பதவி உயர்வுக்கு லஞ்சம்: ரூ. 20 ஆயிரம் பெற்ற வனத்துறை அதிகாரி கைது

bribery-arrestசென்னை: சென்னையில் பதவி உயர்வுக்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். விருதுநகரைச் சேர்ந்த வனத்துறை ஊழியர் நெப்போலியன் (54). இவருக்கு பணி மூப்பு அடிப்படையில் வனவர் பதவிக்கு பதவி உயர்வு அளிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் பதவி உயர்வு அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், நெப்போலியன், சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் உள்ள தலைமை வனத்துறை அலுவலர் அலுவலத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தார் அங்கு பதவி உயர்வு தொடர்பாக சட்டத்துறை அலுவலர் மருதப்பனை (57) சந்தித்துள்ளார். அப்போது மருதப்பன், பதவி உயர்வு அளிக்க ரூ. 1.25 லட்சம் லஞ்சம் தரும்படி நெப்போலியனிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நெப்போலியன், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், நெப்போலியனிடம் வேதிப் பொருள் தடவிய ரூ. 20 ஆயிரம் பணத்தைக் கொடுத்து, அதை முன்பணமாக வழங்கும்படி கூறியுள்ளனர்.. இதையடுத்து நெப்போலியன், வெள்ளிக்கிழமை இரவு மருதப்பனிடம் அவரது அலுவலகத்தில் வைத்து ரூ. 20 ஆயிரத்தைக் கொடுக்க, அதை மருதப்பன் பெற்றபோது, போலீஸார் அவரைக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் மருதப்பன் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.