
திருவள்ளுவரை எப்போதும் சைவ மத அடையாளங்களுடனே வரைந்திருக்கின்றனர்.
“1950-களில் பாலு சகோதரர்கள்தான் மதச் சின்னங்கள் அற்றவராக வரைந்தனர்,” என்கிறார் திராவிட இயக்க வரலாற்றாசிரியர் க. திருநாவுக்கரசு. அதைத்தான் திராவிட இயக்கத்தினர் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
பின்னர் வேணுகோபால சர்மா வரைந்த ஓவியத்தின் அடிப்படையில்தான் தபால்தலை வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் மத்திய அமைச்சர் கே. சுப்பராயன்.
அப்போது கூட அவர் படத்தில் ஏன் பூனூல் இல்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அப்படத்தையே இன்று வரை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். தமிழகச் சட்டப்பேரவையிலும் அப்படமே உள்ளது.
பழம்பாடலொன்று திருவள்ளுரின் உருவத்தை விவரிக்கிறது. சிவாலயம் ஜெ. மோகன் வெளியிட்ட திருக்குறள் புத்தகத்தில் இப்பாடல் இடம் பெற்றிருக்கிறது.
தமிழ் மரபில் காவிக்கு இடமில்லை. நாயன்மார்களும் வெண் துகிலே அணிந்திருந்தனர். புத்தமதத்தில் இருந்து சைவத்தைத் தழுவிய சாக்கிய நாயனாரை மட்டுமே காவி உடையில் வரைவது வழக்கம் என்றார் மோகன்
நாயனார் சொரூபஸ்துதி
திருமுடி மிசையார் மயிர்முடி யழகுத்
தீர்க்கபுண் டரநுத லழகும்
திரண்மயி புயந்தை வருஞ்செவி யழகுந்
திகழ்நெடுந் தாடியி னழகும்
அருமுடி செபமா லிகைசின்முத் திரைசே
ரபயநேர் வலக்கையி னழகும்
அமிழ்துறழ் தமிழ்மா மறைமுறை வரத
மமைதரு மிடக்கையி னழகும்
கருமுடி யோகப் பட்டையி னழகும்
கடிகொள்கீட் கோவண வழகும்
கழல்களிற் றிகரி வளைவரை யழகுங்
கமலநல் லாதனத் தழகும்
தருமுடிய முகிறோய் மயிலையினிடைமா
தவர்கள்கண் டிறைஞ்ச வீற்றிருக்கும்
தழைபுகழ்த் திருவள்ளுவரெனு நாம
சற்குரு சரணமே சரணம்.
நாயனார் தலைமயிரை எடுத்துக்கட்டி நெடு முடியாக முடிந்துள்ளார். அழகிய நெற்றியில் திருநீறு விளங்குகிறது. மணியணிந்த நீண்ட செவிகள் தோளில் தவழ்கின்றன. முகத்தில் நீண்ட தாடி விளங்குகிறது. வலதுகையில் சின்முத்திரையுடன் ஜெபமாலை விளங்குகிறது. அது உயிருக்கு அபயமளிப்பதாகும். உயிர்களுக்கு வரங்களைத் தந்து வாழ்விக்கும். இடது கரத்தில் அமுதம் நிறைந்த முப்பாலாய் விளங்கும் தமிழ் மறையாம் திருக்குறள் சுவடிகள் விளங்குகின்றன.
அவர் யோகப்பட்டையை அணிந்து, நீண்ட உடை தரித்து பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். திருவடிகளில் அறிஞர்கள் அணியும் ஞானத் தண்டையை அணிந்துள்ளார். மணி மாடங்களின் முடியில் மேகங்களை உரசிச் செல்லும் வளப்பம் பொருந்திய மயிலாபுரியில் மாதவர்கள் வந்து கண்டு மகிழ்ந்து போற்ற வீற்றிருக்கும் மிகுந்த பரந்த புகழை உடைய திருவள்ளுவர் என்னும் பெயர் படைத்த மேலான உயர்ந்த குருபிரானின் திருவடிகளைச் சரணம் சரணம் என்று பணிகின்றேன்.
- கோலப்பன் பகவதி (Kolappan Bhagavathy )



