ஆண்டிப்பட்டியில் பணம் பறிமுதல் தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், ஆண்டிப்பட்டி அ . ம . மு . க அலுவலகத்தில் ரூ . 1.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், அமமுக அலுவலகத்தில் காலை 5.30 மணி வரை 9 மணி நேரம் சோதனை நடைபெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளது. 94 சிறு பாக்கெட்டுகளில் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ரூ . 300 என்று எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு 8.30 மணியளவில் சோதனை நடத்தினர். விடிய விடிய இந்த சோதனை நடைபெற்றது. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் வருமான வரித்துறை அதிகாரிகளை தடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
விடிய விடிய வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை இன்று அதிகாலை 5.30 மணியளவில் நிறைவு பெற்றது. இந்த சோதனையில், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




