சென்னை:
தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகள் மீது எவ்வித கட்டுமானங்களும் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடை வரும் பிப்.9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் எவ்வித கட்டுமானமும் கட்டப்படவில்லை என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நல சங்கத் தலைவர் கே.சண்முகசுந்தரம் தாக்கல் செய்த மனு:
ஈரோடு மாவட்டம், கதிரம்பட்டி கிராமத்தில் இருக்கும் பெரும் பள்ள ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கடந்த 2009-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி ஈரோடு வட்டாட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீர் நிலைகளைப் பாதுக்காக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஈரோடு மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோர் பெரும்பள்ள ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, ஓடையை மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் கடமையைச் செய்ய அவர்கள் தவறிவிட்டனர். எனவே, பெரும்பள்ள ஓடையை தூர்வாரி மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிகோத்ரி, பி.தேவதாஸ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குளம் போன்ற நீர் நிலைகளில் எவ்வித கட்டுமானமும் கட்டப்படவில்லை என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இவ்வழக்கு விசாரணையை பிப்.9-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.



