spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: தேய்ந்தான்... வளர்ந்தான்..!

திருப்புகழ் கதைகள்: தேய்ந்தான்… வளர்ந்தான்..!

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் பாகம் 315
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தேய்ந்தான், வளர்ந்தான் ரிபீட்டு

     தக்ஷப்பிரஜாபதிக்குப் பிறந்த பெண்களில் அசுவினி முதல் ரேவதி வரையுள்ள இருபத்து ஏழு பெண்களும் சந்திரனுக்கு மணம் செய்து கொடுக்கப்பட்டனர். சந்திரன் தன் மனைவியர் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாக அன்பு காட்டவில்லை. அவர்களுள் ரோகிணி என்பவளிடமே அவனுக்கு அதிகப் பிரியம். அவளிடமே அவன் அதிகமாக இருக்கத் தொடங்கினான். இது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. கணவனிடம் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு வந்து தக்ஷனிடம் முறையிட்டனர். தக்ஷன் சந்திரனை அழைத்துப் பேசினான். சத்குலத்தில் பிறந்து கலாநிதி எனப் பெயர் கொண்டுள்ள அவன், மனைவியர் இருபத்து ஏழு பேரில் ஒருத்தியிடம் மட்டும் அதிகப் பிரியம் கொண்டிருப்பது அழகல்ல”, என்று எடுத்துரைத்து அனேக புத்திமதிகள் சொன்னான்.

     சந்திரனோ மாமனாரின் வார்த்தைகளைக் கொஞ்சமும் ஏற்கவில்லை. தன் போக்குப்படியே நடந்து வந்தான். அதைக் கண்ட தக்ஷன் பெரிதும் கோபம் கொண்டான். நியாயமற்ற முறையில் சந்திரன் நடந்து கொள்வதை விரும்பாத தக்ஷன் அவன் கலைகள் குறைய வேண்டுமென்று சாபம் கொடுத்து விட்டான். தக்ஷன் அளித்த சாபம் அந்த க்ஷணமே சந்திரனைப் பீடித்தது. சந்திரனின் கலைகள் குறையத் தொடங்கியதும் அவன் பிரகாசம் மங்கி விட்டது. சந்திரனுக்கு நேர்ந்த கதியைக் கண்டு தேவர்கள் திடுக்கிட்டனர். எல்லோரும் பிரம்ம தேவனிடம் சென்று சந்திரனை மன்னித்து அவன் சாபம் நீங்க அருளுமாறு வேண்டினர்.

     “தேவர்களே! தக்ஷன் கொடுத்த சாபத்தை மாற்றும் சக்தி எனக்கில்லை. சந்திரன்மீது தவறு இருக்கும்போது நாம் குறுக்கிடுவது நியாயமுமல்ல. சந்திரனின் போக்கே இப்படித்தான். முன்பொரு முறை பிரகஸ்பதியின் மனைவியான தாரையிடம் மோகம் கொண்டு அவளை அடைய வேண்டுமென்று விரும்பி கவர்ந்து சென்றான். அத்துடன் பிரகஸ்பதியின் கோபம் தன்னை ஒன்றும் செய்யாதிருக்க அவரோடு சண்டைக்கு வந்து விட்டான். தேவர்கள் ஓடிச் சென்று அவன் தந்தையான அத்திரி முனிவரை அழைத்து வந்தனர். அவர் வந்து நல்ல வார்த்தைகள் சொன்னதும், தாரையைக் கொண்டு வந்து பிரகஸ்பதியிடம் விட்டான். அவரோ தாரை கருவுற்றிருக்கிறாள் என்றும் களங்கமுடையவளை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் கோபித்தார். குழந்தை பிறந்ததும் தாரையைப் புனிதமாக்கிப் பிரகஸ்பதியிடம் சேர்ப்பிப்பதற்குள் பெரும் கஷ்டமாகி விட்டது. தவறுக்கான தண்டனையை அனுபவித்தால்தான் திருந்த முடியும்” என்றார் பிரம்மதேவன்.

