நவராத்திரி சிந்தனைகள்…
நவராத்திரி என்றால் முதல் படி… கொலு! சரி… அதுவும் வைத்தாயிற்று! பாட்டும் சுலோகமும் சுண்டலுமாய் கச்சேரி களை கட்ட வேண்டுமே! மாலை 6 மணி அளவிலாவது தினமும் விளக்கேற்றி வைக்க வேண்டுமே!
கொலு வைத்த முதல் நாளே, வேண்டுதல் அதுவாய்த்தான் இருக்கும். தடையின்றி வீட்டில் விளக்கேற்றப்பட வேண்டும்; ஒளி பரவ… இருள் அகல… தயாபரீ அருள்வாய் என்று வேண்டியபடி… நாமும் கொலு வைப்போம். பிறகு தினமும் சுலோகம், பாட்டு என சுற்றிலும் உள்ள பெண்களை அழைத்து, கலகலப்பான மாலை வேளையை அனுபவிப்போம்..!
சிலர், ஸ்ரீதேவீ மாஹாத்ம்யம் சொல்வர்… சிலருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் ஒன்பது நாளும் பாராயணம் செய்கிறோம் என சங்கல்பம் மனத்தில் ஓடும். சிலர்… ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தை… ந்யாஸம் அங்கந்யாஸ கரந்யாஸங்கள், திக் பந்தனம் என, தியான சுலோகத்துடன் தொடங்கி சிரத்தையாய் பாராயணம் செய்வதும் உண்டு..!
ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் முக்கியமாக/உள்ளுறையாக அமைந்தவை ஸ்ரீமாதாவின் அவதாரம் குறித்த செய்தி. பின்னர் ஸ்தூல சரீர வர்ணனையாக கேதாதி – பாத வர்ணனை. ஸ்ரீநகர வர்ணனை, பண்டாசுரன் வதம், சூட்சும ரூபமாய் உள்ள மந்த்ர ரூபம், குண்டலிணீ ரூபம், நிர்குண உபாசனை, நிர்குண உபாசனையின் பலன், ஸகுண உபாசனை, பஞ்ச ப்ரம்ம ரூபம், க்ஷேத்ர – க்ஷேத்ஜ்ஞ ரூபம், பீடங்கள், அதன் அங்க தேவதைகள், யோகினீ நியாஸம், விபூதி விஸ்தாரம், மார்க்க பேதங்களின் ஸாமரஸ்யம்.. இறுதியாக சிவ-சக்தி ஐக்யம் – இவ்வாறாக ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் அம்பாளின் அழகைச் சொல்லி அருள் தரவல்லதாய்த் திகழ்கிறது.
நவராத்திரி சிந்தனைகள்…
நவராத்திரி நேரத்தில் முக்கிய வழிபாடான அம்பிகையின் சகஸ்ரநாம வழிபாட்டில் என்ன உள்ளடக்கம் என்பது குறித்து பார்த்தோம்… ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணத்தின்போது, நம் மனத்தில் எழும் சில சிந்தனைகளையும் இங்கே தொகுத்துத் தருகிறேன்…
பொதுவாக, நிர்குண, ஸகுண ப்ரம்ம உபாசனை என்பது வழக்கத்தில் உள்ளது. ஸ்ரீதேவி, விஷ்ணு இருவரும் ஸகுண ப்ரம்ம உபாசனையில் வருகிறார்கள். சிவபெருமானை நிர்குண பிரம்ம உபாசனையில் ஆராதிப்பர்.
பகவத் ஆராதனையில், உருவத்தை உள்ளத்தில் இருத்தி உணர்வை அதில் பொருத்தி அதனோடு ஒன்றி லயிப்பது ஒரு முறை. இதற்கு, அந்த தெய்வத்தின் வடிவம், வடிவழகு உள்ளிட்டவை மனத்தில் தோன்றவேண்டும்.
நாம் புறக் கண்ணில் காணும் அழகுப் பொருள்களை அகக் கண்ணில் கண்டு மகிழும் தெய்வத்துக்கு பொருத்திப் பார்த்து, உவமை நயத்துடன் உருவ அழகை தியானித்து லயிப்பது ஒரு கலை. ஸ்ரீகிருஷ்ணன், ராமன், நரஸிம்ஹர்.. இவ்வாறெல்லாம் பெருமானின் வடிவழகை மனம் குளிர உணர்வில் கண்டு வழிபடுவது ஒரு வகை.
வடிவென்று வந்துவிட்டால், அழகும் வர்ணனையும் மிக உயர்ந்த அளவில் இருக்க வேண்டும். ஒப்புமை கூற இயலாத அழகு என்று ஒரு வார்த்தையில் சொல்லி விடலாம்தான்.. ஆனால், எப்படி கவிகளின் சமத்காரத்தை வெளிப்படுத்துவது..? தேவதையின் சிறப்பை உள்ளே புகுத்துவது..?
இது, சாக்த வழிபாட்டிலும் சரி, வைஷ்ணவத்திலும் சரி.. மிக மிக அவசியமான ஒன்றாகிவிடுகிறது. ஆழ்வார்களின் பாசுரங்களில் காணும் ஒப்புமை அழகு ஒரு வித சுவை. ஆதிசங்கரரின் அம்பிகை வழிபாட்டில் காணும் உவமை அழகு ஒரு தனிச்சுவை!
உவமையை மட்டுமே கொண்டு தேவதையை அணுகக் கூடாதுதான்.. ஆனால், அந்த உவமை அந்த தேவதையின் உச்சத்தை நம் உள்ளத்தில் ஏற்றி விட்டிருக்கும் அல்லவா?!
பொதுவாக, ஆலயங்களில் நாம் தெய்வத்தின் திருவுருவை வணங்கும்போது, கற்பூர ஆரத்தி காட்டுவர். விவரம் அறிந்த அர்ச்சகராக இருப்பின், கற்பூர ஜோதியை பெருமானின்/அம்பாளின் சிரம் முதல் பாதம் வரையில் சுற்றிக் காட்டி அந்த அழகை பக்தர்கள் அனுபவிக்க வைப்பர். இதன் முக்கிய சங்கதி… தேவதையின் சிரம் முதல் பாதம் வரையிலான அழகை நாம் அனுபவிக்க வேண்டும் என்பதே!
இதனை கவியாக்கும் போது, வர்ணனைகளைப் புகுத்தி எழுதுவது மரபு. அது தலை முதல் பாதம் வரை என்றால், கேசாதிபாத வர்ணனை என்றும், பாதம் தொடங்கி தலை வரை வர்ணிப்பது என்றால் பாதாதிகேச வர்ணனை என்றும் கூறப்படும்.
தேவதைகளை தியானம் செய்வதில் கேசாதி பாதாந்தமும் பாதாதி கேசாந்தமும் என இரண்டு முறையும் உண்டு. இங்கே ஆண் தெய்வமானால், அதாவது புருஷ ரூபமானால், பாதாதிகேசாந்த வர்ணனையே மரபாகக் கடைப் பிடிக்கப் படுகிறது.
ஸ்ரீவிஷ்ணுவுக்கான வர்ணனை தோத்திரத்தை ஆதிசங்கரர் பாதாதிகேசாந்த வர்ணனையாகவே படைத்தார். ஆனால், ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி தேவிக்கு, கேசம் ஆதி பாதம் அந்தமாக வர்ணனை செய்தார் பகவத்பாதர். எனவே இந்த லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பாளின் வர்ணனை கேசம் தொடங்கி, பாதம் வரையிலான அழகை அருமையாகக் காட்டி அவ்வாறே தியானம் செய்யச் சொல்கிறது.
ஆனால், சிவபெருமானின் வர்ணனை, ஸ்ரீஆதிசங்கரரால் இரண்டு வகையிலும் கையாளப்பட்டிருக்கிறது. சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபமாக அவர் இருப்பதால், இரண்டு விதமாகவும் தியானிக்கப்படுகிறது. எனவே, சிவபெருமானுக்கு பாதாதிகேசாந்தம், கேசாதிபாதாந்தம் என இரண்டு ஸ்தோத்திரங்கள் இயற்றினார் பகவத்பாதர்.
அடுத்து… ஸ்ரீ லலிதா மகாதிரிபுரசுந்தரி தேவியின் அங்க லாவண்ய அழகு வர்ணனை குறித்து சிந்திப்போம்…
நவராத்திரி சிந்தனைகள்…
பெண் தெய்வமாக இருந்தால், கேசம் முதல் பாதம் வரையிலான அங்க லாவண்யத்தை அழகுறப் பாடுவது மரபு என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த மரபைக் கடைப்பிடித்தே, ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்திலும் அம்பாளின் அழகு வர்ணனை திகழ்கிறது.
பிரம்மாண்ட புராணத்தின் நடுநாயகமாக ஒரு மந்திர சாஸ்திரம் போல் அமைந்திருக்கிறது ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்.
ஸ்ரீலலிதோபாக்யானத்தில் ஸ்தோத்ர கண்டத்தில் ஒரு கருவூலமாகத் திகழ்கிறது இது. முதலில் ஸ்ரீமாதாவின் அவதாரம் என, ஸ்ரீலலிதாத்ரிபுரசுந்தரியின் அவதாரம் முன்வைக்கப் படுகிறது.
பரமசிவனுடைய நெற்றிக் கண்ணில் இருந்து கிளர்ந்தெழுந்த கோப அக்னியில், காமதேவன் சாம்பலானான். காமன் இன்றி காரியங்கள் ஏது என்று தேவர்கள் யோசித்தனர். காமனின் செயலால் அன்றோ மனித வர்க்கம் தழைக்கிறது. மனித வர்க்கம் தழைத்தோங்கினால் அன்றோ தேவர்களின் ஹவிர் பாகங்கள் சரியாய்க் கிட்டும்!
ஆக, தேவர்கள் காமனுக்காக இரங்கினர். அவனுடைய சாம்பலை அள்ளி எடுத்து, ஒரு மனிதனின் உருவாகக் கூட்டிக் குழைத்து வைத்தனர். காமதேவனுக்கு உயிர்கொடுத்து, எப்படியாவது மீண்டும் அவனைப் பிழைப்பித்து காரியங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கருதினர். அதன் காரணத்தால், பரமசிவன் முன் நின்றனர்.
தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி, பரமசிவனும் அந்தச் சாம்பலைப் பார்த்தார். அந்த வடிவம் உயிர்த்து எழுந்தது. ஆனால் பழைய மன்மதனாக அல்லாமல், பண்டாசுரன் என்ற கொடிய அரக்க வடிவாக எழுந்தது.
தேவர்களின் ஆசைக்கு நேர் மாறாய், தேவர்களையே அழிக்கத் துணிந்த அந்த அசுரன், மண்ணிலும் விண்ணிலும் உள்ள அனைவரின் வீர்யத்தையும் இழக்கச் செய்தான்.
சோணிதபுரத்தைத் தன் தலைநகராகக் கொண்டு அவன் தேவர்களைப் படாத பாடு படுத்தினான். அப்போது நாரதர், பராசக்தியைக் குறித்துத் தவம் செய்யும்படி தேவேந்திரனுக்கு உபதேசம் செய்தார். இந்திரன் கடுந்தவம் இருந்தான். முடிவில் ஒரு யாகமும் செய்தான். அந்த யாக குண்டத்தில் இருந்து ஸ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரீ தேவி தோன்றினாள். தேவர்கள் கூடி அம்பாளைத் துதி செய்தனர். தேவர்களுக்காக இரங்கிய தேவியிடம் பண்டாசுர வதத்தை வரமாக வேண்டினர் தேவர்கள்.
தேவியை, தங்களை ஆளும் ராணியாக பட்டாபிஷேகம் செய்யவும் விரும்பினர். விவாகம் இல்லாமல் பட்டாபிஷேகம் செய்வது முறை அல்ல என்று பிரம்மா சொல்ல, அவர்கள் பிரார்த்தனைக்கு இணங்கி, தேவி பரமசிவனுக்கு மாலை இட்டாள்.
அதி சுந்தர ரூபம் கொண்டு காமேஸ்வரன் என்ற சிறப்புப் பெயருடன் பரமசிவன் மகாத்ரிபுரசுந்தரியை நாயகியாக ஏற்றார். பிரம்மாதி தேவர்கள், அவர்கள் திருமணத்தை நடத்தி மகிழ்ந்தனர். அவர்களுக்கு சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் செய்வித்து மகிழ்ந்தனர். அவர்களுடைய வாழ்விடமாக மேரு மலையின் உச்சியில் ஸ்ரீநகரம் என்னும் நகரத்தையும் நிர்மானித்தனர்.
