எங்கேயும் எதற்கும் உதவும் வெங்காய வடகம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
onion vadakam - 2026

வெங்காயக் கறி வடகம்

தேவையானவை:
சின்ன வெங்காயம் – 400 கிராம்
உளுத்தம்பருப்பு – 100 கிராம்
கடுகு – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – 20 இலைகள்
பூண்டு – 6 பல்
நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

அரைக்க:
காய்ந்த மிளகாய் – 8
சீரகம் – அரை டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
கல் உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்


செய்முறை:
உளுந்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் ஊற்றாமல் வெண்ணெய் போல அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டுப்பல் ஆகியவற்றைத் தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்தை அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் அரைத்த உளுந்து, தேவையானவற்றில் மீதம் இருக்கும் பொருட்கள்அனைத்தையும் இத்துடன் சேர்க்கவும். இதில் அரைக்க வேண்டியதைச் சேர்த்து கையால் நன்கு மாவுடன் கலக்குமாறு பிசைந்து கொள்ளவும்.

வெயில் படும் தரையில் ஒரு துணியை விரித்து, அதில் மாவை சிறிது சிறிதாக கையால் கிள்ளி வைக்கவும். வடகத்தை நன்றாக காய விடவும். காய்ந்ததும் கறி வடகத்தின் பின்புறம் சிறிது தண்ணீர் தெளித்து, துணியிலிருந்து பிரித்து எடுக்கவும். நிறைய தண்ணீர் தெளித்தால், கறி வடகம் ஊறி நனைந்து விடும். எடுத்த கறி வடகத்தை ஒரு தட்டில் போட்டு வெயிலில் நன்றாக காய வைக்கவும். நன்றாகக் காயவில்லை என்றால் கறி வடகம் கெட்டு விடும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அடுப்பைக் குறைத்து கறி வடகங்களைப் பொரித்து எடுக்கவும். தீயைக் குறைக்காவிட்டால், வெங்காயம் கருகி கறி வடகம் கசப்புச் சுவை கொடுக்கும். இதனால் பார்த்து பொரிக்கவும். இதை தயிர் சாதம், மற்றும் சாம்பார் சாதத்துடன் சாப்பிடலாம். குழம்பிலும் பொரித்துப் போடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.