
திருப்புகழ்க் கதைகள் – 176
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கருவின் உருவாகி – பழநி
நமச்சிவாய வாழ்க
சிவபெருமான் பாவத்தை அழிப்பவர். எனவே பாவத்திலிருந்து விடுபட, பரகதி அடைய நமச்சிவாய என நினைப்பதே சிறந்த வழியாகும்.
“நாக்கைக் கொண்டு அன் நாமம் நவில்கிலார்” — அப்பர்
அரகரா என்று அன்புடன் ஓதுபவர்க்குக் கிடைக்கத்தகாத பொருள் மூவுலகங்களிலும் இல்லை. அரகர என்பார்களுக்கு அரிய செயல் ஒன்றுமில்லை. அரகர என்போர் தேவர்களுமாகிய பிறங்கிப் பெருமிதம் உறுவர். அரகர என்று அனுதினமும் ஓதுவார்க்குப் பிறவி நோயும் எளிதில் நீங்கும்.
அரகர என்ன அரியது ஒன்று இல்லை,
அரகர என்ன அறிகிலர் மாந்தர்,
அரகர என்ன அமரரும் ஆவர்,
அரகர என்ன அறும் பிறப்பு அன்றே. (திருமந்திரம்)
சிவாய என்பது திரு அட்சரம். சிவாய என்று உச்சரித்தவுடன் மன மாசுகளும் மல மாசுகளும் நீங்கி வரம்பிலா வாழ்வு பெறுவார்.
சிவாயம் எனு நாமம் ஒருகாலும் நினையாத
திமிராகரனை வா என்று அருள்வாயே (அவாமரு திருப்புகழ்)
சிவாயவொடு அவ்வே தெளிந்து உள்ளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவன்உரு ஆகும்,
சிவாயவொடு அவ்வுத் தெளிய வல்லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்து இருந்தாரே. (திருமந்திரம்)
ஆதலால், பிறவிப் பிணியை நீக்கிப் பிறவாப் பெற்றியைப் பெறுதற்கு அவாவும் பேரன்பர்கள் எக்காலமும் இம் மந்திர சிரோமணியைத் இடைவிடாது சிந்தித்தால் செம்மேனிப் பெம்மான் திருவருள் துணைசெய்வார்.
சைவ சமயத்திற்குள் அகச் சமயங்கள் ஆறு உள்ளனர். அவை: சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம் என்பன. இவையேயுமன்றி வைதிக சமயங்கள் ஆறும் உள்ளன. இவை: சைவம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சாத்தேயம், சௌரம் என்பன.
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாண மின்றி …… யழிவேனோ
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த …… மருகோனே
என்ற வரிகளில் அருணகிரியார் உயிர்க்கு உறுதி பயக்கும் சன்மார்க்க நெறியைச் சார்ந்து அந்நெறியில் தம்மை உய்க்கும் சான்றோர்களது தலைவாசலில் சென்று நிற்க வேண்டும். அவ்வாறு நிற்காமல் கேவலம் வயிற்றை வளர்க்கும் பொருட்டு பிச்சைச் சோறு இடுவோர் தலைவாசலில் போய் நாள்தோறும் நிற்பது வெட்கக்கேடாம். உடற்பசியை நீக்க முயல்வதோடு உயிர்ப் பசியை நீக்கவும் விரைந்து முயலுதல் வேண்டும். இதனை பாம்பன் சுவாமிகள் இரை தேடுவதோடு இறையையும் தேடு எனக் கூறுவார். திருமாலைப் பற்றி உரகபட மேல் வளர்ந்த பெரிய பெருமாள் எனப் பாடுகிறார். உரகமென்பது குண்டலி சக்தி. அதன்மீது பகவான் பள்ளி கொண்டு யோக நித்திரை செய்கின்றார். அவர் அவ் அறிதுயில் செய்கின்றதனால் உலகில் உயிர்கள் இன்புறுகின்றன. அத்தூக்கமே பேரின்ப நிலையாம். இந்தத் தூக்க நிலை பற்றி திருமூலர்,
தூங்கிக் கண்டார் சிவலோகம் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவ யோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வது எவ்வாறே. (திருமந்திரம்)
என்று கூறுவார். இதற்கடுத்து வருகின்ற உலகு அளவு மால் என்ற தொடர் மூலம் அருணகிரியார் வாமானாவதாரக் கதையைச் சொல்லுவார். அது என்ன? நாளை காணலாம்.