புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளச் செல்லும் தமிழக அதிகாரிகளைத் தடுத்து இடையூறு விளைவிக்காமல் உள்ளே அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப் பட்ட இடைக்கால மனுவில் … முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதன் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளச் செல்லும் தமிழக அதிகாரிகளை கேரள போலீஸார் தொடர்ந்து தடுத்து வருகின்றனர். வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, தமிழக அரசின் அதிகாரிகள், வாகனங்கள் அப்பகுதிக்குச் செல்ல எந்த விதத் தடையோ, இடையூறோ ஏற்படுத்தக் கூடாது என்று கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் இருந்து முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லும் வழியில் வனப் பகுதியில் உள்ள “முல்லைப் பெரியாறு அணை-வல்லக்கடவு’ சாலையை சீரமைக்குமாறு உச்ச நீதிமன்றம் 2012, ஜூலை 23-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், இதுவரை கேரள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உடனே அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் – என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தனது தீர்ப்பை உறுதிப் படுத்திய பின்னர், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கையை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழு முன்னிலையில் தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் செயல்படுத்தச் சென்றனர். அப்போது கேரள அரசு அவர்களை அனுமதிக்கவில்லை. இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவுக்கு மத்திய அரசும், கேரள அரசும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழக அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு: கேரள இடையூறைத் தடுக்குமாறு தமிழக அரசு முறையீடு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari