December 4, 2021, 10:03 am
More

  பத்திரிகைத் தொழிலில் சம்பாதித்தது என்ன? மஞ்சரியில் வெளியான பாபுராவ் பதில்கள்!

  manjari digest - 1

  நான் மஞ்சரி இதழாசிரியராக இருந்த போது, பழைமையில் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக, பல நல்ல தகவல்களைத் தொகுத்து வைத்தேன். சுவாரஸ்யமான சிலவற்றை மறு பிரசுரமும் செய்தேன்.

  இந்தப் படத்தில் நீங்கள் காண்பதுதான் மஞ்சரி இதழின் முதல் அட்டை. ஒரு பெண்மணி கூடையில் உள்ள பூக்களை எடுத்துத் தொகுத்து, பூ கட்டுவது போன்ற படம்.
  மஞ்சரி இதழின் நோக்கம் அதுவாகத்தானிருந்தது. பல நல்ல தகவல்களைத் திரட்டி, அவற்றை வாசகருக்கு அளித்தல்.

  நல்ல மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் எல்லாம் வந்தன.

  ***

  நான் தினமணியின் இணையப் பொறுப்பில் இருந்த போதும், இத்தகைய ஒரு தொகுப்பைத் தொகுக்க ஆசை இருந்தது.

  தினமணியின் 80வது வருடத்தில் (2014ல்) , பழைமையான பல சுவாரஸ்யங்களைத் தொகுத்து ஒரு தொகுப்பு கொண்டு வரலாம் என்ற எண்ணத்தை போன வருடமே விதைத்தேன்.

  குறிப்பாக, தினமணியில் ஆசிரியர்கள் வெளித் தெரிந்த அளவுக்கு, அந்த அலுவலகத்திலிருந்த மேதைகளான செய்தி ஆசிரியர்கள், இதழாசிரியர்கள் வெளியில் அதிகம் புகழடையவில்லை. தினமணி ஆசிரியராக பத்திரிகை உலகப் பிதாமகர் ஏ.என்.சிவராமன் இருந்த காலத்தில் அங்கே தினமணிக் கதிர், சுடர் உள்ளிட்டவற்றிலும், இதழ்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பிலும் கே.ஆர்.வாசுதேவன், நா.பார்த்தசாரதி போன்ற ஜாம்பவான்கள் பலர் இருந்துள்ளனர். அவர்களை அடுத்து, தலையங்கங்களை எழுதிய ஆசிரியர் குழு, செய்தி ஆசிரியர்கள் என ஒரு தரப்பு.

  தினமணியின் இந்த 80 வது ஆண்டில் (2014), மெழுகுவர்த்தியாய் தங்கள் உழைப்பை அளித்த அந்த முகம் வெளித்தெரியா செய்தி ஆசிரியர்களை பதிவு செய்தால் நன்றாக இருக்கும். எல்லாம் ஒரு யோசனைதான்!

  மீண்டும் மஞ்சரிக்கு வருகிறேன்…

  மஞ்சரியின் முதல் இதழ் 1947 நவம்பர் மாதத்தில் வெளிவந்தது. முதல் இதழில் மஞ்சரியின் நோக்கத்தை வெளிப்படுத்தி, அந்த இதழ் முன்மாதிரி இதழாக வெளிவந்தது. நகைச்சித்திரங்கள், துணுக்குகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், குறிப்பாக நாட்டில் அப்போது நிலவிய அரசியல் நடவடிக்கைகளை மையப்படுத்திய கட்டுரைகள் (ஜூனாகட் அலங்கோலம், காஷ்மீர அற்புதம், நமது வெளிநாட்டு இலாகா, கொடியின் கௌரவம் இப்படி…) மஞ்சரியின் விறுவிறுப்பையும் வாசகரின் எதிர்பார்ப்பை வெளிக்காட்டியும் முதல் இதழ் வெளியானது.

  அதில் ஹைலைட்டான அம்சம் பாபுராவ் பதில்கள்தான். இந்திய சினிமா பத்திரிகை உலகத்தில் ஒரு புரட்சி உண்டாக்கியவர் பாபுராவ். பிலிம் இண்டியா இதழில் அவர் பதில்கள் எழுதும் பாங்கு விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் மிகுந்தவை என்று குறிப்பிட்டு சில பதில்கள் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன… இப்போது படித்தாலும் சுவை கூட்டும் அந்தப் பகுதியிலிருந்து சில கேள்விகள் பதில்கள் … பிலிமிண்டியா அக்டோபர். 1947

  பாபுராவ் பதில்கள்:

  கே: எங்கள் கல்லூரி மாணவர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்று மூன்றுபேர் அடிக்கடி சினிமாவுக்குப் போகிறார்கள். மாணவர்களிடம் சினிமாவுக்கு உள்ள இந்தச் செல்வாக்கின் காரணம் என்ன?
  ப: அப்பாவின் பணம்.

