+2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை தொலைக்காட்சி ரூ 25 ஆயிரம் தருவதாக கூறி மாணவியை கடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
அருப்புக்கோட்டை திருநகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி சாந்தி. எல்.ஐ.சி.யில் காவலாளியாக வேலைபார்த்து வரும் சண்முகவேலின் மகள் விஜயலட்சுமி(வயது 18). அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த இவர் பொதுத் தேர்வில் 1,161 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தொழிற் பாடப்பிரிவில் இவருக்கு மாநில அளவில் 3-ம் இடம் கிடைத்துள்ளது.

கடந்த 18-ந்தேதி ஒரு டிப்டாப் ஆசாமி சண்முகவேலின் அலுவலகத்திற்கு சென்று தான் ஒரு அரசு பொதிகை சேனல் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் என அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களது மகளுக்கு தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் மூலமாக ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதை நம்பிய சண்முகவேல் தனது மனைவி சாந்தி, மகள் விஜயலட்சுமியுடன் விருதுநகர் வந்தார். அதே பேருந்தில் விருதுநகர் வந்த அந்த ஆசாமி விருதுநகர் கருமாதி மடத்தில் சண்முகவேல், அவரது மனைவி சாந்தி, மகள் விஜயலட்சுமியுடன் இறங்கினார். சண்முக வேலையும், அவரது மனைவி சாந்தியையும் நூதன முறையில் ஏமாற்றி விட்டு மாணவி விஜயலட்சுமியை அந்த ஆசாமி கடத்திச் சென்றார். இதுபற்றி சண்முகவேல் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
காவல் நிலையத்திர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மாணவியை கடத்தியவர் ராஜபாளையத்தை சேர்ந்த கண்ணன்(35) என தெரியவந்தது.
கண்ணன் மீது ஏற்கனவே விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கு, ராஜபாளையத்தில் நண்பரின் குடும்பத்தினரை கடத்திய வழக்கு உள்பட 51 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு குற்ற வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரை காவல் துறையினர் பாளையங்கோட்டையில் ஒரு வழக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பும் வழியில் போலீசாரின் பிடியில் இருந்து கண்ணன் தப்பியோடி விட்டார். அவரை காவல் துறையினர் தேடி வந்தனர்.இந்தநிலையில் கண்ணன், விஜயலட்சுமியை கடத்திச் சென்றுள்ளார்.
மாணவியை கடத்தியது கண்ணன்தான் என உறுதி செய்த காவல் துறையினர், அவரது செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அந்த செல்போனை மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையில் பழுதுபார்க்க கொடுத்திருப்பது தெரிய வந்தது. மீண்டும் செல்போனை வாங்க வரும்போது கண்ணனை பிடிக்க திட்டமிட்ட காவல் துறையினர் முயற்சிக்கு பலன் கிடைத்தது.
செல்போனை வாங்க வந்த கண்ணனை காவல் துறையினர் மடக்கி பிடித்து விசாரித்ததில், மாணவி விஜயலட்சுமி அவனுடன் இருப்பது தெரியவந்தது. மாணவி விஜயலட்சுமியை மீட்ட காவல் துறையினர் இருவரையும் விசாரணைக்காக விருதுநகர் அழைத்து வந்தனர். மாணவி விஜயலட்சுமியிடமும், அவரை கடத்திய கண்ணனிடமும் காவல் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கண்ணன், பணம் பறிக்கும் நோக்கத்தில் மாணவியை கடத்தி திருச்செந்தூருக்கு சென்றதாகவும், பின்னர் இரவு அங்குள்ள ஒரு சத்திரத்தில் தங்கிவிட்டு காலையில் கார் மூலம் மாணவியுடன் மதுரை வந்த கண்ணன், கார் டிரைவரிடம் செல்போனை திருடியதும், அதனை ரிப்பேர் பார்க்க கொடுத்தபோது தான் போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. மாணவியை கடத்திய இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.



