
- ஜெயஸ்ரீ எம். சாரி
சிட்லப்பாக்கம் ரைசிங் சாரிடபிள் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தமிழக ஆளுநர் விருது -2024 குடியரசு தினத்தன்று வழங்கப்பட்டது.
ஒரே எண்ணம் கொண்ட மனிதர்களின் செயலானது சமுதாயத்திற்கு உதவும் விதமாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த அமைப்பு உள்ளது.
திரு. சுனில் ஜெயராம், திரு. தயானந்த் கிருஷ்ணன், திரு. வைத்தியநாதன், திரு. முரளி,ஆசிரியர், இலக்கியச் சாரல் , திரு. ராம் குமார், திரு. ஆனந்த், திரு. ஜெய், திருமதி. உதயவாணி, திரு. சுதாகர்,திரு. சுஜய், திரு. பிரகாஷ் செல்வி. சஞ்சனா மற்றும் பலரை முக்கிய உறுப்பினர்களாய் கொண்ட சிட்லப்பாக்கம் ரைசிங் சாரிடபிள் டிரஸ்டின் முயற்சிகள் இவை.
100 ஏக்கர் பரப்பளவில் இருந்த சிட்லப்பாக்கம் ஏரி ஒரு காலத்தில் விவசாய பாசனத்திற்கும் பயன்பட்டு வந்தது. மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததையும், எதிர்கால தலைமுறையினருக்கு நீரின் தேவை பற்றிய அக்கறை இல்லாததாலும் ஒரு சிலர் ஏரியை பல்வேறு வகைகளில் ஆக்ரமித்து இருந்தனர்.
ஏரியின் பரப்பளவும் 50 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கிப் போனது. ஏரி முழுவதும் ஆகாயத் தாமரைகளாலும், மக்காத பிளாஸ்டிக் பொருட்களாலும் எதற்கும் உபயோகப் படுத்த முடியாத அளவில் இருந்தது. மேலும் தரை மட்டத்திற்கு கீழே சுமார் 10 அடியும், தரை மட்டத்திற்கு மேலே சுமார் 20 அடி உயரமும் குப்பை மேடாக இருந்தது. மேலும் அந்த குப்பையை எரிக்கவும் புகைப்போக்கி ( insilator ) அமைத்தனர். இதானால் பெரும் துர்நாற்றம் வீசி மக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட பல நோய்களுக்கு உள்ளாகினர்.
காற்று, நீர் எனஎல்லாமே மாசுபட்டது. மேலும், பலமுறை முறையிட்டும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். அதோடு சேர்ந்தே கோடைக்காலத்தில் நீர் பற்றாக்குறை. அத்தியாவசிய தேவைகளுக்கே நீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய தூர்பாக்ய நிலை. மழை காலத்திலோ நல்ல மழை பொழிந்தாலும் ஏரியில் நீரை சேமிக்க முடியாத நிலை இருந்ததாம்.
இதனை கண்டு வேதனை அடைந்ததாலும், எதிர்கால தலைமுறையினரின் நலத்தை கருத்தில் கொண்டும் ‘பொறுத்தது போதும், பொங்கியெழுவோம், நமக்கு நாமே செய்திடுவோம்’ என்று செயலில் இறங்கி தன்னார்வலர்களை ஒன்று சேர்க்க ஆரம்பித்தது சிட்லப்பாக்கம் ரைசிங் டீம் அமைப்பு. முதலில் பத்துக்கும் குறைவான நபர்களே இருந்தனர்.
ஒரே எண்ணத்துடன் ஒரே மூச்சாக சிட்லபாக்கம் ஏரியை தூய்மைப்படுத்த இந்த அமைப்பினர் மேற்கொண்ட வழிகளை அறிந்த, பார்த்த பிறகு நூற்றுக்கணக்கானோர் இணைந்து செயல்பட்டனர்.
சிட்லப்பாக்கம் ரைசிங் டீம் தன்னார்வலர்களின் ஆர்வத்தையும், பொதுநல எண்ணத்தையும் புரிந்து கொண்டு மேலும் சில அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள், குடியிருப்பு சங்க நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் ஆகியோரோடு முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் திரு. சி. சிட்லப்பாக்கம் ராசேந்திரன் அவர்களும் அன்றைய தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி ரூபாய் 25 கோடி ஒதுக்கி ஏரியை தூய்மைப்படுத்துதல், ஆழப்படுத்துதல், நடைபாதை அமைத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த இன்று நன்னீர் ஏரியாக மாறி உள்ளது என நினைவு கூறுகின்றனர், இந்த அமைப்பின் உறுப்பினர்கள். ஏரி தூர்வாருதல் பணி முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு மீதமுள்ள பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
தங்களின் விடாமுயற்சிக்கு கிடைத்த விருதினை பெற்றுள்ள சிட்லப்பாக்கம் ரைசிங் டீம் மேலும் கூறுகையில் எதையும் கொண்டுவராத நாம் நீர் மற்றும் சுத்தமான காற்று உள்ளிட்ட பல்வேறு இயற்கை வளங்களை அனுபவிக்கும் நாம் எதிர்கால தலைமுறையினருக்கும் அதை விட்டு செல்ல வேண்டும்.
மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதையும், உற்பத்தியையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மரக்கன்றுகள் நட்டு குறிப்பிட்ட காலம் வரை அதை நன்கு பராமரித்து பசுமையையும், சுத்தமான சுவாசக் காற்றும் கிடைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து சமூக நலன் சார்ந்த தேவைகளின் அவசியத்தையும், பாதுகாக்க வேண்டிய வழி முறைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சமூக நல சேவைகளில் ஈடுபடும் போது ஜாதி, மதம், மொழி இன வேறுபாடு பார்க்காது அனைவரும் ஒன்றே என்ற உணர்வுடன் ஈடுபட வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் மற்றும் மக்கள் தொடர்ந்து அரசின் கவனத்திற்கு நம் கோரிக்கைகளை கொண்டு சென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தால் அது நிறைவேறும் என்பதற்கு சிட்லப்பாக்கம் ரைசிங் டீம் ஒரு முன் மாதிரியாக திகழ்கிறது என்பதே ஒரு சான்று.
சிட்லப்பாக்கம் ரைசிங் டீமிற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தமிழக ஆளுநர் விருதை -2024 தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர். என். ரவி குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் வழங்கினார். நகரின் முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். சிட்லப்பாக்கம் ரைசிங் டீம் உறுப்பினர்களை அனைவரும் வாழ்த்தினர்.