மத்திய அரசுக்கு எதிரான கருத்துக் கட்டமைப்பை… ஊடகம் எப்படி மேற்கொள்கிறது? இப்படித்தான்!

Published:

media - 2026

பேனை பெருமாள் ஆக்குவது எப்படி?-2

விழுப்புரம் எம்.பி. திரு.து.ரவிகுமார் உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்களைத் தமிழில் தர வேண்டும் எனக் கோரி இன்றோ, நேற்றோ மக்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்.தீர்ப்புக்கள் தமிழில் வர வேண்டும் என்ற விருப்பம் நியாயமானதும், வரவேற்கத்தக்கதுமாகும்.

ஆனால் அதற்கு கோரிக்கை வைக்க வேண்டிய இடம் உச்ச நீதி மன்றம். ஏனெனில் இந்த விஷயங்களை நீதிபதிகள் குழுதான் நிதி நிலைமைக்கு ஏற்பத் தீர்மானிக்கிறது. அதுவும் தவிர நீதி மன்றத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் அரசு/நாடாளுமன்றம் தலையிட முடியாது/ கூடாது.

பிரியாணி வேண்டுகிறவர்கள் தலப்பாக்கட்டிக்குத்தான் போக வேண்டும். சரவண பவனுக்குப் போனால் வேறு கடைக்கு வழிகாட்டுவார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்த நோட்டீஸ் விஷயம் உடனே பெரிதாக “வெடித்து” விட்டதாம். புதிய தலைமுறை நிரஞ்சன் சொல்கிறார். ஆனால் நம் தேசிய/ஆங்கிலச் சானல்கள் செவித்திறன் குறைந்தவர்கள். இந்த வெடிச் சத்தம் அவர்களை எட்டவில்லை. 

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் காதுகளை எட்டி விட்டதாம்..எப்படிச் சொல்கிறீர்கள், நீதிபதிகள் யாராவது அறிக்கை கொடுத்திருக்கிறாரா? அதிகாரிகள் தாங்களாக முன் வந்து எதிர்வினை யாற்றியிருக் கிறார்களா என்று நீங்கள் என்னைக் கேட்கக் கூடாது. நிரஞ்சன் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும்

செய்தி பெரிதாக வெடித்து விட்டதால் புதிய தலைமுறைச் செய்தியாளர் உச்ச நீதி மன்றத்தின் மூத்த அதிகாரியைச் சந்திக்கிறார்.

பெயரா? அதெல்லாம் கேட்கக் கூடாது. செய்தியாளர் அதைக் குறிப்பிடவில்லை.

அவர் பேட்டி ஏதும் உண்டா? ம்ஹூம்.

ஆனால் இந்த அனாமதேய அதிகாரி, நிலையை விளக்குகிறார். நீதிபதிகள் குழு முடிவு செய்யும் என்கிறார். பணம் இல்லை என்பதால் இப்போது இயலவில்லை. அடுத்த முறை பார்ப்போம் என்கிறார்.

உடனே பிரேக்கிங் நியூஸ். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கள் தமிழில் வெளியாகக் கூடும் என்பதைப் போல.

நிரஞ்சன் இதைப் பற்றி சொன்ன வார்தைகளில் ஒன்று “இந்த விஷயம் இன்னும் பெரிதானால்” இதுதான் கொம்பு சீவி விடுவது.

ஒரு கருத்து எப்படிக் கட்டமைக்கப்படுகிறது என்று பாருங்கள்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

மத்திய அரசு முடிவெடுக்க முடியாத விஷயம் ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் அளிக்கப்படக்கூடாது என்று மத்திய அரசின் ஆணையோ, சட்டமோ, கொள்கை முடிவோ ஏதும் இல்லை..

ஆனால் அரசால் தமிழ் ‘வஞ்சிக்கப்படுவது போல்’ .sublimical ஆக (மறைமுகமாக) அரசு எதிர் நிலையில் இருப்பது போன்ற ஒரு தோற்றம் கட்டமைக்கப்படுகிறது

உடனே அது “வெடிக்கிறது”. உண்மையில் என்ன நடந்திருக்கும் என்றால் நோட்டீஸ் கொடுத்ததின் follow up ஆக ஏதாவது செய்தி கிடைக்குமா?

செய்தியாளர் தானேயோ, அல்லது தொலைக்காட்சியின் உந்துதலாலோ அல்லது அரசியல்வாதிகளின் வேண்டுகோளின்படியோ உச்ச நீதிமன்றம் சென்றிருப்பார். அங்கு அதிகாரிகளின் வாயைக் கிளறியிருப்பார். அவர்கள் உள்ள நிலையை எடுத்துச்.சொல்லியிருப்பார்கள்.

அரசு அதிகாரிகள் எப்போதும் சொல்வது போல, ஆகட்டும் இப்போது பணமில்லை, அடுத்த முறை பார்க்கலாம் என்று சொல்லியிருப்பார்கள். உடனே வெற்றி கிடைத்துவிட்டதைப் போல பிரேக்கிங் நியூஸ். கூடவே விஷயம் பெரிதாக வேண்டும் என்ற விருப்பமும் பரிமாறப்படும்.

மொழி அரசியல் இப்படித்தான் கட்டமைக்கப்படுகிறது. இதில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கமில்லை என்று சொல்லிவிட முடியாது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

– மாலன் நாராயணன் (மூத்த பத்திரிகையாளர்)

Related articles

Recent articles

spot_img