மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றத்தை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை வருவாய் மாவட்டம், கல்வி மாவட்டம், வட்டாரப்பகுதி என 3 பிரிவுகளாக இயங்கிவருகின்றன. அதன்படி நிர்வாக வசதிக்காக 38 வருவாய் மாவட்டங்கள் 120 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன் தலைமை அதிகாரியாக மாவட்டக்கல்வி அதிகாரிகள் செயல்படுவார்கள். இதற்கிடையே அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
அதேபோல், மாவட்டக்கல்வி அதிகாரிகளுக்கும் தற்போது முதன்முறையாக பணி மூப்பு அடிப்படையில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அதிகாரி மற்றும் அதையொத்த அலுவலர்களுக்கு அக்.12ம் தேதி மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இந்த கலந்தாய்வு பணிமூப்பின் அடிப்படையில் நடத்தப்படும். கலந்தாய்வு நாளில் அனைத்து பணியிடங்களும் காலிப் பணியிடமாக கருதப்பட்டு, தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பணியேற்றுள்ள பணிமூப்பு அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.