பெரியோர் சந்திப்பு: திலகர், பாரதியார், தமிழ்த் தாத்தா உ.வே.சா., ஐயர்!

இலக்கியம் கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
uvesa-tilak-bharathi
uvesa-tilak-bharathi

பெரியோர் சந்திப்பு:- திலகர், பாரதியார், தமிழ் தாத்தா சந்திப்பு!

1918ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி புதுச்சேரியில் சங்கர ஜெயந்தி நடந்தது. அந்த விழாவுக்குத் தலைமை தாங்க தமிழ் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.

அந்த விழாவில் தமிழ் தாத்தா சிலப்பதிகாரத்தைப் பற்றி பேசியதோடு, பழங்காலத்துப் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றி விரிவாகப் பேசினார்.

அந்த கூட்டத்திற்கு பாரதியாரும், பால கங்காதர திலகரும் வந்திருந்தனர்.

உ.வே.சா. அவர்களைப் பார்த்து பாரதியார் தம்முடைய வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார். ‘மகாமகோபாத்தியாய’ பட்டம் பெற்ற போது பாரதியார் தம்மைப் பற்றிப் பாடிய பாடல்களைப் பாராட்டி தமிழ்த் தாத்தாவும் பாரதியாரிடம் தம்முடைய மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார்.

“நான் புதுமைப் புலவன். நீங்கள் பழம் புலவர்களை எல்லாம் வாழச் செய்கிறீர்கள். புலவர்​ ​பரம்பரை அழியாமல் காப்பவன் நான். நீங்கள் பழம் புலவர்களை தமிழ் மக்கள் மறவாமல் இருக்கச் செய்கிறீர்கள். தமிழ்நாட்டில் புலவர் பரம்பரை என்றைக்கும் வாழும். தமிழும் இறவாமல் ஒளிபெற்று விளங்கும். உங்களுக்கு மனமார வாழ்த்து கூறுகிறேன்” என்று பாரதியார் கூறினார்.

இவற்றை கேட்ட உடனிருந்த பாலகங்காதர திலகர் வியப்படைந்தார். அவர் இந்த நாட்டின் மொழிகளில் வடமொழியைப் போல் பழமையானது தமிழ் என்பதை அறிந்திருந்தார். உ.வே. சா. அவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நூல்களை வெளியிடுகிறார் என்றும், அவை இன்றும் பயனுடையவையாக இருக்கின்றன என்றும் அறிந்து வியப்படைந்தார்.

“இந்த நூல்கள் உங்களுக்கு எப்படி கிடைத்தன?” என்று திலகர் கேட்டார்.

“புலவர்கள் வீடுகளில் ஓலைச் சுவடிகள் இருக்கின்றன. இந்த பழைய நூல்கள் அவற்றில் இருந்தன. அவற்றைத் தேடிக் கண்டு பிடித்துப் பொருள் கண்டு அச்சிட்டேன்”

“அவற்றில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக இருக்குமா?”

“இப்போது அச்சில் உள்ளவை போல் இரா. அன்றியும் பல காலமாக வழிவழியாகப் பிரதி செய்து வந்தமையால் பல பிழைகள் மலிந்திருக்கும். அவற்றை எல்லாம் ஆராய்ந்து திருத்தமான பாடத்தைக் கண்டு பிடித்து அச்சிட வேண்டும்.”

இவற்றைக் கேட்டு பால கங்காதர திலகர் வியப்புற்று உ.வே. சா. அவர்களைப் பாராட்டினார்.

-“என் ஆசிரியப்பிரான்” – கி.வா.ஜகந்நாதன் -எழுதிய நூலிலிருந்து….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.