சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
24. ரசிப்புத்தன்மை
செய்யுள்:
இதர பாபபலானி யதேச்சயா விதரதானி சஹே சதுரானன
அரசிகாய கவித்வ நிவேதனம் சிரசி மா லிக! மா லிக! மா லிக!
–ஶ்ரீஹர்ஷர்
பொருள்:,
ஓ பிரம்ம தேவா! என் நெற்றியில் எத்தனை பாவ பலன்களை வேண்டு மானாலும் எழுதிக் கொள். பொறுத்துக் கொள்வேன். ஆனால் ரசிப்புத் தன்மையற்றவர்களின் முன்னால் கவிதை பாடும் துர்பாக்கியத்தை மட்டும் என் நெற்றியில் தயவு செய்து எழுதி விடாதே! எழுதி விடாதே! எழுதி விடாதே!
விளக்கம்:
ஸ்ரீ ஹர்ஷர் எழுதிய புகழ்பெற்ற செய்யுள் இது. ரசிப்புத்தன்மையற்றவர்களிடம் கலைகளை வெளிப்படுத்துவது செவிடன் காதில் ஊதிய சங்கு போல என்று கூறும் செய்யுள் இது.
இலக்கிய இன்பத்தை ரசிக்கத் தெரியாதவர்களிடம் கவிதை படிப்பது சாம்பலில் ஊற்றிய பன்னீர் போல் வீண். ரசனையற்றவர்கள் என்றால் இயல் இசை நாடக ருசிகளை அனுபவிப்பதில் விருப்பம் அற்றவர்கள். நாம் கூறும் விஷயத்தை அருகில் இருப்பவர் புரிந்து கொள்ளாவிட்டால் எத்தனை வருத்தமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அப்படிப்பட்டதே ஶ்ரீஹர்ஷருடைய வேதனையும்!
ஒரு மகாகவியோ இசைக்கலைஞர்களோ வெளிப்படுத்தும் கலையை அனுபவிக்கும் ரசிகர் இருந்தால்தான் அந்த கலைஞர்களுக்கும் திருப்தி. அந்த கலைக்கும் மதிப்பு.
அவ்வாறு ரசித்து அனுபவிப்பவர்களின் கைதட்டல் அளிக்கும் சுகமே தனி! சபை முழுவதும் நிறையாவிட்டாலும் ரசித்து அனுபவிக்கும் அன்பர்கள் நிறைந்து இருந்தால் போதும்… அந்தக் கலைஞர் மகிழ்வார்.
இலக்கிய, சங்கீத சபைகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக யாரையாவது அழைக்கும்போது மகாகவி ஸ்ரீஹர்ஷரின் வேதனையை நிர்வாகிகள் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். ரசனையற்றவர்களை அப்படிப்பட்ட சபைகளுக்கு அழைக்கவே கூடாது. நல்ல கவிதைகளைப் படித்து, நல்ல சங்கீதத்தை கேட்டு மகிழும் மனப்பாங்கு இளம் தலைமுறையினருக்கு பழக்கமாக வேண்டும்.
ஸ்ரீகிருஷ்ண தேவராயர் போன்ற ரசனை மிகுந்த மகாராஜாக்கள் கலைகளை வளர்த்தார்கள். ரசனையற்ற முகலாயர் ஆட்சியில் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் அவமரியாதையே நடந்தது.