அதன் பின்னர் தேவியானவள் தேவர்களின் வேண்டுகோளைப் பூர்த்தி செய்ய எண்ணி, தன் பரிவார சக்திகளுடன் கிளம்பினாள். பண்டகாசுரனை அவனது பரிவாரங்களுடன் எதிர்த்துப் போர் செய்து அவனை வதம் செய்து முடித்தாள் தேவி.
இவ்வாறு, ஸ்ரீமாதாவின் தோற்றம் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் முதலாவதாகக் கூறப்படுகிறது. அடுத்து, அம்பாளின் அழகு வர்ணனை. கேசாதி பாதாந்தமாக!
நவராத்திரி சிந்தனைகள்…
அம்பாளின் அழகினை கேசம் தொடங்கி பாதம் வரையில் ஒவ்வொரு அங்கமாக வர்ணிப்பதை ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் காண்கிறோம்.
உலகிலேயே உனக்கு மிக அழகாகத் தெரியும் பெண் யார் என்று எந்த ஆணிடம் கேட்டாலும், முதல் பதில் அம்மா என்றே வரும். இங்கே அழகு அன்னையின் அன்பினாலும், அக்கறையினாலும், காட்டும் பாசத்தினாலும் உள்ளத்தைக் கொள்ளையிட வருவது. சிலருக்கு அழகாகத் தெரிவது, சிலருக்கு அழகின்றித் தெரியும். எல்லாம் உள்ளத்தின் ஈடுபாட்டைப் பொருத்தது. தோல் கருப்பென்றோ, உடல் இளைப்பென்றோ கண்களுக்குப் புலனாகும் அழகைக் காணாது, உள்ளத்தின் அழகை உணர்ந்து ரசிப்பதாலே உலகம் உய்கிறது. இங்கே அம்பிகையின் அழகு, அவளின் அருள் கடாட்சத்தை முன்னிறுத்திக் காணச் செய்கிறது.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், கேசாதி பாத வர்ணனை என 4ஆவது சுலோகத்தில் இருந்து, அம்பாளின் அழகு ஸ்வரூபம் தியானம் செய்யப் படுகிறது. ஸ்ரீமஹாத்ரிபுரஸுந்தரி எல்லையில்லாத அழகின் உருவமாய்த் திகழ்கிறாள். சுகந்தம் வீசும் சம்பக, புன்னாக, அசோக புஷ்பங்களின் நறுமணத்தை எல்லாம் இயற்கையிலேயே தன்னகத்தே கொண்ட கூந்தல் கற்றையை உடையவள் அம்பிகை.
அவள் நெற்றியில் திகழும் கஸ்தூரி திலகம்… மன்மதனுடைய வீட்டின் தோரணம் போன்ற புருவங்கள்… முகத்தில் உள்ள அழகு வெள்ளத்தில் துள்ளி விளையாடும் மீன்களைப் போன்ற கண்கள்… நட்சத்திரத்தின் பொலிவைப் பழிக்கும்படியான மூக்குத்தியுடன் கூடிய மூக்கு… சூரிய சந்திரர்களே தோடுகளாக விளங்கும் செவிகள்… பத்மராகக் கண்ணாடியைப் பழிக்கும் கன்னங்கள்…
பவழ வாய்; சுத்த வி(த்)தையே முளைத்தது போன்ற அழகிய பல் வரிசை… – இப்படி அம்பிகையின் கட்புலனாகும் முக அழகு வர்ணிக்கப்படுகிறது.
பச்சைக் கற்பூரம் மணக்கும் தாம்பூலம், ஸரஸ்வதியின் வீணா நாதத்தினும் இனிய குரல்.. சொக்கனையும் சொக்க வைக்கும் புன்முறுவல்… – என அங்க அவயங்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் செயல் வெளிப்பாடுகளும் வர்ணிக்கப் படுகிறது.
மங்கல சூத்திரமும் அட்டிகையும் பதக்கமும் விளங்கும் கழுத்து.. காமேச்வரனுடைய விலையற்ற அன்பை விலைக்கு வாங்குவது போன்ற ஸ்தனங்கள்… நாபியாகிற பாத்தியில் இருந்து மெல்லிய கொடி போல் எழும் ரோம வரிசை; மூன்று மடிப்புக்களால் அழகிய வயிறு… சிவப்புப் பட்டாடை… சிறு கிங்கிணிகளுடன் கூடிய அரைஞாண், காமேசுவரன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் துடைகள், ரத்தினக் கிரீடங்கள் போன்ற முழங்கால்கள்… திரண்ட கணுக்கால்… ஆமை முதுகு போன்ற புறங்கால்.. வணங்குவோர் அகத்திருளைப் போக்கும் ரத்தின தீபங்களைப் போன்ற நகங்கள் பொருந்திய திருவடித் தாமரைகள்… – என, பாதத்தின் அழகு ரூப வர்ணனையுடன் கேசாதி பாதாந்தமாக வர்ணனை முடிகிறது.
