குடியிருப்பை காத்துக்கொள்ள முஸ்லீமாக மதம் மாற்றியுள்ளது தேசத்துக்கு அவமானம்: ராம.கோபாலன்

சென்னை:
இந்துக்கள் தங்கள் குடியிருப்பை பாதுகாத்துகொள்ள  முஸ்லீமாக மதமாற்றியுள்ளது தேசத்திற்கு அவமானம் என்று கூறியுள்ளார் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் வால்மீகி சமுதாயத்தினர் தங்களது குடியிருப்புகளை காத்துக்கொள்ள முஸ்லீமாக மதமாற தூண்டிய சமஜ்வாதி கட்சியின் மாநில அமைச்சர் அசம்கான் செயல் கண்டிக்கத்தக்கது.
ஔரங்கசீப் காலத்தில்  தனது உடலை இரண்டாக பிளந்தபோதும் மதமாற மறுத்த தன்மான இந்துக்கள், இன்று தாங்கள் வாழ்ந்து வந்த வீடுகளை காத்துக்கொள்ள மதமாறியிருப்பதாக கூறியிருப்பது வேதனையானது. இதற்கு மாநில அரசு துணைபோயுள்ளது கொடுமையிலும் கொடுமையானது. அந்த மக்களின் தன்மானத்திற்கு துணை நிற்க வேண்டிய அரசாங்கம், அவர்களின் துயரத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள துணிந்திருப்பது கேடுகெட்ட செயல்.
சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லீம்கள் சிலர் இந்துக்களாக தாய்மதம் திரும்பியதற்கு வரிந்துகட்டி எதிர்ப்பு தெரிவித்த போலி மதச்சார்பின்மைவாதிகள் வால்மீகி இனம் எனும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிராதரவான நிலையை பயன்படுத்தி முஸ்லீமாக மதமாற்றப்பட்டதற்கு வாய் திறக்கவில்லையே ஏன்? மதமாற்றம் தவறு என நினைத்தால், இதனையும் கண்டித்திருக்க வேண்டுமல்லவா?
இது சட்டத்தின் மீதும், அரசு நிர்வாகத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கும் செயல். கூட்டமாக வந்துவிட்டார்கள் என்பதற்காக சட்டம் வளைந்துகொடுக்கும் என்பது வன்முறை கலாச்சாரத்தை ஊக்கவிக்கும் என்பதை காவல்துறை, நீதித்துறை, அரசுத் துறை உணர்வது இல்லை.
இதுபோன்ற செயல்கள் சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும், மதமோதலுக்கு வழிவகுக்கும். சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்துள்ள முஸ்லீம்களை அப்புறப்படுத்துவதற்கு பதில், குறைந்த எண்ணிக்கையில் இருந்த வால்மீகி மக்களை நிர்கதியாக்கி, முஸ்லீமாக மாறிவிட்டால் பாதுகாப்பாக இருப்பீர்கள் என பேரம் பேசி படிய வைத்திருப்பது மாநில அரசின் பொறுப்பற்றத்தனத்தை எடுத்துக்காட்டுகிறது. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
1980இல் தமிழகத்தில் இராமாநாதபுர மாவட்டத்தில் முஸ்லீம் மதமாற்றம் நடந்த சதி வெளி உலகிற்கு தெரிந்தபோது, அது பற்றி அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் வாஜ்பாய் தலைமையில் ஒரு எம்.பி. குழுவை அனுப்பி விசாரணை நடத்திட உத்திரவிட்டார். இதனால் மக்கள் மத்தியில் நம்பிக்கை வலுப்பெற்றது, இந்து முன்னணி எடுத்த சீரிய முயற்சியால் துறவியர் பெருமக்கள் பாதயாத்திரை மேற்கொண்டு இந்துக்களின் சுய கௌரவத்தை ஏற்படுத்தி மதமாற்றத்தை தடுத்து நிறுத்தினர்.
அதுபோல் இது குறித்து மத்திய அரசு உடனடியாக உரிய கவனம் கொடுத்து மத்திய அரசின் தூதுக்குழுவை அங்கு அனுப்ப வேண்டும். அப்படி இந்துக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் மாநில அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும், உரிய நிவாரணம் கிடைக்க வழிகாண வேண்டும்.
மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தி, ஆதி மக்களாகிய வால்மீகி மக்களின் சுயகௌரவம் காக்கப்பட்டு அவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.