சென்னை:
துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார் தெரிவித்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக ஆளுநர் கே.ரோசய்யா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும், பணம் பெற்றுக்கொண்டு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர்’ என்றும் ஏப்ரல் 30-ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த நேர்காணலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அவரது குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் ஆளுநரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் அவதூறான கருத்துகளை இளங்கோவன் கூறியிருப்பதாகவும் ஆளுநர் சார்பில் சென்னை மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் குற்றவியல் அவதூறு மனுவை புதன்கிழமை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.




