தில்லியில் கொரோனா பாதிப்பை பயன்படுத்தி ஒரு குடும்பத்தையே கொலை செய்ய முயற்சி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி தில்லியில் ஒரு கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.
தில்லியை சேர்ந்த 42 வயதான பிரதீப் என்பவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஊர்க்காவல் படையில் இருந்த ஒரு நபருடன் தனது மனைவி தொடர்பில் இருந்ததாக தெரியவந்ததால் கடும் ஆத்திரமடைந்தார். அதனால் அந்த நபரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதற்கு கொரோனா பாதிப்பை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர், இந்த சதித்திட்டத்தை நிறைவேற்ற பணம் கொடுத்து இரண்டு பெண்களை பயன்படுத்திக் கொண்டார்.
சுகாதார பணியாளர்கள் போல் நடித்து அந்த நபரின் வீட்டிற்கு சென்ற பெண்கள், விஷம் நிரப்பப்பட்ட ஒரு பாட்டிலை கொடுத்துள்ளனர். கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்து எனக் கூறி நாடகமாடி அந்த குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளனர்.
போலி சுகாதார பணியாளர்களின் பேச்சை நம்பி மருந்து என நினைத்து அந்த நபர் உட்பட குடும்பத்தினர் 4 பேர் விஷத்தை குடித்துள்ளனர். இதனையடுத்து மயக்கமடைந்த அவர்களை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நால்வருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து இரண்டு பெண்களையும் கைது செய்து விசாரித்த போது, உண்மை தெரியவந்தது. இதனையடுத்து பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். கொரோனா பாதிப்பால் உலகமே தலைகீழாக மாறியுள்ள நிலையில், கொரோனாவை பயன்படுத்தி கொலை செய்ய முயற்சி நடந்துள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது.