— ஆர். வி. ஆர்
நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. “யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை மக்கள் முடிவு செய்வதுதான் இந்தத் தேர்தலின் குறிக்கோள் – யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதல்ல” என்று ஒருவர் பிதற்றினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? சிரிப்பீர்கள். அவரே, தமிழக முதல்வர் ஸ்டாலினாக இருந்தால்? சற்றுப் பெரிதாக சிரிப்பீர்கள்.
சமீபத்தில் ‘ஹிண்டு’ ஆங்கிலப் பத்திரிகைக்கு ஸ்டாலின் அளித்த ஒரு பேட்டியில்தான் அவர் இப்படிப் பேசி இருந்தார்.
ஒரு பதவிக்குப் பலர் ஆசைப்படும்போது, அதற்காக அவர்கள் போட்டியிடும்போது, போட்டியாளர்களில் அந்தப் பதவிக்குத் தகுதியானவர் யார் என்பதை சம்பத்தப்பட்டவர்கள் ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்யும் வழிமுறை தேர்தல். இதை ஆங்கிலத்தில் elect (எலெக்ட்) செய்வது என்றும், இந்த வழிமுறையை election (எலெக்ஷன்) என்றும் சொல்கிறோம்.
ஜனநாயகத்தில் பெரும்பான்மை பெற்ற ஒரு அணியையோ அல்லது கட்சியையோ அரசு ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தும் முறை இருக்கிறது, அந்தப் பெரும்பான்மை தேர்தல் மூலமாகத் தீர்வு செய்யப்படுகிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர் மத்தியில் ஆட்சி அமைக்கிறார்.
மக்கள் ஓட்டுப் போட்டு, தேர்தல் மூலம் ஒரு பதவிக்கு ஓருவர் தேர்வானால் – கவுன்சிலராகவோ, சட்டசபை உறுப்பினாராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினாராகவோ – அதன் மறுபக்கமாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்றவர்கள் தேர்வாகவில்லை என்று ஆகிவிடுகிறது. ஆனால் தேர்தலின் நோக்கம் என்ன? யார் ஒருவர் தேர்வாகிப் பதவிக்கு வந்து செய்யலாற்ற வேண்டும் என்பதா? அல்லது ஸ்டாலின் சொல்ல வருவது போல், எந்தப் போட்டியாளர் தோற்றுப் போகவேண்டும் என்று முதலில் தீர்மானிக்கப் பட்டு, எஞ்சியவர்களில் ஒருவர் – அந்த மனிதர் எப்படியானவராக இருந்தாலும் – ஜம்மென்று பதவி நாற்காலியில் அமர்ந்து அவருக்குத் தோன்றுகிற, அவரால் முடிகிற, வேலைகளைப் பார்க்கட்டும் என்பதா?
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இன்னும் புரியவில்லையா? சரி, அவருக்காகத் தேர்தலின் நோக்கத்தை இப்படி விளக்கலாம்.
தேர்தல் என்பது ஒரு வகையில் ஓட்டப் பந்தயம் மாதிரி. ஓட்டப் பந்தயத்திற்கு ஒரு நடுவர் உண்டு. அவர் என்ன செய்வார்? ஓடும் விளையாட்டு வீரர்களில் யார் முதலில் எல்லைக் கோட்டைக் கடந்தார் என்று பார்த்து, எந்த விளையாட்டு வீரர் ஜெயித்தார், இரண்டாவதாக, மூன்றாவதாக வந்த வீரர்கள் யார் யார் என்றும் பார்த்து, போட்டியின் முடிவுகளை நடுவர் அறிவிப்பார்.
எந்த ஓட்டப் பந்தயமும் நடப்பது எதற்கு? தோற்பவர் யார், அதுவும் மிகக் கடைசியில் வருபவர் யார், என்று தீர்மானித்து அதை அனைவரும் தெரிந்துகொள்ளவா? அல்லது, எந்த விளையாட்டு வீரர் முதலாவதாக வரப் போகிறார் என்று பார்த்து அவருக்குத் தங்கப் பதக்கம் அளித்து கவுரவிப்பதா?
முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாதா? அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் காரண காரியமாகத் தனது பேட்டியில் இப்போது பிதற்றி இருக்கிறார். இதே பிதற்றலை அவரது ‘இண்டி’ கூட்டணியின் மற்ற தலைவர்களும் வேறு வழியில்லாமல் பல சமயங்களில் பேசி இருக்கிறார்கள்.
நடக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களை வென்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறை மத்தியில் ஆட்சி அமைக்கும், பாஜக-வின் நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமர் ஆவார் என்பது நாடு முழுவதும் பரவலான எதிர்பார்ப்பு மற்றும் கணிப்பு. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்றிருக்கின்றன. மோடியை எதிர்த்து, பாஜக-வை வென்று, மத்தியில் தாங்கள் கூட்டாக ஆட்சி அமைக்க முடியும் என்று ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூட நம்பவில்லை.
திமுக, காங்கிரஸ் என்று ‘இண்டி’ கூட்டணியில் 28 கட்சிகளோ என்னவோ இருக்கின்றனவாம். அந்தக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் நரேந்திர மோடியின் மத்திய அரசாங்கத்தால், அதன் சிறந்த நடவடிக்கைகளால், பத்து வருடங்களாக எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. கஷ்டத்தையாவது தாங்கலாம், நஷ்டத்தைச் சொல்லவும் முடியவில்லை, நீண்ட காலம் தாங்கவும் முடியவில்லை. அவர்களின் நஷ்டம், அவர்களின் வேதனை, அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
தனித் தனியாக மோடியை எதிர்த்து மாளவில்லை என்பதால் கூட்டுசேர்ந்து, கசப்புடன் தமக்குள் தொகுதிகளைப் பங்கீடு செய்துகொண்டு, பாஜக-வை இந்தத் தேர்தலில் எதிர்க்கின்றன ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள். ஆனாலும், இந்தத் தேர்தலில் தங்கள் கூட்டணி ஜெயித்தால் தமக்குள் இன்ன கட்சியின் இன்ன தலைவர்தான் பிரதமராக வருவார் என்று இந்தக் கூட்டணிக் கட்சிகள் எதையும் தங்களுக்குள் ஏற்றுக் கொண்டு அறிவிக்கத் தயாரில்லை. காரணம்: தான் பிரதமராக வந்தால் தனக்கு அதிக லாபம், தனக்கு அதிகப் பயன், என்று அந்தக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். பிறகு அந்த மகா பெரிய அனுகூலத்தைக் கூட்டணியில் உள்ள மற்ற ஒரு கட்சியின் தலைவருக்கு முன்னதாகவே தாரை வார்த்துவிட அந்தக் கூட்டணித் தலைவர்கள் என்ன மக்குகளா? இப்போது விட்டுக் கொடுத்தால் அடுத்த சான்ஸ் கிடைக்குமா, எப்போது கிடைக்கும் என்று யாருக்குத் தெரியும்?
தமக்குள் பிரதமர் வேட்பாளர் யார் என்று ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவிக்க முடியாததால், அதை நேரடியாகச் சொல்லவும் முடியாமல், ‘இந்தத் தேர்தல் நடப்பது, யார் ஜெயித்து வரக் கூடாது என்பதற்காக’ என்று அந்தக் கூட்டணித் தலைவர்கள் ஏதோ பிதற்றி மகிழ்கிறார்கள். அப்படிப் பேசி, தங்களின் தீராத பரஸ்பரப் போட்டியையும் பொறாமையையும் மறைக்க முனைகிறார்கள். அதுதான் விஷயம்.
‘நமது கூட்டணியோ ஜெயிக்கப் போவதில்லை, நமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை. நம்மில் எவரும் பிரதமர் ஆகப் போவதில்லை. நம்மில் எவருக்கும் கிடைக்க முடியாத வெற்றிப் பழத்திற்கு நாம் ஏன் முன்னதாக அடித்துக்கொள்ள வேண்டும்?’ என்ற நடைமுறை சிந்தனைதான், ஸ்டாலினும் மற்ற ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஒற்றுமையாக ஒரே மாதிரிப் பிதற்றி வருவதின் காரணம்.
ஏதோ இந்த வரையிலாவது ‘இண்டி’ கூட்டணித் தலைவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள் என்று நினைத்து நாம் மீண்டும் ஒரு முறை சிரித்துக் கொள்ளலாம். வேறென்ன?
Author: R Veera Raghavan, Advocate, Chennai
([email protected])
https://rvr-india.blogspot.com