December 2, 2025, 3:14 PM
23.9 C
Chennai

திருப்பாவை- 30; வங்கக் கடல் கடைந்த (பாடலும் விளக்கமும்)

thiruppavai pasuram 30
andal nachiar

ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை பாடலும் விளக்கமும்

விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்

** வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். (30)

பொருள்

பாற்கடலைக் கடைந்த மாதவக் கண்ணனை, அரக்கர்களை அழித்தவனை, குளிர்ச்சியும் தூய்மையும் தவழும் முகங்களை உடைய ஆயர் சிறுமிகள் சென்று பிரார்த்தனை செய்து வரங்கள் பெற்றோம். நாங்கள் கடைப்பிடித்த (மார்கழி விரதம் இருந்து, எளிமையாக, உள்ளார்ந்த பக்தியின் மூலமாக மட்டுமே அவன் அருளை அடைந்த) வழிமுறையை, குளிர்ந்த மலர்மாலைகளை அணிந்தவரும், சிறந்த ஞானியுமான பெரியாழ்வாரின் புதல்வியும், சூடிக்கொடுத்த சுடர்க் கொடியுமாகிய ஆண்டாள், தொன்மைச் சிறப்புமிக்க தமிழில் முப்பது பாடல்களாக இயற்றி, அவற்றைத் திருப்பாவை என்னும் மாலையாகத் தொடுத்து நமக்கு அளித்திருக்கிறாள். இந்த முப்பது பாடல்களையும் தினசரி பாராயணம் செய்பவர்களுக்கு எம்பெருமான் தன் திருமுகம் காட்டி, தனது குளிர்ந்த பார்வையால் அனுக்கிரகிப்பான். அவர்களுக்குத் தேவையான இக பர நலன்கள் அனைத்தையும் தனது நான்கு கரங்களாலும் குறைவில்லாமல் வழங்குவான். அவர்கள் எல்லா நன்மைகளையும் பெற்றுப் பேரானந்தத்துடன் பெருவாழ்வு வாழ்வார்கள்.

(இது பலச்ருதி எனப்படும். அதாவது, பாராயணத்தினால் விளையும் நன்மைகளை எடுத்துச் சொல்வது.)

andal srivilliputhur
thiruppavai pasuram 30

அருஞ்சொற்பொருள்

வங்கம் – பெரிய கப்பல்

வங்கக் கடல் – பாற்கடல்

திங்கள் திருமுகம் – சந்திரனை நிகர்த்த ஒளி படைத்த முகம்

சேயிழையார் – அழகிய ஆபரணங்கள் அணிந்த பெண்கள்

அங்கு அப் பறை கொண்டது – ஆய்ப்பாடியில் வரம் பெற்றது

ஆறு – வழிமுறை, பாதை

அணி புதுவை – சீர் மிக்க புத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர்

தண் தெரியல் – குளிர்ச்சியான மாலை

பட்டர் பிரான் – பெரியாழ்வார்

கோதை – ஆண்டாள்

சங்கத் தமிழ் மாலை – பாக்களை இணைத்துத் தொடுக்கப்பட்ட திருப்பாவை என்னும் தமிழ் நூல்

தப்பாமே – தவறாமல், குறைவில்லாமல், சிரத்தையுடன்

இங்கு – தற்காலத்தில்

இப் பரிசு உரைப்பார் – திருப்பாவையை முறையாக ஓதுவோர்

ஈரிரண்டு – நான்கு

மால் வரைத் தோள் – பெரிய மலைகளைப் போன்ற தோள்கள்

செல்வத் திருமால் – பிராட்டியுடன் வீற்றிருக்கும் பெருமாள்

இன்புறுவர் – மோக்ஷத்தை அடைவார்கள்

அங்கு அப் பறை –

அப் பறை என்பதை அந்தப் பறை என்று கொண்டால், ஆயர்பாடியில் பெறப்பட்ட அந்த வரங்கள் என்ற பொருள் கிடைக்கிறது.

அப் பறை என்பதை ‘அது’வே பறை என்று கொள்வது ரொம்பப் பொருத்தம். அதுவாம் அதுவேயான அந்தப் பேருண்மைப் பொருளை – உபநிஷதங்களால் ‘தத்’ (அது) என்றே விளிக்கப்படும் அந்த இறுதிப் பொருளை – கோபிகைகள் வரமாகப் பெற்றார்கள் என்பது இதன் பொருள். அதாவது, கோபிகைகள், பகவானையே வரமாகப் பெற்றனர்.

சங்கத் தமிழ் –

தமிழ்ப் பாக்களின் தொகுப்பு – அதாவது, திருப்பாவை.

கூட்டாகச் சேர்ந்து பாடப்படும் கீர்த்தனைகள், போற்றிப் பாசுரங்கள் என்றும் கொள்ளலாம். இது கூட்டு வழிபாட்டைக் குறிக்கிறது. பலர் இணைந்து கூட்டாக இப்பாசுரங்களை ஓத வேண்டும் என்பது இதன் உட்பொருள்.

