையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழகம் முழுவதிலும் தொழில்களை வளர்த்ததால் தொழில் வளர்ச்சியில் 1967–76 கழக ஆட்சியில் இந்தியாவில் தமிழகம் மூன்றாம் இடம். 1977–88 அ.தி.மு.க. ஆட்சியில் 10ஆம் இடம். 1989–91இல் கழக ஆட்சியில் முதல் இடம். 199196 அ.தி.மு.க. ஆட்சியில் 6ஆம் இடம். 1996–2001 கழக ஆட்சியில் முதல் இடம். 2001–2006 அ.தி.மு.க ஆட்சியில் 5ஆம் இடம். 2006–2011 கழக ஆட்சியில் முதல் இடம். 2011–2016 அ.தி.மு.க. ஆட்சியில், இன்று– தொழில் வளர்ச்சியில் தமிழகம் படுபாதாளத்தில். அதாவது இந்தியாவிலேயே கடைசி இடத்தில்.

மீண்டும் தமிழினம் எழுச்சி பெற 2016 சட்டமன்றத் தேர்தல் களத்தில், “பதர்களைத் தூற்றி நெல்மணிகளைக் குவித்து” வெற்றிகள் ஈட்டிட; இந்தத் தமிழ்ப் புத்தாண்டு– பொங்கல் திருநாளில் வாழ்த்துகள் கூறி, கழகக் கண்மணிகளே! கணநேரமும் வீணாக்காமல் களத்தில் உழைத்திடுவீர் என உங்கள் அண்ணன் வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.