போக்குவரத்துக் கழக ஊழியர்க்கு ஊதிய உயர்வு தொடர்பாக இன்று இறுதி அறிவிப்பு

tnstcசென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக திங்கள்கிழமை இன்று நடைபெற உள்ள 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஓய்வூதியம், ஊதிய உயர்வு தொடர்பாக அரசின் இறுதி முடிவை அறிவிக்கப் போவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முடிவை போக்குவரத்துக் கழகத் தொழிற் சங்கங்கள் ஏற்றுக்கொண்டால், 6-ஆம் கட்டத்தோடு 12-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிவடைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 12-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.10) போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம், 50 சதவீத ஊதிய உயர்வு கோரிக்கைகளை தொழிற்சங்க பிரதிநிதிகள் மீண்டும் வலியுறுத்தினர். அதில் ஓய்வூதியத் திட்டம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதுதொடர்பாக அரசுடன் மீண்டும் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. எனவே, ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு தொடர்பாக அடுத்த இரு தினங்களில் அரசுடன் ஆலோசனை நடத்தி, அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தையில் அரசின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சரும், அரசு அமைத்த 12-ஆவது ஊதிய ஒப்பந்தக் குழுவினரும் அறிவித்தனர். இந்நிலையில், ஊதிய ஒப்பந்தத்துக்கான 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்க உள்ளது. இதில் அறிவிக்கப்படும் அரசின் இறுதி முடிவை தொழிற்சங்க நிர்வாகிகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டால், பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து 12-ஆவது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.