
ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும் தொழிலதிபற் விசாகனுக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்தத் திருமண நிகழ்ச்சியில் ரஜினியின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மு.கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

திருமணத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆகியோரை ரஜினிகாந்த் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கமல்ஹாசன், வைகோ, திருநாவுக்கரசர், ரஜினியின் நண்பரான தமிழருவி மணியன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இந்தத் திருமண விழாவில் பங்கேற்றனர்.
ரஜினியின் இன்னொரு மாப்பிள்ளை தனுஷ், அவரது தந்தை கஸ்தூரி ராஜா, சகோதரர் செல்வராகவன், ரஜினியின் உறவினரான இசை அமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும், இன்னும் திரையுலகப் பிரபலங்களும் நடிகர்கள், நடிகையரும் இந்த விழாவில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.
