
நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
கேள்வி:ஒன்பது நாட்கள் பூஜை செய்ய இயலாதவர்களுக்கு மாற்றி வழிமுறை ‘த்ரிராத்ரி’ விரதம் என்பார்களே! அதன் சிறப்பு என்ன?
பதில்: சரந் நவராத்திரியில் அமாவாசைக்குப் பிறகு பாட்யமி முதல் நவமி வரை பூஜை கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்ய இயலாதவர்கள் த்ருதியை முதல் செய்யலாம். அப்போது ஏழு நாட்கள் செய்யும் ‘சப்த ராத்ரி’ விரதம் எனப்படும்.
அவ்வாறு கூட செய்ய இயலாதவர்கள் மாற்று வழி முறையாக பஞ்சமி திதியன்று தொடங்கி ஐந்து இரவுகள் ‘பஞ்சராத்ரி’ விரதம் செய்யலாம். அவ்வாறு கூட செய்ய இயலாதவர்கள் சப்தமி தொடங்கி செய்யலாம். சப்தமி அஷ்டமி நவமி மூன்று இரவுகள் ‘த்ரிராத்ரி’ விரதம் எனப்படுகிறது. இதையாவது செய்தே தீர வேண்டும்.
த்ரி ராத்ரி விரதம் கூட செய்ய இயலாதவர்கள் நவமி அன்று மட்டுமாவது பூஜை செய்ய வேண்டும். நவமி பூஜை மிக முக்கியம். அவ்வளவுதானே தவிர, விஜய தசமிதான் வரப்போகிறதே என்று நவமி வரை செய்யாமல் இருந்துவிட்டு தசமி அன்று மட்டும் செய்தால் பலன் கிடைக்காது. அது சாரதா வழிபாடு ஆகாது. அதாவது சரந் நவராத்திரி பூஜையின் கீழ் வராது.
அதனால் த்ரிராத்ரி விரதம் முக்கியமானது.
த்ரிராத்ரிகள் பூஜை செய்ய இயலாதவர்கள் நவமி அன்று மட்டுமாவது கட்டாயம் பூஜை செய்ய வேண்டும். சரந் நவராத்திரி பூஜை செய்யாமலே இருந்து விடக்கூடாது என்பதால் இத்தனை தளர்வுகள் அளித்துள்ளார்கள்.
அதனால், நவராத்திரி, சப்த ராத்திரி, பஞ்ச ராத்திரி, த்ரி ராத்திரி, ஏக ராத்திரி.. என்று இத்தனை வழிமுறைகளை கூறியுள்ளார்கள்.
இவற்றில் முக்கியமானது என்னவென்றால்… இதில் மூன்று என்ற எண்ணுக்கு மிகவும் பிரத்தியேகம் உள்ளது.
மும்மூன்று ஒன்பது ஆகிறது. சரந் நவராத்திரியில் மூன்று முறை ‘மூன்று’ வருகிறது. ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் இவற்றில் ஒரு மூன்றையாவது கடைபிடிக்க வேண்டும். அப்போது மூன்று சக்திகளின் சொரூபிணியான அம்பிகையை இந்த மூன்று இரவுகள் மகா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி ரூபிணியாக வழிபடும் பாக்கியம் கிட்டும்.
மற்றொரு வழிமுறையில் சரஸ்வதி லட்சுமி துர்க்கை என்று கூறப்படுகிறது. எவ்விதமாகவேனும் சரி… மூன்று என்ற எண், அற்புதமான விஸ்வ நியமத்தைக் குறிக்கும் குறியீடு. இது ஒரு பூரணமான எண். திரிகரணம் மனம் வாக்கு செயல், த்ரிகாலம், த்ரிலேகம் … என்கிறோம்.
இந்த காரணங்களால் மூன்று என்ற எண்ணுக்கு அத்தனை முக்கியத்துவம் இருப்பதால் தான் மனம் வாக்கு செயல் களை தூய்மைப்படுத்துவதற்கும் சங்கல்பங்கள் நிறைவேறுவதற்கும் இந்த த்ரிராத்ரி விரதம் மிக முக்கியமானது.
நவராத்திரி விரதத்தை ஒன்பது நாட்கள் செய்ய இயலாதவர்கள் மூன்று நாட்களாவது செய்து வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் எடுத்துக் கூறுகிறது.