  கே: குண்டர்களிடம் இருந்து பெண்களைக் காப்பாற்ற நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள்?
  ப: அவர்களுடைய புருஷர்களின் கையிலே துப்பாக்கிகளைக் கொடுத்து, மனத்திலே தைரியமூட்டுவதுதான் வழி. ஆப்கானிஸ்தானத்தில் ஒவ்வொரு மனிதனும் ஆயுதபாணியாய் இருக்கிறான். அங்கே பெண்களை பலாத்காரமாகக் கற்பழிப்பதில்லை. பெண்ணின் பின்னே துப்பாக்கி சகிதம் நிற்கும் மனிதனை, அவளுக்கு முன்னே நிற்கும் மனிதன் காணும்போது, அவன் தானாகவே பெண்ணுக்கு மரியாதை செலுத்துவான்.
  (குறிப்பு: 50 களில் இருந்த அப்போதைய ஆப்கன் வேறு! இப்படி ஒரு சூழல் நிலவியதாலேயே ஆப்கன் இன்றைக்கு நாம் காணும் நிலைக்கு வந்திருக்கலாம்…)

  கே: தன் சிருஷ்டித் திறமையால் உலகத்துக்குத் தொட்டிலைக் கொடுத்தானே ஒரு தச்சன், அவன் பெரியவனா? அந்தத் தொட்டிலில் படுத்த குழந்தையைத் தாலாட்ட தன் சிருஷ்டித் திறமையால் பாட்டைக் கொடுத்தானே ஒரு கவிஞன், அவன் பெரியவனா?
  ப: இரண்டு பேரும் பெரியவர்கள் அல்லர். தன் சிருஷ்டித் திறமையால் இந்த இரண்டு பேருக்கும் வேலை கொடுத்தாளே ஒரு பெண்… அவள்தான் பெரியவள்.

  கே: தரித்திரம் என்றால் என்ன?
  ப: பணக்காரன் அவிழ்த்தெறிய, ஏழை எடுத்து உடுத்திய கந்தைதான் தரித்திரம்.

  கே: காந்தி மதம் என்கிறார்களே, அது என்ன என்று உம்மால் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
  ப: அது ஒரு மனிதன் போதிப்பது; ஒரே மனிதன் பின்பற்றுவது.
  (குறிப்பு: இந்தக் கேள்வி பதில் வந்த வேளை காந்தி உயிரோடு இருந்தார்)

  கே: ஒருவரது மதத்தை மற்றவர் மதிக்க மாட்டோம் என்கிறார்களே; நம் ஜனங்கள் ஏன் இவ்வளவு இழிவாகப் போய்விட்டார்கள்?
  ப: என்றைக்குத்தான் அவர்கள் அப்படி மதித்தார்கள்? பிரிட்டிஷ்காரர்களின் காலடியிலே மிதிபட்டு எல்லாப் புழுக்களும் ஓய்ந்து கிடந்தன. இப்போது நெளிகின்றன.

  கே: யார் சோஷலிஸ்ட் தலைவன்? லட்சணம் சொல்லுவீரா?
  ப: நான் சொல்லும் லட்சணத்தைக் கேட்காதேயும். கேட்டால், சோஷலிஸத்திலேயே உமக்கு அவமதிப்பு ஏற்பட்டு விடும்.

  கே: கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் இவ்வளவு திறமையாய்ப் பதில் சொல்லுகிறீரே? எப்படி?
  ப: பசித்தவன் செய்ய முடியாத காரியமே இல்லை.

  கே: குரங்காட்டி குரங்கை ஆட்டும் வேடிக்கையைப் பார்க்கப் பெரிய நகரங்களில் உள்ளவர்கள் கூட ஏராளமாகக் கூடிவிடுகிறார்களே; என்ன
  காரணம்?
  ப: மனிதன் நன்றியுள்ள பிராணி. தன் ஆதி மூதாதையிடம் இன்னமும் அன்பு காட்டுகிறான்.

  கே: நம் கவிகள் ஏன் இன்று மிகவும் கீழ்த்தரமாய் விழுந்துவிட்டார்கள்?
  ப: கவிகளா! அவர்கள் எங்கேயப்பா இருக்கிறார்கள்?

  கே: பத்திரிகைத் தொழிலால் பெண்களின் காதலைச் சம்பாதிக்க முடியுமா? நீர் அப்படி எவள் காதலையாவது சம்பாதித்தது உண்டா?
  ப: நான் பத்திரிகைத் தொழிலுக்கு வந்தது முதல் இதுவரையில் அரும்பாடுபட்டு ஒரே ஒரு வெற்றிதான் அடைந்திருக்கிறேன். அதாவது என் மளிகைக்கடைக்காரனின் மதிப்பைச் சம்பாதித்து விட்டேன்.

  1 COMMENT

  1. முகம் தெரியாச்செய்தி ஆசிரியர்களைப்பற்றி நீங்கள் கூறுவது உண்மைதான். தலையங்கத்தின் கீழ் எழுதுநர் பெயரை வெளியிடும் நேர்மை முதன்மை ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை. எனினும் நீங்கள் உங்களுக்குத் தெரிந்த அளவில் செய்தி ஆசிரியர்கள்பற்றி எழுதலாம். நான் இதழாளர்கள் குறித்த தொடர் ஒன்றை எழுத உள்ளேன். நீங்கள் உங்களைப்பற்றிய முழுமையான விவரங்கள் தாருங்கள். பிறர் பற்றிய குறிப்பையும் தாருங்கள். தமிழறிஞர்கள், ஆன்றோர்கள் குறித்து அகரமுதல < www/akaramuthala.in > மின்னிதழில் வெளியிடுவதுபோல் இதழாளர்கள் குறித்தும் எழுதுவனவற்றை வெளியிடுவேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,784FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-