     “பிரபோ, அவ்வாறு சொல்லக்கூடாது. சந்திரனின் கலைகள் குறைவதால் பூலோகவாசிகள் கஷ்டப்பட நேரும். அவன் செய்த தவறுக்குத் தகுந்த பரிகாரம் சொன்னால் அதைச் செய்யும்படி அவனிடம் கூறுகிறோம்” என்று வேண்டினர் தேவர்கள்.

     பிரபாச க்ஷேத்திரத்துக்குச் சென்று சிவலிங்கத்தைப் பூஜை செய்து மிருத்தியுஞ்சய மந்திரத்தை ஜபித்து வருவானாகில் பகவான் அவனுக்கு அருளக் கூடும்” என்று பிரம்மதேவன் தெரிவித்தார். பிரபாச பட்டினம் அல்லது சோமநாதபுர பட்டினம் என்று அழைக்கப்படும் இக்கடற்கரை நகரம், குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிர தீபகற்ப பகுதியில், கிர்சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் ஜோதிர்லிங்க கோயிலான சோமநாதர் கோயில் அமைந்துள்ளது. கிர்சோம்நாத் மாவட்ட தலைமையகமான வேராவல் நகரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அரபிக் கடலை ஒட்டி உள்ளது. இந்நகரம் இந்து புனிதத் தலங்களில் ஒன்று.

     “அருச்சுனன் தீர்த்த யாத்திரையின் போது ஸ்ரீகிருஷ்ணரை பிரபாச பட்டினத்தில் சந்தித்து, சுபத்திரையை மணந்தார். ஸ்ரீகிருஷ்ணர், தமது அவதார முடிவு நெருங்கும் நேரத்தில் பிரபாச பட்டினத்தில் இருந்தார். ஒரு வேடுவனின் அம்பு கிருஷ்ணரின் காலில் குத்தியதால் இறந்தார்” என்று பாகவத புராணத்தின் மூலம் தெரியவருகிறது. பிரபாச பட்டினம் அருகே அமைந்துள்ள ஹிரண், சரஸ்வதி மற்றும் கபிலா என்ற மூன்று புனித ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு திரிவேணி சங்கமம் என்று பெயர். சோமநாதரை வழிபடுவதற்கு முன் இத்திருவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடாடுவர். சமண சமயத்தின் 8வது தீர்த்தங்கரர் சந்திரபிரபாவின் கோயில் இங்கு அமைந்துள்ளது.

     தேவர்கள் சந்திரனை அழைத்து பிரபாச க்ஷேத்திரம் சென்று சிவபூஜை செய்யுமாறு தெரிவித்தனர். சந்திரன் அவர்கள் கூற்றுப்படி பிரபாச க்ஷேத்திரத்தை அடைந்தான். அங்கே உள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி நியம நிஷ்டைகளோடு சிவலிங்கத்தில் பகவானைத் தியானித்துப் பூஜைகள் செய்தான். பின்னர் நிர்மலமான உள்ளத்தோடு மிருத்தியுஞ்சய மந்திரத்தை ஜபித்து வந்தான். ஆறு மாதங்கள் சென்றன. ஈசன் மகிழ்ச்சியடைந்தவராய் சந்திரன் முன் தோன்றினார்.

     “சந்திரா, உனக்கு வேண்டியது என்ன?” என்று கேட்டார். “பிரபோ, தக்ஷப் பிரஜாபதியின் சாபம் காரணமாக நான் கலைகள் குறைந்து பிரகாசமின்றி இருக்கிறேன். என் பிரகாசம் முன்னைப் போல் ஆக அருள வேண்டும்” என்று கோரினான் சந்திரன். “அந்தண சாபம் மாற்ற முடியாதது அன்றோ, இருப்பினும் அதில் ஒரு மாற்றம் செய்கிறேன். உன் கலைகள் பதினைந்து தினங்கள் குறைந்து கொண்டே வரும். பின்னர் பதினைந்து தினங்களுக்கு அது வளர்ந்து வரும்” என்று சிவபெருமான் அனுக்கிரகித்தார். மேலும் அவனது மூன்றாம் பிறை வடிவை தனது சிரசில் ஆபரணமாக அணிந்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe