திருநெல்வேலி மாவட்டப் பிரிவினை குறித்து கூறியுள்ள வைகோ., சங்கரன்கோவில் தொகுதியை நெல்லையுடன் இணைந்திட வேண்டும் என்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…
திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தைப் பிரித்து தென்காசியைத் தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்கப்படும் என்று 18.7.2019 அன்று சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்கின்றேன்.
புதிய தென்காசி மாவட்டம் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், ஆலங்குளம், வருவாய் வட்டப் பகுதிகளின் வளர்ச்சிக்கு, தென்காசி மாவட்டம் பயன் உள்ளதாக அமைகின்றது.
அதே வேளையில், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கரன் கோவில், திருவேங்கடம் வருவாய் பகுதிகளில் இருந்து தென்காசிக்கு நேரடியான போக்குவரத்துத் தொடர்புகள் இல்லை. இவ்விடங்கள், தென்காசியில் இருந்து வெகு தொலைவில் இருக்கின்றன.
திருநெல்வேலிதான் அருகில் இருக்கின்றது. கல்வி, மருத்துவத் தேவைகளுக்காக இப்பகுதி மக்கள் அன்றாடம் திருநெல்வேலிக்குச் சென்று வருகின்றார்கள். சங்கரன் கோவிலில் இருந்து திருநெல்வேலிக்குப் போக்குவரத்துத் தொடர்புகள் எளிதாக இருக்கின்றன.
ஆனால், இரவு 9 மணிக்கு மேல் தென்காசியில் இருந்து சங்கரன் கோவிலுக்குக் கூடப் பேருந்துகள் கிடையாது. அப்படியானால் திருவேங்கடம், இளையரசனேந்தல், குருவிகுளம், தேவர்குளம் பகுதி மக்கள் எப்படிப் பயணிக்க முடியும்?
எனவே, சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் வட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு மக்கள், திருநெல்வேலி மாவட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்க விரும்புகின்றார்கள்.
எனவே இந்தப் பகுதிகள் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திலேயே நீடிக்கின்ற வகையில் மாவட்டப் பிரிவினை அமைந்திட வேண்டும் என்று மதிமுக., சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்… என்று கூறியுள்ளார்.