
ஸ்டாலின் பேசியதாக இன்றைய தினமணியிலிருந்து:
//திருவாரூருக்கு மட்டும் தேர்தல்.ஏதோ சூட்சமம் உள்ளது//
வழக்குகளோ, நீதிமன்றத் தடைகளோ இல்லையென்றால் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதி ஆறு மாதத்திற்குள் தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பது சட்டம். கருணாநிதி காலமானது ஆகஸ்ட் 7 .பிப்ரவரியில் ஆறுமாத காலம் முடிகிறது. ஜனவரி இறுதியில் தேர்தல். இதில் என்ன சூட்சமம் இருக்க முடியும்?
//திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு முன்வராமல் திருவாரூருக்கு மட்டும் அவசரப்பட்டு நடத்துவதற்கு என்ன காரணம்?//
திருப்பங்குன்றத்தில் 2016 தேர்தலில் போட்டியிட்ட திமுக வேடபாளர் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக வேட்பாளரின் வெற்றி செல்லாது என்றும் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இப்போது தேர்தல் நடத்தி அதில் வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நீதிமன்றம் 2016ல் போட்டிபிட்ட திமுக வேட்பாளின் கோரிக்கையை ஏற்று அவரை வெற்றி பெற்றவராக அறிவித்தால் என்ன ஆகும்? ஒரு தொகுதிக்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க முடியுமா? அங்கு தேர்தல் நடக்காததற்கு திமுக் வேட்பாளரின் வழக்குதான் காரணம். அதை அவர் விலக்கிக் கொண்டிருந்தால் நடந்திருக்கலாம்.
//தேர்தல் ஆணையம் மத்திய அரசு மாநில அரசு எல்லாமே ஒன்று சேர்ந்து ஒரு கூட்டு சதியாக ஏற்கனவே 18 சட்டப் பேரவை உறுப்பினர்களுடைய பதவிகளை நீக்கியுள்ளன//
18 பேரை தகுதி நீக்கம் செய்தவர் சட்டப் பேரவைத் தலைவர். அது சரி என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். இதில் மத்திய அரசு எங்கு வந்தது? தேர்தல் ஆணையம் எங்கு வந்தது?
சட்டப் பேரவை தலைவரின் தீர்ப்பை விமர்சிப்பது உரிமை மீறல். நீதிமன்ற தீர்ப்பிற்கு உள் நோக்கம் கற்பிப்பது நீதிமன்ற அவமதிப்பு. அவற்றைப் பற்றி நமக்கு அக்கறை இல்லை. அதில் அக்கறையுள்ள வழக்கறிஞர்கள் கவனம் செலுத்தக் கூடும். நம் கவலை எல்லாம் ஒரு விவரம் அறியாத ஆரம்ப நிலை பேச்சாளர் வேண்டுமானால் இப்படிப் பேசலாம். அரசியலில் அனுபவம் வாய்ந்த ஸ்டாலின் பேசலாமா? வியப்பாக இருக்கிறது.
- பத்திரிகையாளர் மாலன்