சிறுகதையின் தேவை -கல்கியின் விளக்கம்.
கும்பகோணத்து பாப்பான் குட்டையில் விழுந்தான்
வைஷ்ணவ பரிபாஷை என்று ஒருவிஷயம் உண்டு. அதில் எல்லாவற்றையும் நீட்டி முழக்கி சொல்லுவார்கள்.
காஞ்சீபுரத்தைச் சேர்ந்த உபயவேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் தனது வேலையாள் குப்பனைக் கூப்பிட்டு, “அடே குப்பா நீ உடனேயே ஸ்ரீபெரும்புதூர் திருவேங்கடாச்சாரி ஸ்வாமி வீட்டுக்கு போய் ‘திருக்குடந்தை நாராயணஸ்வாமி ஐயங்கார் திருக்கோவில் ஆராதனைக்கு போவதற்காக திருக்குளத்திற்கு சென்றபோது திருப்பாசி வழுக்கி விழுந்தார்’ என்று கூறு” என்றார். குப்பனும் ஆகட்டும் சாமி என முண்டாசைத் தலையில் கட்டிக் கொண்டு கிளம்ப ஆயத்தமானான்.
தான் கூறிய வைஷ்ணவ பரிபாஷையை குப்பன் புரிந்து கொண்டானோ இல்லையோ என மயங்கிய உபயவேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் “என்ன குப்பா நான் சொன்னது விளங்கியதா? என்ன சொல்வாய் அங்கே போய்?” என்று கேட்டார். அதற்கு குப்பன் “தெரியாதா சாமி, கும்பகோணத்து பாப்பான் குட்டையில் விழுந்தான்” என்று சொல்வேன் என்றான்.
இதைத்தான் கல்கி சிலாகித்தார். ஒரே நிகழ்ச்சியை ஐயங்கார் சுவாமிகளும் சொன்னார். குப்பனும் சொன்னான். பளீரென நாலே வார்த்தைகளில் கூறிவிட்டான் பாருங்கள். அதுதான் சிறுகதையின் தேவை என்றார் அவர்



