பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில், தேசிய கீதம் இயக்கும் போது திடீரென்று சிறுமி மயங்கியதால், அந்த சிறுமியை இந்திய அணியின் கேப்டன் கவுர் தூக்கிச் சென்ற வீடியோ பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
மகளிர் உலகக்கோப்பைக்கான டி20 போட்டி மேற்கிந்திய தீவில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகளில் மோதியுள்ள இந்திய அணி, இரண்டிலும் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் நியூசிலாந்து அணியையும், நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியது.
உலகக் கோப்பை போட்டி என்பதால் ஒவ்வொரு போட்டி துவங்கும் முன்னரும், போட்டியில் பங்கேற்கும் இரண்டு அணிகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்படும்.
அப்போது ஒவ்வொரு வீரரின் முன்னரும் ஒரு குழந்தையை நிற்க வைப்பார்கள். அப்படி நேற்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணி வீரர்களின் முன்னால் ஒரு குழந்தை நிற்க தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் முன்னால் நின்ற சிறுமி திடீரென்று மயங்கிய நிலையை அடைந்துள்ளார். இதை அறிந்த கவுர் உடனடியாக தேசிய கீதம் முடியும் வரை காத்திருந்தார். பின்னர் தேசிய கீதம் முடிந்த உடனே அந்தச் சிறுமியை, அவரே தனது கைகளில் தூக்கிச்சென்று அங்கிருந்த நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கவுருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.




