“ஐயா, புயல் அடிச்சப்போ இவர் எங்களைப் பார்க்கவே வரவில்லை”-என்கிறார் ஒரு பெண்மணி ராகுல் காந்தியிடம்!
அதை ‘அப்படியே’ மொழி பெயர்த்து – “நிவார் புயல் சமயத்தில் நான் அவர்களது பகுதிகளுக்கு எல்லாம் சென்று பார்த்து உதவி செய்ததைக் கூறுகிறார்!” – என்று அப்பட்டமாக மாற்றி மொழி பெயர்க்கிறார் ஒரு முதலமைச்சர்!
இவர் போன்றவர்களை நம்பித்தான் – இவர்கள் கொடுக்கும் ‘பின்னூட்டத்தை’ (FEEDBACK) நம்பித்தான் காங்கிரஸ் செயல்படுகிறது என்பது கேவலமான ஒன்று!
இந்த நிகழ்ச்சி எங்கே நடைபெறுகிறது? ஒரு பகிரங்கமான பொது வெளியில்! பலரும் பார்க்கும் இடத்தில்!
அதுவும் இது எப்படிப்பட்ட காலம்? தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகிப்போய், எவரும் எங்கும் பேசுவது காணொலியாகப் பதியப்பட்டு, பல பேருக்கும் கண நேரத்தில் பகிரப்படும் டிஜிட்டல் புரட்சி யுகம்!
இப்படிப்பட்ட நிலையிலேயே – “ஏதடா நாம் இப்படி அப்பட்டமாக மாற்றி மொழி பெயர்க்கிறோமே?
ஒரு பெண்மணி ‘தூண்டில் வலை’ என்பதை மிக விரிவாக விளக்கி, அதைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்னும் போது அதை “இரட்டை மடி சுருக்கு வலை”- என்று வேறாகக் கூறுகிறோமே!
ஒரு பெண்மணி – புயல் சேதார காலத்தில் தங்களை யாருமே வந்து பார்க்காததை கூறும் போது – அந்தப் பெண்மணி – தான் நிவர் புயலின் போது ‘விசிட்’ செய்ததைக் கூறுகிறார் என்று மாற்றிப் பேசுகிறோமே?”–…
இப்படியெல்லாம் சிறிதாவது சிந்தித்தாரா நாராயணசாமி?
பகிரங்கமாகப் பொது வெளியிலேயே பொதுஜனம் கூறியதை இப்படி மாற்றிக் கொண்டு போய் தலைவரிடம் சேர்ப்பவர்கள்…
1) அவர்களுடைய உட்கட்சிக் கூட்டங்களில், பொதுஜனம் எவரும் இல்லாத அவர்களது கட்சிக் கமிட்டி கூட்டங்களில் எப்படி எந்த மாதிரியான “பின்னூட்டத்தை” தலைமைக்குத் தருவார்கள்?
2) தமது கட்சியின் பலம், கூட்டணிக் கட்சிகளின் பலம், எதிர்த்துப் போட்டியிடும் கட்சிகளின் பலம், தொகுதிவாரியாக காங்கிரசின் வெற்றி / தோல்வி வாய்ப்பு…
இதுபோன்ற விஷயங்களில் இவரைப் போன்றவர்கள் தமது தலைமைக்குத் தரும் தகவல்கள் எந்த லட்சணத்தில் இருக்கும்?
3) தகவல் தொழில் நுட்பம், டிஜிட்டல் பதிவுகள், லைவ் ரிகார்டிங் இதெல்லாம் எதுவும் இல்லாத காலத்தில் இவர்களைப் போன்ற தலைவர்கள் இந்திரா காந்திக்குக் கொடுத்த “பின்னூட்டம்” எப்படி இருந்திருக்கும்?
4) தி.மு.க கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் – ‘காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் எப்படி உழைக்கிறார்கள்?’ என்று கட்சி மேலிடம் நிச்சயமாகக் கேட்டு இருக்கும்!
“ஆஹா! திமுகவினர் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் பிரமாதமாக உழைக்கிறார்கள்!”- என்று ‘நாராயணசாமி வகையறா’ காங்கிரஸ் ‘பார்வையாளர்கள்’ மேலிடத்துக்கு தகவல் தந்து குஷிப்படுத்தி இருக்கக் கூடும்!
5) கூட்டணிக் கட்சியான திமுக ‘உழைத்த உழைப்பு’ கொஞ்சமா நஞ்சமா?
2009 – நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை (மணிசங்கர் ஐயர்), சேலம் (தங்கபாலு), ஈரோடு (EVKS இளங்கோவன்), திருச்சி (சாருபாலா தொண்டமான்), கோயமுத்தூர் (P.R.பிரபு)… போன்ற காங்கிரஸ்காரர்கள் கச்சிதமாகத் தோற்க…
திமுக தான் போட்டியிட்ட பல தொகுதிகளில் கச்சிதமாகக் கரை ஏறியது! ஏனென்றால் மேற்கண்டவர்களில் சாருபாலா தவிர மற்றவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் – காங்கிரஸ் வென்றால் மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்புள்ளவர்கள்!
தமிழ்நாட்டில் இருந்து இத்தனை அமைச்சர்கள் என்று காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தால் – இவர்கள் எல்லாம் இல்லாமல் போனால் – ‘அண்ணன் செத்தால் திண்ணை காலி’- என்று மகழ்ச்சியாக இருந்தது திமுக!
6) பிறகு 2011 சட்டமன்றத் தேர்தலில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் மட்டும் வெல்லும் அளவுக்கு – “பிரமாதமான ஒத்துழைப்பு”- தந்தது திமுக!
7) பிறகு 2016 சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் மட்டும் ஜெயிக்கும் வகையில் – “நல்ல ஒத்துழைப்பு”- தந்தது திமுக!
ஆனால் இதை எல்லாம் எப்படி எந்த வகையில் மேலிடத்துக்கு அறிக்கையாகத் தந்தார்களோ – அதெல்லாம் அந்தத் தலைவர்களுக்கே வெளிச்சம்!
இவர்கள் தரும் “பின்னூட்டத்தை”- நம்பி ஒரு அகில இந்தியத் தலைமை! ஆளாளுக்கு அவரவர் வசதிக்குத் தலைமைக்குத் தகவல் தரும் தலைவர்கள்! ஒரு பொது வெளியில், பகிரங்கமாக இப்படி அர்த்தம் மாற்றித் தலைமையிடம் சொல்பவர்கள்…
தாங்கள் தலைமைக்கு சமர்ப்பிக்கும் ‘கட்சி நிலை’- ‘கூட்டணிக் கட்சியின் அணுகுமுறை’- போன்றவற்றைக் குறித்த அறிக்கைகளில் எந்த அளவு நேர்மையைக் கடைப்பிடித்து இருப்பார்கள் என்பது…
எந்த ஒரு நடுநிலையான அரசியல் பார்வையாளருக்கும் எழுகின்ற நியாயமான சந்தேகமே!
- முரளி சீதாராமன்