ஏப்.28 – உவேசா அவர்களுடைய நினைவு தினம். தமிழாய் வாழ்ந்தவரை தாள் பணிவோம்!
திருக்குறள் சரஸ்வதி மஹால் நூல் நிலையத்திற்கு எப்படி வந்தது என்பதைப்பற்றி தமிழ் தாத்தா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மிகவும் சுவையான கட்டுரை.
அந்த காலத்தில் தஞ்சாவூரை சரபோஜி மன்னர் ஆண்டுவந்தார். காசி யாத்திரை போக வேண்டும் என்று மன்னர் விரும்பினார். கங்கா ஸ்னானம் ஆனபிறகு கல்கத்தா கவர்னரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ராஜாங்க பிரதிநிதி சரபோஜியை சந்திக்க ஒப்புக்கொண்டார்.
தமிழகத்திலிருந்து வருகிற மன்னர் என்பதால் அவரிடம் பழைய தமிழ் நூல்கள் இருக்கிறதா? குறிப்பாக திருக்குறள் இருக்கிறதா? என்பதை கேட்க எண்ணினார் பிரிட்டிஷ் ராஜாங்க பிரதிநிதி. ஆங்கில மொழியில் திருக்குறளைப்பற்றி அவர் அறிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரபோஜி மன்னர் கவர்னர் அலுவலகத்தில் கவர்னருடன் உரையாடிய பின்னர் விருந்து உண்டார். அப்போது கவர்னர் ஒரு கேள்வியை க்கேட்டார். உங்கள் ராஜாங்கத்தில் திருக்குறள் தமிழ்ப் பிரதி உள்ளதா? என்று வினவியது ம் சரபோஜிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை!
ஒரு பதிலை சாமர்த்தியமாகக் கொடுத்தார். பல நூல்கள் இருக்கின்றன தஞ்சாவூர் போனபின்பு பார்த்துவிட்டு தங்களுக்கு அவற்றின் நாமா வலியையும் தெரிவிக்கிறேன். திருக்குறள் தமிழ்ப் பிரதியைப் பற்றியும் விவரம் அனுப்புகிறேன் என்றார் சரபோஜி.
தஞ்சாவூர் வந்தது அவர் செய்த முதல் வேலை பல தமிழ் வித்வான்களை அழைத்து எங்கெங்கெல்லாம் தமிழ் ஓலைச்சுவடிகள் இருக்கிறதோ எங்கெங்கெல்லாம் நல்ல தமிழ் நூல்கள் இருக்கிறதோ அவைகளை எல்லாம் சேகரித்து நூல் நிலையத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார்.
சரபோஜி மராட்டியர் என்பதால் அவருக்கு தமிழ் இலக்கிய நூல்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க நியாயம் இல்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
பிரிட்டிஷ் கவர்னருக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற எண்ணிய சரபோஜி கொட்டையூர் ஸ்ரீ சிவக்கொழுந்து தேசிகர் காரைக்குறிச்சி வேலாயுத உபாத்தியாயர் திருவேங்கடத்தா பிள்ளை சுப்புராய கவிராயர் வேங்கடாசலம் பிள்ளை ஆகிய தமிழ் வித்வான்களை தமிழ் இலக்கிய நூல்களை குறிப்பாக திருக்குறள் சம்பந்தமான தமிழ் நூல்களைச் சேகரிப்பதற்காக நியமித்தார்.
தான் எந்த மண்ணை ஆளுகிறோமோ அந்த மண்ணின் இலக்கியத்தைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை சரபோஜி உணர்ந்து கொண்டார்.
பல தமிழறிஞர்கள் எட்டுத்திக்கும் சென்று நூல்களைச் சேகரித்து அவற்றைக் கொண்டு வந்து சரஸ்வதி மஹாலில் சேர்த்தனர். திருக்குறள் பழைய பிரதிகளிலும் அப்படித்தான் சரஸ்வதி மஹால் வந்து அடைந்தது.
புதியதும் பழையதும் என்கிற நூலில் உவேசா மேற்கண்ட தகவலைத் தருகிறார். திருக்குறள் சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் பின்னர் அலங்கரித்தது என்பது வரலாறு என்பதை உவேசா தெளிவுபட தன் கட்டுரையில் விளக்குகிறார்.
உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் – ஏப்.28 (1942)
- கட்டுரையாளர்: கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
(ஆசிரியர், கலைமகள் / மஞ்சரி)