December 7, 2024, 7:45 PM
28.4 C
Chennai

’சா’வை வரவேற்கிறோம் கதையாக… மொழிக் கொலை..!

ஷா என்று ஒரு ஆளுநர் தமிழகத்தில் இருந்தாராம். அவர் நெல்லைப் பகுதிக்கு வந்திருந்தபோது, அவருக்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளைப் பார்த்து பலரும் மிரண்டு விட்டார்களாம்.
பின்னே…

‘சா’வை வரவேற்கிறோம் என்று எழுதி வைத்திருந்தால்..?!


ஸ்ரீ.ஸ்ரீ. -> 

ஸ்ரீ, ஜ, ஹ, க்ஷ, ஸ, ஷ இந்த எழுத்துகள் எல்லாம் வந்தால், ஏதோ தீண்டத் தகாத எழுத்துகள் வந்துவிட்டதுபோல், பலரும் க-ன வரையுள்ள எழுத்துகளில் ஏதேனும் ஒன்றை, அதன் ஒலிக்குறிப்பை இட்டு நிரப்புவதைப் பார்த்திருக்கிறேன்.

ஷ, ஸ, ஜ – இம்மூன்றுக்கும் ‘ச’ எழுத்தை இட்டு நிரப்புவதும்,
ஹ -வுக்கு ‘க’ என்று எழுதுவதும்,
க்ஷ-வுக்கு ட்ச என எழுதுவதும் வழக்கமாக உள்ளது.

நானும் கூட பெரும்பாலும் காமாட்சி, மீனாட்சி, இமாலயம், இமாசலம், அலகாபாத் என்று க்ஷ, ஹ வுக்கு மாற்றெழுத்துகளை மரபுரீதியாக பயன்படுத்தி விடுகிறேன்.

ஆனால், ஷ – ட வாவதும், ஸ, ஜ வை என்ன செய்வது என்றே தெரியாமல் விடுவதும் நடக்கத்தான் செய்கிறது.

விஷம் – விடமாகிவிடும். கஜம் – கசமாகுமா? ஜாங்கிரி- சாங்கிரி ஆகுமா? ஜடம்- சடம் என்றாகும்… சரி… ஜட்டி சட்டியானால் பொருள் சுட்டும் பொருள்களே வேறாகுமே!

சரி கிடக்க்கட்டும்… ’ஸ்ரீ’ என்னாவது? ‘திரு’வாக்கலாம். இருந்தாலும் ஒலிக் குறிப்பு ஒன்றாயிருந்தால் நலமாக இருக்குமே என்று எண்ணத் தோன்றும்.
***

ALSO READ:  மொழிபெயர்ப்பு என்ற மனதிற்கினிய பணி!

2003ம் ஆண்டு ஜனவரி 29ம் நாள். மஞ்சரி இதழாசிரியராக இருந்த நானும் கலைமகள் இதழாசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியனும் திருவல்லிக்கேணிப் பக்கம் சென்று கொண்டிருந்தோம்.

திடீரென திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புத்தகக் கடைக்குள் நுழைந்தோம். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தவர், எனக்கு அவர் எழுதிய நூல் ஒன்றைப் பரிசளித்தார் முகப்பில் எழுதிக் கையெழுத்திட்டு. ஆனால், அவரோ பெருங்கவிக்கோ ஆயிற்றே…. அதனால் ஒரு வெண்பாவையே ஒரு வாழ்த்துரையாக எழுதிக் கையெழுத்திட்டு என்னிடம் அளித்தார்.

நூலை வாங்கி தலைப்பைப் படித்தேன். சில நொடிகள் புரியவில்லை. கீழாம்பூராரும் சற்று விழித்தார். என் முகத்தைப் பார்த்தார்.

நூலின் பெயர் இதுதான்…. “அமெரிக்க அன்னை கூசுடன் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்”

அமெரிக்க அன்னை – சரி… அது என்ன “கூசுடன்..?”

அப்புறம்தான் எனக்கு ஒருவாறு புரிந்தது… அது “ஹூஸ்டன்” என்று!
ஹூஸ்டனில் கோயில் கொண்டிருக்கும் மீனாட்சி அம்மைக்கு பிள்ளைத் தமிழ் பாடியிருக்கிறார் வா.மு.சே.

