இந்திய குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கி கைதான ஈரான் நாட்டு காதல் ஜோடி !

சற்றுமுன்
 
ஈரான் நாட்டில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்த காதல் ஜோடியை இந்திய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து கோவா வழியாக வந்த விமானத்தில், ஈரான் நாட்டை சேர்ந்த முகமது ரிஷா என்பவரும், ஆஸ்மி மன்சூ என்ற பெண்ணும் உள்நாட்டு பயணிகளாக சென்னைக்கு வந்தனர்.
 
 
குடியரசு தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் வழக்கத்தைவிடசோதனைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.இந்நிலையில், பன்னாட்டு விமான நிலையத்துக்கு உள்நாட்டு பயணிகளாக வந்த ஈரான் நாட்டை சேர்ந்த காதல் ஜோடிகளின் நடத்தையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
 
 
காதல் ஜோடிகளின் விமான பயணச்சீட்டு, மற்றும் “போர்டிங் பாசை” குடியுரிமை அதிகாரிகள் கேட்ட போது அவர்களிடம் டிக்கெட் மட்டும் இருந்தது. விமானத்தில் வரும் போது “போர்டிங் பாசை” கீழே போட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
 
 
இதையடுத்து 2 பேரின் பாஸ்போர்ட்டையும் அதிகாரிகள் சோதனை செய்தபோது ஈரான் நாட்டு பாஸ்போர்ட்டு மற்றும் இஸ்ரேல் நாட்டு பாஸ்போர்ட்டு இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
 
 
அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் காதல் ஜோடி என்றும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்ததாகவும் கணவன் மனைவியாக சுற்றிய தாங்கள் சென்னையில் இருந்து லண்டன் செல்ல உள்ளதாகவும் கூறினர்.
 
 
ஆனால் அவர்கள் இருவரும் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த காதல் ஜோடி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.காவல்நிலையத்தினர் போலி பாஸ்போர்ட்டு வழக்குப் பதிவு செய்து ஈரான் நாட்டை சேர்ந்த காதல் ஜோடி இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.