
திருப்புகழ் கதைகள் பகுதி 65
திருப்புகழில் இராமாயணம் – வானரர்கள்
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
வாலி வதம் பற்றிய மற்றொரு திருப்புகழில் அருணகிரியார் – ராமர் அடையாளத்துக்காக சுக்ரீவன் கழுத்தில் ஒரு மாலை போட்டு, ‘‘போ! மறுபடியும் போரிடு!’’ என்று அனுப்பியதை சுட்டிக் காட்டுவார்.
காந்தள்ம லர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு
வேந்துகு ரக்கர ணத்தொடு மட்டிடு
காண்டிப அச்சுத னுத்தம சற்குணன் …… மருகோனே
(திருப்புகழ் 266 கூந்தல் அவிழ்த்து – திருத்தணிகை)
வாலி வதம் வேறு சில திருப்புகழ்களிலும் வர்ணிக்கப் படுகிறது.
மாய மானொட ரக்கரை வெற்றிகொள்
வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு
வாளி யேவிய மற்புய னச்சுதன் …… மருகோனே
திருப்புகழ் 113 ஆலகாலம் என (பழநி)
மேலை வானொரு ரைத்தச ரற்கொரு
பால னாகியு தித்தொர்மு நிக்கொரு
வேள்வி காவல்ந டத்திய கற்குரு …… அடியாலே
மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்
மாது தோள்தழு விப்பதி புக்கிட
வேறு தாயட விக்குள்வி டுத்தபி …… னவனோடே
ஞால மாதொடு புக்கவ னத்தினில்
வாழும் வாலிப டக்கணை தொட்டவ
னாடி ராவண னைச்செகு வித்தவன் …… மருகோனே
(திருப்புகழ் 597 ஆலகால படப்பை – திருச்செங்கோடு)
வாலி வதம் முடிந்து விட்டது. சுக்ரீவன் அரசன் ஆனான். தலைமையோடு தாரமும் பெற்ற அவனிட்த்தில், இராமன் ‘‘கார் காலம் (ஆவணி, புரட்டாசி) முடிந்ததும் படைகளுடன் வந்து உதவு’’ என்று சொல்லிச் செல்கிறார். ஆனால் சுக்ரீவன் அந்தப்புர வாழ்வில் தன்னை மறந்தான். கள்ளுண்டு காமக்களியாட்டத்தில் மூழ்கினான். கார் காலம் கடந்தது. சுக்ரீவன் வராததால், ராமர் கோபம் கொண்டார். தம்பியை அழைத்து, சுக்ரீவனுக்குக் கோபத்தோடு எச்சரிக்கை அனுப்பினார்.
மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி
லிருந்து லுத்தநி யோராத தேதுசொல்
மனங்க ளித்திட லாமோது ரோகித …… முன்புவாலி
வதஞ்செய் விக்ரம சீராம னானில
மறிந்த திச்சர மோகோகெ டாதினி
வரும்ப டிக்குரை யாய்பார்ப லாகவ …… மென்றுபேசி
அறந்த ழைத்தநு மானோடு மாகடல்
வரம்ப டைத்ததின் மேலேறி ராவண
னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் …… மைந்தனான
அநங்கன் மைத்துன வேளேக லாபியின்
விளங்கு செய்ப்பதி வேலாயு தாவிய
னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள் …… தம்பிரானே.
(திருப்புகழ் 364 நிறைந்த துப்பிதழ் – திருவானைக்கா)

இராமனின் சினமிகு சொற்களை அருணகிரியார் இப்பாடலில் மிக அழகாகச் சொல்லுகிறார். மேலும் கடலில் பாலம் அமைத்ததையும் இராவணைனை வதம் செய்த்தையும், மன்மதன் திருமாலின் மகன் என்பதையும் இத்திருப்புகழ் பதிவுசெய்கிறது.
இதன் பின்னர் சுக்ரீவன் தனது வானரப் படைகளிடம், ‘‘சில தூதர்கள் மேற்கில் தேடுங்கள். வடக்கே சிலர் தேடுங்கள். சிலர் கிழக்கே தேடுங்கள்!’’ என்று கூறி அனுப்பி வைக்கிறான். இதனை அருணகிரியார்
குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சிலதூதர் நாடுக
குணக்குச் சிலதூதர் தேடுக …… வெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும் …… வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
அரக்கர்க் கிளையாத தீரனு
மலைக்கப் புறமேவி மாதுறு …… வனமேசென்
றருட்பொற் றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவிய …… பெருமாளே.
(திருப்புகழ் 638 உடுக்கத் துகில் – கதிர்காமம்)
சீதையைத் தேடி மூன்று திசைகளுக்கும் படைகள் போயின. தெற்கு திசை மட்டும் பாக்கி. அந்தத் திசைக்கு ஆஞ்சநேயர் அனுப்பப்பட்டார். ஆஞ்சநேயருடன் ஏற்பட்ட முதல் சந்திப்பிலேயே அவரைப் பற்றி முழுமையாக உணர்ந்து கொண்டவர் இராமர்.
அதனால், சீதையைத் தேடிப் போன மற்றவர்களிடம் சீதையைப் பற்றிய அடையாளங்கள் மற்றும் தகவல்களைச் சொல்லாமல் அவற்றை ஆஞ்சநேயரிடம் மட்டும் சொன்னவர், தனது மோதிரத்தையும் அவரிடம் கொடுத்து அனுப்பினார்.
இராமரின் அங்க லாவண்யத்தையும், சீதையைப் பிரிந்ததனால் அவருக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தையும் குறிப்பால் உணர்ந்த மாருதி, ‘இப்படிப்பட்டவரின் மனைவி என்றால், அவர் எப்படி இருக்க வேண்டும்?’ என்றும் குறிப்பால் உணர்ந்து சீதையைத் தேடிக் கிளம்பினார்.
அலை வீசும் கடல் கடந்து, முழு வஞ்சகர்களான அரக்கர்களை வெல்லும் வீரரான ஆஞ்சநேயர், சீதாதேவி இருந்த அசோக வனத்துக்குச் சென்றார். இராமர் தந்த தங்க மோதிரத்தை சீதாதேவியிடம் தந்தார்.
விவரங்களைச் சொன்னார். சீதாதேவி தந்த சூடாமணியைப் பெற்றுவந்து, இராமரிடம் அளித்து சீதையைப் பார்த்த தகவலைச் சொல்லி இராமருக்கு மகிழ்ச்சி ஊட்டினார். தானும் மகிழ்ந்தார்.
நாளை வாயு புத்திரனின் லங்கா தஹனம்.