spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: குழல் அடவி (பழநி)

திருப்புகழ் கதைகள்: குழல் அடவி (பழநி)

- Advertisement -
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 188
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

குழல் அடவி – பழநி 1

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றிநாற்பத்தியேழாவது திருப்புகழ், ‘குழல் அடவி’ எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “முருகா, மாதரைப் புகழ்ந்து திரிந்து உழலாமல், அடியேனை ஆட்கொண்டு அருள்வாயாக” என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல்
குமுத வதரமு …… றுவலாரம்

குழைம கரம்வளை மொழிகு யிலமுது
குயமு ளரிமுகை ……கிரிசூது

விழிக யலயில்ப கழிவ ருணிகரு
விளைகு வளைவிட …… மெனநாயேன்

மிகவ ரிவையரை அவநெ றிகள்சொலி
வெறிது ளம்விதன …… முறலாமோ

கழல்ப ணியவினை கழல்ப ணியையணி
கழல்ப ணியவருள் …… மயில்வீரா

கமலை திருமரு கமலை நிருதரு
கமலை தொளைசெய்த …… கதிர்வேலா

பழனி மலைவரு பழநி மலைதரு
பழநி மலைமுரு ……கவிசாகா

பரவு பரவைகொல் பரவை வணஅரி
பரவு மிமையவர் ……பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – அடியேன் முன் செய்த வினைகள் நீங்குமாறு, வீரக்கழல் தண்டை முதலிய அணிகலன்கள் விளங்கும், திருவடியைப் பணியும்படி அருள் புரிந்த மயில் வீரரே. தாமரையில் வாழும் திருமகளின் திருமருகரே. மலைகளில் வசித்த அரக்கர்கள் அழிய அம்மலைகளைத் துளைத்த ஒளிமிக்க வேலாயுதரே. பழம் போன்றவரும், இமயமலையில் அவதரித்தவரும், பழைமையானவரும் மலம் இல்லாதவரும் ஆகிய உமாதேவியார் பெற்றருளிய பழநி மலையில் வாழும் முருகக் கடவுளே. விசாக மூர்த்தியே. பரந்துள்ள கடலின் மீது கணையை விடுத்து அடக்கிய கடல் வண்ணராகிய அரி நாராயணர் பரவித் துதி செய்கின்ற, தேவர் போற்றும் பெருமிதம் உடையவரே.

கூந்தலானது காடு, மேகம், பொழில் என்றும், நெற்றி வீர வில் என்றும், மகரக்குழை தரித்த செவி வள்ளி இலை யென்றும், சொல் குயில், அமுதம் என்றும், தனம் தாமரை அரும்பு, மலை சூதுக் கருவி என்றும், கண் மீன், வேல், கணை, கடல் காக்கட்டான் மலர், நீலோத்பலம், விடம் என்றும் பெண்களுடைய அவயங்களை வீணான வழிகளில் அடியேன் மிகவும் புகழ்ந்து கூறி, வெறுமையாக உள்ளம் துக்கப் படலாமோ?

arunagiri muruga peruman
arunagiri muruga peruman

இத் திருப்புகழில் புலவர்கள் பெண்களின் கூந்தல், புருவம், இதழ், பல், காது, சொல், தனம், கண் முதலிய உறுப்புக்களைப் பல உவமைகள் கூறிப் புகழ்ந்து பாடுவதைத் தான் பாடி, அவமே கெடுவதாகக் கூறிக் கண்டிக்கின்றார். உண்மையில் அருணகிரியார் அவ்வாறு பாடவில்லை. ஆயினும் மக்களின் குற்றங்களை மாதா பிதாக்கள் தாம் தம் மீது ஏற்றி வருந்துவது போல், உலகவர் குற்றங்களைப் பரமஞானத் தந்தையாகிய அருணகிரிநாதர் தன் மீது ஏற்றிக்கொண்டு பாடுகின்றார்.

