ஈவேரா., அண்ணாத்துரை, கருணாநிதி மட்டும்தான் மரியாதைக்கு உரியவர்களா?!

Published:

dmk nalvar
dmk nalvar

முதல்வர்களுடன் ‘மோடி’ இன்று ஆலோசனை என்ற ஒரு செய்தியினை ஊடகங்களில் பார்க்க நேர்ந்தது. ‘மோடி என்று சொல்லக்கூடாதா, இதெல்லாம் ஒரு தவறா என்று மேலோட்டமாக பார்க்கும் போது தோன்றுகிறது. பிரதமரின் பெயரை சொல்வதினால் மரியாதை குறைவா? என்று சிலர் கேட்கக்கூடும். உறுதியாக இல்லை.

ஆனால், தமிழக ஊடகங்களில் ஈ.வெ.ரா அவர்களை பெரியார் என்றும், அண்ணாதுரை அவர்களை பேரறிஞர் அண்ணா என்றும், கருணாநிதி அவர்களை கலைஞர் என்றும் தான் அழைத்து கொண்டிருந்தார்கள், பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் ராஜாஜி அவர்களை குறிப்பிடும் போது மூதறிஞர் என்றோ, காமராஜர் அவர்களை குறிப்பிடும் போது பெருந்தலைவர் என்றோ, எம் ஜி ஆர் அவர்களை புரட்சி தலைவர் என்றோ, ஜெயலலிதா அவர்களை புரட்சி தலைவி என்றோ, குறிப்பிடாது இருப்பது ஏன்? ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் தான் மரியாதைக்குரியவர்களா? புகழ் பெற்றவர்களா? மக்கள் ஏற்று கொண்ட தலைவர்களா?

கட்சியினர் தங்களின் தலைவர்களை புகழ்ந்து பேசி அவர்களை புகழ் பெற்றவர்களாக அழைப்பதில் தவறில்லை. ஆனால், ஊடகங்கள் கட்சி ரீதியாக, மாநில ரீதியாக எப்படி வித்தியாசமான நடைமுறையை கடைபிடிக்க முடியும்? திட்டமிட்ட ரீதியில் இது விதைக்கப்படுவதாக நான் கருதவில்லை. ஆனால் பெரும்பாலான ஊடகங்களின் வழக்கம் இப்படித்தான் இருந்து வருகிறது. தமிழக தலைவர்கள் அனைவருமே மரியாதைக்குரியவர்கள் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

ஆனால், சுயமரியாதை என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்களாக தங்களை காட்டிக்கொண்டவர்களை தான், சொந்த பெயரில் அழைக்காமல் பட்டப்பெயரில் அழைப்பது வழக்கமாகியுள்ளது. ஈ.வெ.ரா என்றாலோ, கருணாநிதி என்றாலோ, அண்ணாதுரை என்றாலோ, அந்த கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமல்ல, கழக கொள்கையுடையவர்கள் மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பாதுகாவலர்கள் என மார்தட்டிக்கொள்பவர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களாக சொல்லப் படுபவர்களும், அவர்களை அவமரியாதையாக அழைத்து விட்டோம் என்று சற்றே கோபமாக பார்ப்பது, சுயமரியாதை சிற்பிகள் (?) என அழைக்கப் படுபவர்களின் தோல்வியாகவே நான் கருதுகிறேன்.

அப்படி இல்லையென பதிவிடுவார்களேயானால் இனி ‘மோடி’ என அழைக்காமல் ‘புதிய இந்தியாவை படைத்தவர்’ என்றோ ‘ஊழலை ஒழித்த உத்தமர்’ என்றோ, ‘உலகத்தின் எழுச்சி நாயகன்’ என்றோ அழைப்பார்களா?

என்னை பொறுத்த வரை மரியாதையோடு ஒருவரின் பெயரை சொல்லி அழைப்பது மட்டுமே அவர்களுக்கு செய்யும் மரியாதை, சிறப்பு என நான் எண்ணுகிறேன்.

  • நாராயணன் திருப்பதி (செய்தி தொடர்பாளர், பாஜக.,)
ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

Related articles

Recent articles

spot_img