தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி 104 இடங்களில் போட்டியிட்டு படு மோசமான படுதோல்வியை தழுவியுள்ளது . இதையடுத்து தேமுதிக கட்சியின் தேர்தல் அங்கீகாரம் ரத்தாகி முரசு சின்னத்தையும் அந்தகட்சி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜயகாந்தை தலைவராக கொண்ட தேமுதிக 2005ம் ஆண்டு அவரால் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 2006 சட்டமன்ற தேர்தலை சந்தித்த விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டார். விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். அவரது கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள் தோல்வி அடைந்தாலும், மொத்தம் 8.4 சதவீதம் வாக்குகள் பெற்று அனைத்து கட்சியினர் உட்பட அனைவரையுரையும் திரும்பி பார்க்க வைத்தார் விஜயகாந்த்.
மேலும் கடந்த 2009ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட தேமுதிக 10 சதவீதம் வாக்குகள் பெற்று வாக்கு வங்கியை கூட்டி கொண்டது.
அதனால் கடந்த 2011ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மூன்றாம் இடத்தில் பேசக்கூடிய அளவுக்கு பெரிய கட்சியாக மாறியது . மக்களுடன் தான் கூட்டணி, என கட்சி ஆரம்பிக்கும் போது,பேசிய விஜயகாந்த். திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று கூறி திடீரென 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார்.
இருந்தபோதிலும் அந்த தேர்தலில் தேமுதிக வாக்கு வங்கி 3 சதவீதம் குறைந்தது. அதன்படி 2011ல் தேமுதிக 7.8 சதவீதம் வாக்கு கிடைத்தது . அதன் பின்னர் கடந்த 2014ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக அந்த தேர்தலில் மேலும் சரிவை சந்தித்து வெறும் 5.19 சதவீதம் வாக்குகள் மட்டுமே கிடைத்தது .
கடந்த காலங்களில் நடைபெற்ற மூன்று தேர்தல்களில் கணிசமான ஓட்டுகளை பெற்று, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தையும் தேமுதிக முரசு சின்னத்தையும் பெற்றது. இந்த நிலையில் விஜயகாந்த் யாரும் எதிர்பாராத வகையில் தொண்ண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் எந்த கருத்தையும் கேட்காமல் தற்போது நடந்து முடிந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்தார்.
விஜயகாந்த் எடுத்த அந்த தவறான முடிவால் தான் தேர்தல் முடிவில் தேமுதிக எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத அக்கட்சி வெறும் 2.4 சதவீதம் வாக்குகள் மட்டும் பெற்று விஜயகாந்த் டெபாசிட்டையும் இழந்தார் என தேமுதிக தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.
தேமுதிக தேர்தல் அங்கீகார ரத்து குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுவதாவது:
தேசிய அளவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 6 கட்சிகள் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. தமிழகத்தை பொருத்தமட்டில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய 3 கட்சிகள் மாநில அளவில் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் ஆகும்.
தேர்தல் தொடர்பாக கூட்டங்கள் நடைபெற்றால், அங்கீகாரம் பெற்ற 9 கட்சி பிரதிநிதிகளையே அழைத்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த முடியும் .
தேர்தல் ஆணையத்தால் ஒரு கட்சி அங்கீகாரம் பெற வேண்டுமானால், நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு 25 தொகுதிகளில் ஒரு தொகுதியில் வெற்றி பெற வேண்டும். சட்டமன்ற தேர்தல் என்றால், 30 தொகுதிகளில் ஒரு தொகுதி வெற்றி பெற வேண்டும். அதன்படி, தமிழகத்தில் ஒரு கட்சி அங்கீகாரம் பெற குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, தமிழகத்தில் ஒரு கட்சி சார்பில் எத்தனை தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்களோ, அவர்கள் பெற்ற மொத்த வாக்குகளையும் கூட்டி, தமிழகத்தில் மொத்தமாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதத்தில் 6 சதவீதத்திற்கும் அதிகமாக அக்கட்சி வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று பெற்றிருந்தால் மட்டுமே அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கும்.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தமிழகத்தில் 104 தொகுதிகளில் போட்டியிட்டு மொத்தம் 10,34,384 வாக்குகளே வாங்கி 2.4 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. அதனால், தமிழகத்தில் தேமுதிகவுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சி அஸ்தஸ்து தானாக ரத்தாகி விடும். தேமுதிகவுக்கு தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட முடியாது.மேலும் தேமுதிகவுக்கு நிரந்தரமாக வழங்கியுள்ள முரசு சின்னத்தையும் அந்த கட்சி இழந்து விடும்.
இனி தேமுதிக கட்சி பயன்படுத்தி வரும் முரசு சின்னத்தை அவர்கள் ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுக் கொண்டு வேண்டுமெனில் தேர்தலில் முரசு சின்னத்தில் போட்டியிடலாம். ஆனால் தேமுதிக போட்டியிடாத தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் முரசு சின்னம் கேட்டாலும் அவருக்கும் முரசு சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும் என்று அவர் தெரிவித்தார் .



