
நடிகை ‘பத்மஸ்ரீ’ மனோரமா தமிழகத்தின் செல்ல பிள்ளை. அவரைப் பற்றி பலரும் அறிந்தவைதான்… ஆனால் அவருடைய மனித நேயத்தை வெளிப்படுத்தும் சில விஷயங்கள் பலரும் அறிந்து கொள்ள வேண்டியவை.!
ஒரு முறை மயிலாப்பூர் துணிக் கடையில் புடவை வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வயதான பழுத்த சுமங்கலி மாமி ஒருவர், மனோரமாவைப் பார்த்து… டீ நீ மனோரமாதானே… என்று கேட்டார். இவரும் ஆம் என்றார்
உடனே மனோரமா கையை பிடித்துக் கொண்டு, நீ நடித்த என் வீடு என் கணவன் என் குழந்தை நாடகத்தை மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் பார்த்தேன்! எங்க மனுஷாளே பேச மறந்த எங்க பிராமண பாஷையை எவ்வளவு பிரமாதமா பேசறே… ! உனக்கு ஏதாவது பண்ணனும்” என்று சொல்லிக் கொண்டே…. தன் விரலில் போட்டிருந்த தங்க மோதிரத்தைக் கழற்றி, மனோரமாவின் விரலில் சடக்கென்று போட்டுவிட்டார்!

மனோரமா எவ்வளவோ மறுத்தும் திரும்ப வாங்காமல் போய்விட்டார் அந்த மாமி.
மனோரமா அந்த மோதிரம்தான் தன்னுடைய நடிப்புக்குக் கிடைத்த ஆஸ்கார் பரிசு என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்! அந்த மோதிரத்தை, தாம் இறக்கும் வரையில் விரலை விட்டு கழற்றவில்லை! அந்த மாமியை அவர் பிறகு எவ்வளவு தேடியும் பார்க்க முடியவில்லை!
விசுவின் சகோதரர் கிஷ்மு இறந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார் மனோரமா. அப்போது அவர் வெளியூரில் இருந்தார். உடனே விரைந்து வந்தும், அவர் வருவதற்குள் கிஷ்மு உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டுவிட்டது. உடனே டிரைவரிடமும் உதவியாளரிடமும் காரை மயானத்திற்கே ஓட்டிச் செல்லும்படி கூறினார் மனோரமா. ஆனால் உதவியாளர் தமிழரசனோ, அம்மா பெண்கள் எல்லாம் மயானத்திற்கு போகக் கூடாது என்றார் தயக்கத்துடன்!
அதற்கு மனோரமா, விசு குடும்பம் நமக்கு மிக வேண்டிய குடும்பம்… நான் போயாக வேண்டும் என்று அடம்பிடித்து, எவ்வளவோ தடுத்தும் மயானத்திற்கே சென்று,இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு கிஷ்முக்கு வாய்க்கரிசியும் இட்டார்!

1500 படங்களுக்கு மேல் நடித்த மனோரமாவுக்கு பத்மஸ்ரீ போன்ற உயரிய விருதுகள் எதுவும் அப்போது வழங்கபட்டிருக்கவில்லை. நான் அவரிடம் சென்று, அம்மா உங்களின் சுயவிவரக் குறிப்பு அனுப்பினால் மத்திய அரசு பரிசீலனை செய்யும்” என்றேன்.
ஆனால் அவர் கேட்கவில்லை. என் பேச்சை மறுத்துப் பேசினார். “சுபாஷ் நான் 1500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன்! மத்திய அரசு நாம கேட்காமலேயே கொடுப்பது தான் சிறந்தது” என்றார்.
சில வருடங்களுக்கு பிறகு மத்திய அரசு தாமாக பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. மனோரமா சிறந்த நடிகை மட்டுமில்லை சுயகௌரவம் பேணியவராகவும் இருந்தார்.
மனோரமாவை, ’பொம்பள சிவாஜி’ என்று அழைத்தனர் ரசிகர்கள். அந்த அளவுக்கு நடிப்பில் மிஞ்சியவராய்த் திகழ்ந்தார்… ஆனால், திரையில் மட்டுமே நடித்தவர்!
மனோரமாவை வைத்து பிரபலமான தொடரான “அன்புள்ள அம்மா”
13 வார டிவி தொடரைத் தயாரித்தவன் நான். மனோரமாவின் குடும்ப நண்பரான நான் எக்ஸ்னோரா அமைப்பின் இனை நிறுவனர்! அதன் துணைத் தலைவராக இருந்த போது அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்து, கலைவாணர் அரங்கில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தோம்! அதில் மனோரமாவை சிறப்பு விருந்தினராகப் பேச அழைத்திருந்தேன்! அதுவும் முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதியுடன்தான்!
ஆனால் மனோரமா என்னிடம், “அந்த தேதியில் எனக்கு படப்பிடிப்பு உள்ளது… நான் வரமுடியாது” என்றார். அந்தக் கால கட்டத்தில் முதலமைச்சருடன் கூட்டத்தில் கலந்துகொள்ள யாரும் மறுப்பு சொல்ல மட்டார்கள். அதனை தாம் பெற்ற பாக்கியமாகவே கருதுவார்கள்! ஆனால் மனோரமா மறுத்து விட்டார்!

நான்அவரிடம், அம்மா நான் உங்கள் பட இயக்குனரிடம் அனுமதி வாங்குகிறேன் அப்பொழுது வருவீர்களா என்று கேட்டேன். சற்று தயக்கத்துடன், சரி என்றார்!
நான் உடனே இயக்குனர் பி வாசுவிடம் அனுமதி கேட்டு மனோரமாவை விழாவிற்கு அழைத்துச் சென்றேன்! எத்தகைய நிலையிலும் அவரது தொழில் பக்திதான் அவரை இந்த அளவுக்கு இட்டுச் சென்றதை நான் அன்று உணர்ந்தேன்.
ஒருமுறை, மனோரமா மலேசியாவில் நடந்த விழாவிற்குச் சென்றிருந்தார். நடிகர் திலகம் சிவாஜி குழுவினருடன் தான். மேடையில் சிவாஜியுடன் சின்ன அண்ணாமலையும் இருந்தார்!
மனோரமாவை பேச அழைத்தார்கள். சிவாஜி, சின்ன அண்ணாமலையுடன் பேசிக் கொண்டிருந்தார். மனோரமா பேச ஆரம்பித்தவுடன் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது. தொடர்ந்து கையை தட்டிக்கொண்டே இருந்தார்கள்!
சிவாஜியோ, கைத்தட்டல் சத்தத்தைக் கேட்டு “என்னய்யா பேசினா?” என்று சின்ன அண்ணாமலையிடம் கேட்டார்! அதற்கு அவர், “ஆச்சி மலாய் மொழியில் ரசிகர்களிடம், நான் உங்கள் சகோதரி மனோரமா தமிழ்நாட்டில் இருந்து வந்திருககிறேன் வணக்கம் வாழ்த்துக்கள்” வீட்டீல் எல்லாரும் நல்லாயிருக்காங்களா” என்று மலாய் மொழியில் பேசினார்… அதான் இந்தக் கைத்தட்டல் எல்லாம் என்று சிவாஜியிடம் விளக்கினார்.

எப்படி, யாரிடம் இவ்வாறு கேட்டுப் படித்தார் என்று ஆச்சரியம் அவருக்கு. அப்போது தான், எங்களின் மலேசிய நண்பர், சுப.நாராயணசாமி அவர்களின் மூலம் தமிழில் சொல்லச் சொல்ல, அவர் மலாய் மொழியில் பேச வேண்டியதைச் சொல்லி, எழுதிக் கொடுக்க… அதை அப்படியே மனனம் செய்து, அவருக்கே உரித்தான பாணியில் ஏற்ற இறக்கத்தோடு பேசி, கைத்தட்டலைக் கவர்ந்து கொண்டார் என்பது தெரிந்தது. சிவாஜியும் பின்னர் மனோரமாவிடம், அவரது பாணியில் “நன்னா பண்ணிருக்கே” என்றார்!
அடுத்து ஒரு முறை மலேசியா சென்றிருந்த போது மிகப் பெரிய விபத்தில் இருந்து உயிர் தப்பினார் மனோரமா. டத்தோ சாமிவேலு அவரகளின் விழாவில் கலந்து கொண்டு ஓட்டலுக்கு திரும்புவதற்கு புத்தம்புதிய பென்ஸ் காரை விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மனோரமா உடன் அவரது மகன் பூபதி, கண்ணதாசன் அறக்கட்டளைச் செயலாளர் கரு கார்த்தி, பென்ஸ் காரில் வந்து கொண்டிருந்தார்கள், பென்ஸ் அதற்குரிய வேகத்தோடு வந்தது. கரு கார்த்தி காரில் புகை வாசனை வருவதை நுகர்ந்தவுடன், காரை உடனே நிறுத்தும் படி கத்தினார். மனோரமாவும் பூபதியும் பதறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினார்கள்! கரு கார்த்தி டிக்கியிலிருந்து சாமான்களை எடுத்துக் கொண்டு அவரும் ஓடினார். அதற்குள் அந்த புத்தம் புதிய பென்ஸ் கார் பற்றி எரிந்து சாம்பலானது. அந்தச் செய்தி மலேசியாவின் அன்றைய தலைப்பு செய்தியானது!
ஒரு மரண அபாயத்திலிருந்து தன்னையும், தன் மகன் பூபதியையும் காப்பாற்றிய
கரு கார்த்தி, அதன் பின்னர் மனோரமாவுக்கு செல்லப் பிள்ளை ஆனார். கரு கார்த்தி சொல்லாமல் எப்போதும் மலேசியாவிற்கு போக மட்டார்!
ஒரு முறை தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் ”சுபாஷ், என் மகள் சற்று மனவளர்ச்சி குன்றியவர்! சினிமாவில் அதுவும் தொலைக்காட்சியில் மனோரமாவை ரசித்துப் பார்ப்பார். மனோரமாவை நேரில் பார்த்தால் மிகவும் சந்தோஷப் படுவார்…” என்றார்.
நான் இதனை மனோரமாவிடம் சொன்னேன். அதைக் கேட்டு சந்தோஷப் பட்ட அவர், அடுத்த ஞாயிற்றுக் கிழமையே அந்த அதிகாரியின் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணுடன் மாலை வரை இருந்து விட்டு வந்தார்! மறுநாள் அந்த அதிகாரி என் கையைப் பற்றிக் கொண்டு கண்களில் நீர் ததும்ப நன்றி சுபாஷ் என்றார்!
ஒருமுறை நானும் ஆச்சியும் எல்டாம்ஸ் சாலையில் காரில் வந்து கொண்டிருந்தோம்! முருகர் கோயில் அருகே வந்தபோது காரை நிறுத்தச் சொன்னார்! என்னிடம் சுபாஷ் என் பின்னாலேயே வாங்க என்று சொல்லிவிட்டு தலையில் புடவையைப் போட்டபடி விறுவிறெயென்று பக்கத்தில் இருந்த வீட்டில் நுழைந்தார். அதில், கடைசியில் இருந்த போர்ஷனில் நுழைந்த போது, அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் மனோரமா மனோரமா என்று ஆச்சரியத்துடன் கூத்தாடினார்கள். பின்னர் மனோரமா என்னிடம், “சுபாஷ் இந்த போர்ஷனில் தான் நானும் அம்மாவும் மாதம் பத்து ருபாய் வாடகையில் இருந்தோம்” என்றார்.

அவருக்கு ஆதரவற்ற விலங்குகள் பேரிலும் இரக்கம் மிக உண்டு. எங்கேயாவது சாலையில் திரியும் ஆதரவற்ற நாய், பூனை தென்பட்டால் உடனே காரை விட்டு இறங்கி அவற்றை காருக்குள் எடுத்துப் பொட்டு, வீட்டுக்கு எடுத்து வருவார். அவற்றை குளிப்பாட்டி உணவு கொடுப்பார். அவர் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகள் இருக்கும். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அவற்றுடன் பொழுது போக்குவார்.
மனோரமாவை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர், கவியரசு கண்ணதாசன்! அவர் இருந்த வீட்டின் வழியாக காரில் போகும் போதெல்லாம், தன்னிச்சையாக காலில் இருந்து செருப்பைக் கழற்றிவிட்டு, மரியாதையுடன் ஒரு பார்வை பார்ப்பார். கண்ணதாசன் குடும்பத்தினர் மீதும் அளவற்ற பாசம் வைத்திருந்தார்!
அது போலவே ‘கொஞ்சும் குமரி’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப் படுத்திய மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி ஆர் சுந்தரம் அவர்களை மனோரமா என்றுமே மறந்ததில்லை! அவருடைய புகைப்படம் மட்டும் தான் மனோரமா வீட்டில் இருக்கிறது!
மத்திய, மாநில அரசுகள் அவருடைய கலைத்திறைமைக்கு மதிப்பளிக்கும் வகையில், சென்னையில் சிலை அமைக்க வேண்டும்! மனோரமா பெயரில் வருடந்தோறும் நகைக்சுவைக் கலைஞருக்கு விருது வழங்க வேண்டும் – என்ற கோரிக்கையை பல லட்சம் ரசிக உள்ளங்கள் முன் வைப்பதைப் போல் நானும் முன் வைக்கிறேன்.
- சுபாஷ் சந்திரன்,
(செயலாளர், மெட்ராஸ் பிலிம் சொசைட்டி)