இத்திருப்புகழின் பிற்பகுதியில் சுவாமிகள் தமது அருட்புலமைத் திறத்தை வெளிப்படுத்துகின்றார். கழல் பணிய, கமலை, பழநிமலை என்ற மூன்று சொற்றொடர் மூன்று முறை வருமாறும் வெவ்வேறு பொருள் அமையுமாறும் இந்தத் திருப்புகழின் வரிகளில் அருணகிரியார் அமைத்துப் பாடுகின்ற திறம் அற்புதமானது.

இந்தக் கவிதை நயத்தை பார்ப்போம்

கழல்ப ணியவினை கழல்ப ணியையணி
கழல்ப ணியவருள் …… மயில்வீரா

என்ற வரியில் கழல் பணிய என்ற சொற்றொடரை மும்முறை மூன்று வெவ்வேறு பொருள்படுமாறு அமைத்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். முதலில் வருவது பணிய வினை கழல், அதாவது பண்ணின வினைகள் கழல, (நீங்குமாறு); இரண்டாவதாக வருவது கழல் பணியை அணி, அதாவது வீரக் கழலையும் தண்டை முதலிய ஆபரணங்களையும் அணிந்துள்ள; மூன்றாவதாக வருவது கழல் பணிய அருள், அதாவது திருவடியைப் பணியும்படி அடியேனுக்கு அருள்புரிந்த; இவ்வாறு கழல் பணி என்பதை மூன்று வகையாக அருணகிரியார் பயன்படுத்தியிருக்கிறார்.

இவ்வரிகளுக்கு முன்செய்த வினைகள் நீங்குமாறு இறைவனுடைய திருவடிகளை வணங்குவதனால் பழைய வினைகள் நீங்கும் என்பது பொருளாகும். இதனை

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

என திருவாசகத்தில், மாணிக்கவாசகர் அச்சோபதிகத்தில் பாடுவார். மேலும் முந்திய வினைகள் எல்லாம் ஓய அவந்தாள் வணங்குதலும் அவனருளால்தான் என்பதையும் சிவபுராணத்தில்

சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பனியான்
கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழிலிறைஞ்சி

என்று மாணிக்கவாசகர் பாடுவார்.

அடுத்து கமலை திருமரு கமலை நிருதரு கமலை தொளை செய்த என்ற வரியில் முதலில் வருவது கமலை திருமருக என்பதாகும். அதாவது தாமரையில் வாழ்கின்ற இலட்சுமிதேவியின் அழகிய மருகரே என்று பொருள்தரும். அடுத்துவரும் சொற்களை மலை நிருதர் உக மலை தொளை செய்த என்று பதப் பிரிவு செய்ய வேண்டும். அதாவது மலைகளில் வசித்த அசுரர்கள் அழியுமாறு அம்மலைகளை முருகப் பெருமான் வேற்படையால் தொளைத்தருளினார் என்பது இதன் பொருளாகும்.

மற்றொரு வரியில் பழநி மலை வரு பழ நிமலை தரு பழநிமலை முருக என்று பாடுகிறார். முதலில் வருகின்ற பழநி மலை வரு என்ற சொற்றொடருக்கு பழ-பழம் (கனி) போன்றவரும், மலை வரு-இமயமலையில் அவதரித்தவரும் என்று பொருள்கொள்ள வேண்டும். இரண்டாவதாக வரும் பழ நிமலை தரு என்ற சொற்றொடருக்கு பழ-பழைமையுடையவரும், நிமலை-மலமில்லாதவரும் ஆகிய உமாதேவியார். தரு-பெற்றருளிய எனப் பொருள்கொள்ள வேண்டும். மூன்றாவதாக வரும் பழநிமலை முருக என்ற சொற்றொடருக்கு பழநிமலையில் வாழ்கின்ற முருகவேளே என்று பொருள் கொள்ள வேண்டும்.

அடுத்து பரவு பரவைகொல் பரவை வணஅரி பரவு மிமையவர்
என்ற வரியில் முதலில் வரும் பரவு பரவைகொள் என்ற சொற்றொடரில் பரவை என்ற சொல் கடலைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கெ இராமர் சேது பந்தனம் செய்தது பற்றிய குறிப்பு இருக்கிறது.

இதனைப் பற்றி நாளை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe