
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக் குழுவும் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது.
இது, தொழில்முறை சாராத போட்டியாளர்கள் பங்குபெறும் போட்டியாக இருக்கவேண்டும் என்றே இவ்வியக்கத்தை உருவாக்கிய குபர்த்தீன் எண்ணியிருந்தார். ஆனாலும், ஒலிம்பிக் குழு இந்த விதியை மாற்றித் தொழில்முறை விளையாட்டு வீரர்களையும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதித்தது.
மக்கள் ஊடகங்களின் முக்கியத்துவம் வளர்ந்து வந்தபோது, நிறுவன விளம்பர ஆதரவு முறை உருவாகி இப்போட்டிகள் வணிகமயமாக்கப்பட்டன. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் உலகப் போரினால் நடைபெறவில்லை. பனிப்போர்க் காலத்தில் பல நாடுகள் இப்போட்டியைப் புறக்கணித்ததனால், 1980, 1984 ஆண்டுகளில் இடம்பெற்ற போட்டிகள் மட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்புடனேயே நடைபெற்றன.
ஒலிம்பிக் இயக்கம் அனைத்துலக விளையாட்டுகள் கூட்டமைப்பு, தேசிய ஒலிம்பிக் குழுக்கள், ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளுக்குமான ஏற்பாட்டுக் குழுக்கள் என்பவற்றை உள்ளடக்குகிறது.
முடிவுகளை எடுக்கும் அமைப்பு என்ற அளவில், அனைத்துலக ஒலிம்பிக் குழு எந்த நகரில் போட்டிகளை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கின்றது. இவ்வாறு தெரிவு செய்யப்படும் நகரம், ஒலிம்பிக் விதிகளுக்கு ஏற்றவகையில், போட்டிகளை ஒழுங்கு செய்வதற்கும், நிதி வழங்குவதற்குமான பொறுப்பை ஏற்கவேண்டும்.

போட்டிகளில் இடம்பெறும் விளையாட்டுக்களை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பொறுப்பும் அனைத்துலக ஒலிம்பிக் குழுவிடமே உள்ளது. ஒலிம்பிக் கொடி, தீப்பந்தம் போன்ற சின்னங்களும், தொடக்கவிழா, நிறைவுவிழா போன்ற நிகழ்வுகளும் ஒலிம்பிக் போட்டிகளின் பகுதிகளாக உள்ளன. கோடைகால ஒலிம்பிக்கிலும், குளிர்கால ஒலிம்பிக்கிலும் 33 வெவ்வேறு விளையாட்டுக்கள் தொடர்பில் இடம்பெறும் ஏறத்தாழ 400 போட்டிகளில் 13,000க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஒவ்வொரு போட்டியிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் வீரர்களுக்கு முறையே தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
ஏறத்தாழ உலகில் உள்ள எல்லா நாடுகளுமே பங்கேற்கும் அளவுக்கு ஒலிம்பிக் போட்டி வளர்ச்சி அடைந்துள்ளது. இத்தகைய வளர்ச்சி, புறக்கணிப்புகள், போதை மருந்துப் பயன்பாடு, கையூட்டு, பயங்கரவாதச் செயல்கள் போன்றவை தொடர்பான பல சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் போட்டிகளும், அது தொடர்பான ஊடக விளம்பரமும் பல விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலும் சில சமயங்களில் பன்னாட்டு அளவிலும் கூடப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. அத்துடன் போட்டிகளை நடத்தும் நகரமும், நாடும் தம்மை உலகுக்கு வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் ஒலிம்பிக் ஏற்படுத்துகிறது.

நவீன ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் நான்கு முறையும், பிரிட்டனில் மூன்று முறையும், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்சு, கிரேக்கம் ஆகிய நாடுகளில் தலா இரண்டு முறையும், சுவீடன், பெல்ஜியம், ஹாலந்து, பின்லாந்து, இத்தாலி, மெக்சிக்கோ, கனடா, சோவியத் ஒன்றியம், தென் கொரியா, ஸ்பெயின், மக்கள் சீனக் குடியரசு, பிரேசில் ஆகிய நாடுகளில் ஒரு முறையும் நடைபெற்றுள்ளன. ஜப்பானில் இப்போட்டிகள் நடைபெறுவது இது இரண்டாவது முறை.
1992 வரை பனி ஒலிம்பிக்சும் கோடைக்கால ஒலிம்பிக்சும் ஒரே ஆண்டிலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்சை நடத்தினார்கள். அதன்படி தற்பொழுது கோடைக்கால ஒலிம்பிக்சு நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக்சு நடக்கும்.
பனி ஒலிம்பிக்சு, 2014இல் இருசியாவின் சோச்சி நகரில் நடந்து முடிந்தது. அதன் பின்னர் 2018இல் தென்கொரியாவின் ப்யாங்சங்க் நகரில் நடந்து முடிந்தது . அடுத்த பனி ஒலிம்பிக் சினாவின் பீஜிங்கில் 2022 ஆண்டு நடக்க இருக்கிறது.
– ஒலிம்பிக் வீரவரலாறு… தொடரும்…