தப்பாமே –

ஒரு பாட்டும் விடுபடாமல் முப்பது பாசுரங்களையும் முழுமையாக

ஒரு நாளும் தவறாமல் (தினசரி)

சிரத்தையாக, முழு ஈடுபாட்டுடன்

மொழி அழகு

படைப்புக்குக் காரணமானவன் பரமன். படைப்புக்கும் முற்பட்டவன் அவன். அவன் ஏக வஸ்து. அவனுக்கு அப்பாற்பட்ட எதுவுமே இல்லை எனும்போது அவனுக்கு என்ன பெயர் இருக்க முடியும்? ஆனாலும், அவனைப் பெயர் சொல்லி அழைப்பதில் உள்ள ஆனந்தம் அலாதியானது. அதனால்தான் பெயரில்லாத அவனுக்கு ஆயிரக்கணக்கான பெயர்கள். இத்தகைய பகவந் நாமாக்கள் அனைத்தும் காரணப் பெயர்களே. பரமனின் ஏதாவது குண விசேஷம், அவதார நிகழ்வு முதலான அம்சங்களின் அடிப்படையில் அடியார்கள் அவனுக்குச் சூட்டிய பெயர்கள் இவை. ஆண்டாளும் ஏராளமான நாமாக்களைச் சொல்லி அவனைப் போற்றுகிறாள்.

இவை ஏற்கெனவே உள்ள பெயர்கள்தான். எனினும், இதே பெயர்களை ஆண்டாள் தனக்கே உரிய பாணியில் அடைமொழி சூட்டிச் சொல்கிறாள். பகவானுக்குப் பூமாலையும், பாமாலையும் சூட்டிய ஆண்டாள் அவனது நாமாக்களுக்கு அடைமொழியும் சூட்டித் தந்திருக்கிறாள். இந்த அடைமொழிகள் விசேஷ நயத்தைத் தருகின்றன. அவளது அடைமொழிகள் அடர்ந்த மொழியாக அமைந்துள்ளது இந்தப் பாசுரத்தின் சிறப்பு:

வங்கக் கடல் கடைந்த மாதவன், கேசவன் (பெருமாள்), திங்கள் திருமுகத்துச் சேயிழையார் (கோபிகைகள்), அங்கு அப் பறை கொண்ட ஆறு (வரம் பெற்ற வழிமுறை = பாவை நோன்பு), அணிபுதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை (ஆண்டாள்), சங்கத் தமிழ் மாலை முப்பது (திருப்பாவை), தப்பாமே இங்கு இப் பரிசு உரைப்பது (பாராயணம்), செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால் (பெருமாள்), எங்கும் திருவருள் பெற்று இன்புறுதல் (வீடுபேறு)

ஆன்மிகம், தத்துவம்

வங்கக் கடல் கடைந்தவன் –

‘தேவர்களுக்கு அமிர்தம் வழங்குவதற்காக’ என்ற உப்புச் சப்பில்லாத காரணத்தை முன்வைத்து – ஆனால் உண்மையில், மகாலக்ஷ்மியைப் பெற்றுத் தனது மார்பில் சூடுவதற்காக – பாற்கடலைக் கடைந்தவன் அவன். தாங்களும் அப்படியே என்று ஆண்டாள் சொல்வதாக உரையாசிரியர்கள் விளக்கம் தருகிறார்கள். நோன்பு என்ற சாக்கை முன்னிட்டு நாங்கள் அவனிடம் சென்றோம். எங்களது உண்மையான நோக்கம் அவனது திருவடிகளைப் பற்றுவது மட்டுமே என்பது இப்பாசுரத்தின் உட்பொருள். இது நமக்கான வழிகாட்டுதல்.

இங்கு இப் பரிசு உரைப்பார் –

பாராயணம் செய்வதற்கு ஏற்ற விதத்தில்  திருப்பாவையை அவள் நமக்குத் தந்திருக்கிறாள். திருப்பாவையே நமக்கு அவள் அருளிய வரம். இதைக் கூட்டாகப் பாராயணம் செய்தால் எங்கும் திருவருள் கிட்டும் என்ற உறுதியையும் அவள் நமக்குத் தருகிறாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘மக்கள் மாளிகை’ – வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல!

தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’  எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ள

‘மக்கள் மாளிகை’ – வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல!

தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’  எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக

பஞ்சாங்கம் டிச.2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பில் நீதிமன்றம் ஆணை; முருக பக்தர்களுக்கு வெற்றி!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் ஆணை. முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என்று, இந்து முன்னணி

திருப்பரங்குன்றம் தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணிலும் டிச.3ம் தேதி அன்று கார்த்திகை தீபம் ஏற்றலாம்

Topics

‘மக்கள் மாளிகை’ – வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல!

தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’  எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ள

‘மக்கள் மாளிகை’ – வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல!

தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’  எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக

பஞ்சாங்கம் டிச.2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பில் நீதிமன்றம் ஆணை; முருக பக்தர்களுக்கு வெற்றி!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் ஆணை. முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என்று, இந்து முன்னணி

திருப்பரங்குன்றம் தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணிலும் டிச.3ம் தேதி அன்று கார்த்திகை தீபம் ஏற்றலாம்

சபரிமலையில் 15நாட்களில் 12.48 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்..

சபரிமலையில் மண்டல பூஜைக்கு நடைபெறந்த நாள் முதல் இன்று வரை 15நாட்களில்...

ஆர்எஸ்எஸ் ஸின் நோக்கம் அதிகாரம் அல்ல, சேவை!

அதிகாரத்தை அடையும் போராட்டம் அல்ல ஆர்எஸ்எஸ்ஸின் வரலாறு. மாறாக சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவது. பிரிவினை அதன் நோக்கம் அல்ல. மாறாக நாட்டில் உள்ள அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைப்பது.

கைசிக ஏகாதசி சிறப்பு: நம்பாடுவான், பிரம்மரட்சஸ், கைசிக புராணம்!

கைசிக ஏகாதசி! - கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" மற்றும் "துவாதசி" அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு வைகுண்ட பிராப்தி நிச்சயம். அப்பேர்ப்பட்ட மகத்துவமான "கைசிக ஏகாதசி".

Entertainment News

Popular Categories