காப்புப் பருவம் தொடங்கி, ஊசல் பருவம் முடிய பிள்ளைத் தமிழின் இலக்கணம் அமைய பத்துப் பருவங்களில் பாடல்களையும் அதற்கான விளக்கவுரையையும் எழுதியிருந்தார் அந்த நூலில்.

விடயம் இத்துடன் முடியவில்லை…

அவர் எழுதித் தந்த வெண்பாவில் என் பெயரையும் சிரீராம் என்றோ, சிறீராம் என்றோ தோன்ற எழுதியிருந்தார்- அந்த முதல் ஈரெழுத்துக்கும் அசை அமைய!

ALSO READ:  சமயபுரம் கோயிலில் புரட்டாசி பௌர்ணமி 108 விளக்கு பூஜை

அவர் எழுதியிருந்த வெண்பா… இதுதான்!

தமிழ் வாழ்க!

மஞ்சரி நல்லிதழ் மாபணி யாளர்நல்
கொஞ்சு தமிழ் சிரீராம் – விஞ்சுவளம்
மென்மேல்நல் ஆக்கங்கள் செய்கவே வெல்கவே
நன்றுவளம் வாழ்க நனி!
– அன்புடன்
(29/1/2003)
சென்னை
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

இந்த சிரீயைப் பார்த்தவுடன் எனக்கு ஆழ்வாரின் பாசுரங்கள்தான் நினைவுக்கு வந்தது.

தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே…; சிரீதரா என்றழைத்தக்கால் நங்கைகாள் நாரணன் தன் அன்னை நரகம் புகாள்…; செய்தன சொல்லிச் சிரித்தங்கு இருக்கில் சிரீதரா..; செங்கண் நெடுமால் சிரீதரா என்றழைத்தக்கால்..; என்றெல்லாம் ஆழ்வார்கள் இந்த ஸ்ரீ-யைச் சொல்லி பாடியிருக்கிறார்கள்.

இப்போது ஒரு கேள்வி-

அந்தக் காலத்தில் உச்சரிப்புக்கு வேறு எழுத்தில்லாமல் உச்சரிப்பை சரியாகச் செய்து ஒலிக்கவே இப்படி இட்டுக் காட்டியிருந்தார்கள்.
நமக்கு இந்த ஐந்து எழுத்துகளும் சரியான ஒலிக்குறிப்பைக் காட்டுவதற்கு இடைக்காலத்தில் எப்படியோ புகுந்துவிட்டன. சரி… நமக்கு இவை கிடைத்திருக்கும்போது, நாம் ஏன் இந்த எழுத்துகளைப் புறக்கணிக்க வேண்டும்?

ஏற்கெனவே ழ,ள,ல-க்கள் எல்லாம் ஒரே ஒலிக்குறிப்பாக நம்மவர் உதடுகளில் திருநடம் புரியும்போது, ண,ன,ந-க்கள் எல்லாம் ஒரே ந-வாக ஒலிக்கப்படும்போது, சின்ன ர-வா, பெரிய ற-வா என்ற கேள்விகளெல்லாம் கேட்கப்படும்போது…

இந்த ச,க,சிரீ,ட்ச-வையும் நாம் முடக்க வேண்டுமா?

குறைந்த எழுத்துகள் உள்ளது நம் மொழியின் பலம். உண்மைதான்! ஆனால், எழுதி வைத்ததைப் படிக்கும்போது, உச்சரிப்பு கெட்டுப் போனால் மொழியின் வளர்ச்சி எங்கே இருக்கும்?! தேய்ந்து கொண்டேதான் வரும்!

ALSO READ:  செங்கோட்டையில் இலவச இயற்கை யோகா மருத்துவ முகாம்!

ஓர் எழுத்து கூடுவதால் நமக்கு என்ன பாரம்..? வலுக்கட்டாயமாக அதை ஏன் நாம் புறக்கணிக்க வேண்டும்? கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற இடத்தில் நாம் பயன்படுத்தலாமே!

– செங்கோட்டை ஸ்ரீராம்

author avatar
செங்கோட்டை ஸ்ரீராம்
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week