இவ்வளவு உவமை நயத்துடன் அழகுமிளிரத் திகழும் அம்பிகை, அன்பினால் சிவந்த உள்ளம் போல் அழகினால் சிவந்த திருமேனி உடையவள். அழகு மிக்க ஆபரணங்களுக்கு அழகு செய்யும் அவயங்கள் தோன்ற, அவள் அழகின் பொக்கிஷமாய்த் திகழ்கிறாள். அம்பிகையை விட்டு இணை பிரியாது, அவளின் நாயகனாகிய காமேசுவரனுடைய இடது துடையில் அம்பிகை இன்புற்று அமர்ந்து திகழ்வது, கண் கொள்ளாக் காட்சியளிக்கும் அற்புதத் திருவுருவம்தான் என்று, அம்பிகையின் அழகு ரூபத்தை தியானிக்கச் சொல்கிறது ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்.
அம்பிகையின் ரூப லாவண்ய வர்ணனைக்குப் பின்னர் அம்பிகை தலைவியாகத் திகழும் ஸ்ரீநகரத்தைப் பற்றிய வர்ணனையும், பின்னர் அம்பிகை தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பண்டாசுரனை வதம் செய்யக் கிளம்பும் அழகும், அவளுடன் போருக்கு உடன் கிளம்பும் சக்திகளும் குறித்துக் கூறி, காமேசுவர அஸ்திரத்தால் பண்டாசுரனையும் அவன் நகரையும் தேவி அழிக்கும் காட்சியை வர்ணிக்கிறது. பின்னர் தேவி பரமசிவனாரின் நெற்றிக் கண் நெருப்பால் எரிந்து சாம்பலான மன்மதனை மீண்டும் தன் சக்தியால் உயிர்ப்பித்து, உலகம் உயிர்ப்புடன் திகழ வழி செய்கிறாள்.
அடுத்து… அம்பிகையை தியானிக்கும் மந்த்ர ரூபம், குண்டலினீ ரூபம் குறித்த தகவல்கள் வருகின்றன…
நவராத்திரி சிந்தனைகள்…
ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பிகையின் அழகு, கேசம் தொடங்கி பாதம் வரையில் ஒவ்வோர் அங்கமாக வர்ணிக்கப் படுகிறது. இவ்வாறு அம்பிகையை வர்ணிப்பது, அவளது அழகு ஸ்வரூபத்தை மனக்கண்ணில் நிலை நிறுத்தி, அவளை தியானம் செய்ய ஒரு வடிவத்தை அமைப்பதாகும். இவ்வாறு அம்பிகையை அழகிய வடிவாய் தியானம் செய்யும் போது, சூட்சும ரூபமான மந்திர ரூபத்திலும் தியானிக்கலாம்.
நிர்குண, சகுண உபாசனையிலும் அம்பிகையை வழிபடும் வகைகளும் அடுத்து சொல்லப்படுகிறது. சூட்சும ரூபமே மந்திர ரூபமாகும் என்பதால், பஞ்சதச அட்சரீ மந்திரத்தின் முதல் பகுதியாகிய வாக்பவ கூடத்தை தேவியின் திருமுக மண்டலமாகவும், நடுப் பகுதியாகிய காமராஜ கூடத்தை உடலாகவும், கடைப் பகுதியாகிய சக்தி கூடத்தை இடுப்புக்குக் கீழ்ப் பாகமாகவும் தியானிக்கச் சொல்கிறது.
பஞ்ச தச அட்சரீ என்பது 15 கலைகள், அதாவது 15 அட்சரங்கள் கொண்டது. இதனை காயத்ரி மந்திரத்தைப் போல், குரு முகமாகக் கேட்டு பின்னர் ஜபிக்க வேண்டும் என்பர் பெரியோர்.
