spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: கோவர்த்தன கிரிதாரி!

திருப்புகழ் கதைகள்: கோவர்த்தன கிரிதாரி!

- Advertisement -
thirupugazhkathaikal

திருப்புகழ்க் கதைகள் 227
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தகர நறுமலர் – பழநி
கோவர்த்தனகிரிதாரி

மழைக்கும் மேகத்துக்கும் அதிபதி இந்திரன். அவனே தேவர்களுக்கும் அதிபதியானதால் தேவேந்திரன் என்ற திருநாமத்தைப் பெற்றான். இந்திரனின் பெருங்கருணையால் மாதம் மும்மாரி பெய்து நிலங்களில் பயிர் செழுமையாக விளைந்து, மக்கள் பசிப்பிணியின்றி வாழ்ந்து வந்தனர். இந்த நன்றியை இந்திரனுக்குத் தெரிவிப்பதற்காக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் முதல் பயிரை அவனுக்கே படைத்தனர். இதனை ‘இந்திர விழா’ என்று கோலாகலமாகக் கொண்டாடினர். சூரியன் வடதிசை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் உத்ராயண காலம் ஆரம்பமான தை மாதத்தில்தான் இந்தப் பெருவிழா நெடுங்காலமாக கொண்டாடப்படுகிறது. இதை வால்மீகி முனிவரும், மகாகவி காளிதாசனும் அவர்களது இலக்கியங்களிலே எடுத்துக் கூறுகின்றார்கள்.

‘என்னாலேயே இவ்வுலக மக்கள் உண்டு, களித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆகவே நான் மட்டுமே அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறேன். என்னையன்றி மக்களுக்கு நன்மைகள் செய்பவர்கள் வேறு யாரும் இல்லை’ என்ற அகம்பாவம் இந்திரனுக்கு மிக அதிகமாக இருந்தது. இந்தச் செருக்கை அடக்கிட கண்ணபிரான் திட்டமிட்டார்.

ஒருநாள் கோகுலத்தில், ஆயர்கள் எல்லோரும் சேர்ந்து இந்திர வழிபாடு செய்வதற்காக பலத்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். வேதச் சடங்குகளில் அந்தணர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்ததைக் கிருஷ்ணரும் பலராமரும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

இது, வழக்கமான, வருடந்தோறும் நடைபெறும் யாகம் என்றும் இந்த யாகம் குறிப்பாக இந்திரனைத் திருப்திப்படுத்துவதற்காக ஆயர்கள் நிகழ்த்துகிறார்கள் என்றும் தெரிந்துகொண்டார்கள். இந்திரனைத் திருப்திப்படுத்தினால்தான், அவன் உத்தரவின்பேரில் மழை பொழிந்து வளம் கொழிக்கும் என்ற ஆயர்களின் நம்பிக்கையையும் கவனித்தார்கள்.

இதுபற்றி நந்தகோபரிடம் கிருஷ்ணர் கேட்டார். அதற்கு நந்தகோபர், ‘‘என் இனிய மகனே, இந்தச்சடங்கு பரம்பரை பரம்பரையாகச் செய்யப்பட்டு வருகிறது. இந்திரனின் கருணையால் மழை பெய்வதாலும் மேகங்கள் அவரது பிரதிநிதிகள் என்பதாலும், தண்ணீர் நமது வாழ்வுக்கு மிக முக்கியமானதாலும், மழையின் தெய்வமான தேவேந்திரனான இந்திரனுக்கு நம் நன்றியை நாம் தெரிவிக்க வேண்டியது அவசியம். நமது விவசாயத் தேவைக்குப் போதுமான மழையை அவர் நமக்களித்திருப்பதால் அவரைத் திருப்திப்படுத்துவதற்காக நாம் அவரை வழிபடுகிறோம் என்று கூறினார்.

govardan

கிருஷ்ணர் அதற்கு – தந்தையே, இந்திரனை வழிபடத் தேவையில்லை. நாம் நமது கடமைகளைச் செய்தால் தேவர்களைத் திருப்தியடையச் செய்யலாம். நம்முடைய தொழில் மாடு, கன்றுகளைப் பரிபாலிப்பது; அதற்கு இந்த கோவர்த்தன மலை உதவி செய்கிறது. எனவே, இதனை வழிபடுவோம் – எனக் கூறினார்.

கிருஷ்ணர் கூறியபடி நந்தகோபரும், பிற கோபாலர்களும் கோவர்த்தன மலைக்குப் பூஜையை நிறைவேற்றி மலையை வலம் வந்தார்கள். இந்த மரபையொட்டி இப்போதும் பிருந்தாவனத்தில் இந்த பூஜை தினத்தன்று நன்றாக உடையுடுத்தி, தம் பசுக்களுடன் கோவர்த்தன மலைக்குச் சென்று பூஜை செய்து மலையை வலம் வருகிறார்கள். பிருந்தாவனவாசிகள் ஒன்றுகூடி பசுக்களை அலங்கரித்து அவற்றிற்குப் புல் கொடுத்தார்கள். பசுக்களுடன் கோவர்த்தன கிரியை வலம் வந்தார்கள். கோபியர்களும் விமரிசையாக ஆடையணிந்து மாட்டு வண்டிகளில் அமர்ந்து கிருஷ்ணரின் லீலைகளைப் பாடியபடி பவனி வந்தார்கள். கோவர்த்தன பூஜையை நடத்தி வைத்த அந்தணர்கள் கோபாலர்களையும் கோபியரையும் ஆசீர்வதித்தார்கள்.

பிருந்தாவனத்தின் ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்தை கிருஷ்ணர் தடுத்து நிறுத்திவிட்டார் என்று அறிந்தபோது இந்திரன் மிகுந்த கோபம் கொண்டு தன் கோபத்தை பிருந்தாவனவாசிகளின் மீது காட்டினார். பலவகையான மேகங்களுக்கு அதிபதியான இந்திரன் ‘ஸாங்வர்த்தக’ என்ற கொடிய மேகத்தை அழைத்தான். இந்த மேகம், பிரபஞ்சம் முழுவதையும் ஒரே மூச்சில் அழித்துவிடும் ஆற்றல் கொண்டது. ஆகவே இந்திரன், பிருந்தாவனத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கும்படி ‘ஸாங்வர்த்தக’ மேகத்திற்குக் கட்டளையிட்டான். இந்திரனின் கட்டளைப்படி பலவகையான அபாயகரமான மேகங்கள் பிருந்தாவனத்தின்மேல் தோன்றி, தம் பலம் முழுவதையும் பிரயோகித்து அழிவை ஏற்படுத்தத் தொடங்கின. ஆயர்பாடி முழுவதும் நாசமாகும்படி பெருங்காற்றுடன் பெருமழையைப் பெய்தன. அப்படி மழை பெய்த ஒரு கணத்தில் பூமியும் ஆகாயமும் திசைகளும் மழைத்தாரைகள் நிறைந்து ஒன்றாகக் காணப்பட்டன.

பிறகு என்னவானது? நாளை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe