- ஜெயஸ்ரீ எம்.சாரி
மஹாராஷ்டிர மாநிலத்தில் ‘காந்தி மாவட்டம்’ என்று
அறியப்படும் வர்தாவில் அமைந்துள்ள மஹாத்மா காந்தி அந்தராஷ்டிரிய ஹிந்தி விஷ்வ வித்யாலயாவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆரோக்கிய தீபோற்சவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவினை மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநரான பகத்சிங் கோஷ்யாரி அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கி வைக்கிறார், என்று காதர் நவாஸ் கான், ஹிந்தி பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ஆளுநர் பல்கலைகழகத்தில் உள்ள ‘காந்தி ஹில்ஸ்’ என்னும் இடத்திலிருந்து ஆரோக்கிய தீபோத்ஸவத்தை மாலை ஏழு மணிக்கு துவக்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்பாக ஆளுநர் பல்கலைக்கழகத்தின் கஸ்தூரிபா அரங்கத்தில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான ‘காந்தி தர்ஷன்’ என்னும் மாநாட்டில் பங்கேற்கிறார். டாக்டர் ஸ்ரீநிவாஸ் வராகேடி, கோண்டுவானா யுனிவர்சிட்டி மற்றும் ராம்டெக்கில் இயங்கும் கவிகுல்குரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், நிதிஷ் பரத்வாஜ், நடிகர், மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் புரொபசர் ரஜனீஷ் குமார் ஷுக்ல, துணைவேந்தர், மஹாத்மா காந்தி அந்தராஷ்டிரிய ஹிந்தி விஷ்வவித்யாலயா, தலைமை தாங்குகிறார்.
மஹாத்மா காந்தி அந்தராஷ்டிரிய ஹிந்தி விஷ்வ வித்யாலயாமானது 2019-ஆம் ஆண்டிலிருந்து காந்தி ஜெயந்தி அன்று ஆரோக்கிய தீபோற்சவம் நிகழ்ச்சியினை துணை வேந்தரின் ஆலோசனையின் பேரில் ஏற்பாடு செய்கிறது. வர்தா மக்களும் இந்த நிகழ்ச்சிக்கு பேராதரவு தந்து கொண்டிருக்கின்றனர். நகர வீதிகளிலும் தங்கள் வீடுகளிலும் தீபங்களை ஏற்றி வைத்து மகாத்மா காந்தியடிகளுக்கு தங்கள் அஞ்சலியை செலுத்துகின்றனர்.
இந்த வருடம் தொற்று நோயினால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அனைவரும் விடுபடவேண்டும் என்று நோக்கத்தில் தீப உற்சவம் கொண்டாடப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.