இந்த 15 அட்சரங்கள், சிவன், சக்தி, பிருத்வீ, சூர்ய, சந்திர, ஆகாச, இந்த்ர, ஹரி, பரா என்பவற்றுக்கான 9 பீஜங்களும், மன்மதனுக்கான 3 பீஜ அட்சரங்களும், ஒவ்வொரு கூடத்தின் முடிவில் ஒரு புவனேஸ்வரி பீஜமாக மூன்று பீஜங்களைச் சேர்த்து வருபவை… இதுவே பஞ்ச தச அட்சரீ எனப்படும் 15 அட்சரங்கள்.
அடுத்து, குண்டலினீ ரூபத்தின் தியானம்… பிரம்மமானது, தன்னுடைய ஆசைப்படி, தன்னுடைய விருப்பத்தின் கீழ் இந்த உலகு அனைத்தையும் படைத்து, தானே அதனுள் புகுந்திருக்கிறது. ஜீவ சைதன்யம் உடலாகிய பிண்டத்தில் குண்டலினீ சக்தி ரூபத்தில் சுஷும்னா என்னும் நடு நாடியின் அடி நுனியில் மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் சர்ப்பம் போல் அமர்ந்திருக்கும்.
அந்தச் சைதன்யம் விழிப்படைந்து விளக்கமுற்று மேல் நோக்கிச் சென்று சுஷும்னா நாடியில் அமைந்துள்ள ஆறு ஆதார சக்கரங்களையும் மூன்று கிரந்தங்களையும் பிளந்து கொண்டு, சஹஸ்ராரத்திலுள்ள சச்சிதானந்த ரூபமான பரமசிவத்துடன் ஐக்கியமாகி அப்போது உண்டாகும் அம்ருதத்தைப் பருகிக் கொண்டு பரம்பொருளோடு வேறுபாடு அற்றதாய், சிவானந்தத்தில் திளைத்திருக்கும். யோகத்தின் லட்சியம் இதுதான்.
ஜீவ சைதன்யமாய் குண்டலினீ ரூபமாய், ஒவ்வொரு சரீரத்திலும் இருப்பவள் பராசக்தியே. பரமசீவன் ஜீவ சிவன் ஆவதும், அதாவது… அவரோஹணமாய்… மேலிருந்து கீழ் நோக்கி வந்து ஜீவ சிவன் ஆவதும், மறுபடி ஜீவ சிவனை பரம சிவன் நிலைக்கு ஏற்றுவிப்பதும், அதாவது ஆரோஹணமாய் கீழீருந்து மேல் நிலைக்கு உயர்த்துவதும் தேவியின் திருவிளையாடலே என்கிறது லலிதா சஹஸ்ரநாமம்.
இவ்வாறு அம்பிகையை தியானம் செய்த பின்னர், அம்பிகை பக்தர்களுக்கு எவ்வாறு அனுக்ரஹம் செய்கிறாள் என்பதை இப்படிக் கூறுகிறது லலிதா சஹஸ்ரநாமம், பக்த அனுக்ரஹம் என்ற தலைப்பில்!
சம்ஸாரம் – என்பது, வழி தெரியாத முள் வனம் போன்றது. அதில் துணையின்றிப் புகுந்தவர்க்கு அது மிகுந்த துன்பம் தருவது. அத்துன்பத்தை நீக்கி பயத்தைப் போக்கி, பேரின்ப வீட்டுக்கு அழைத்துச் சென்று அமுது ஊட்டுபவள் அன்னை பராசக்தி. அழும் குழந்தைக்கு தாய் இரங்குவது போல் அன்புடன் தன்னை நினைப்பவர்க்கு அவருடைய தகுதியைக் கருதாது, அவள் அருள் சுரக்கும். அவளை வழிபடுவார்க்கு இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை…. – என்று பக்தர்களுக்கு அம்பிகை எவ்வாறு மனம் இரங்கி அருள்வாள் என்பதைக் கூறுகிறது லலிதா சஹஸ்ரநாமம்.
தாயின் கருணை உள்ளம், எந்த தர்மமும் சொல்லி வருவதில்லை. அத்தகைய இளகிய மனம் கொண்ட அம்பிகையை தியானித்து அருளைப் பெற இந்த நவராத்திரி மிகவும் உகந்தது.
- செங்கோட்டை ஸ்ரீராம்