
கனுப் பிடி!
– கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் –
நாம் வீடுகளில் வளர்க்கும் பிராணியான மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக எடுக்கும் திருவிழா மாட்டுப் பொங்கல் திருவிழா…… விவசாயத்திற்கு மிகுந்த அளவில் உதவக்கூடிய மாடுகள் நாம் வணங்கத்தக்க வை என்பதை உணர்த்தவே இத் திருவிழாவை நடத்துகிறார்கள்.
கலப்பையை இழுத்துக் கொண்டு களிமண் நிறைந்த நிலத்தை மாடுகள் உழுகின்றன! பசுமாடு பால் தருவதுடன் சாணத்தை விவசாயத்திற்கு உரமாகவும் தருகிறது. எனவே நன்றி செலுத்த தான் மாட்டுப் பொங்கல் திருவிழா.
பொங்கலுக்கு மறுநாள் மாடுகளை நன்றாக குளிப்பாட்டி அதன் கொம்புகளில் பல வண்ணங்களில் பெயிண்ட் அடித்து பளபளப்பாக்கி கொம்புகளைச் சுற்றி கரும்பையும், பனங்கிழங்கையும் பாங்குடனே பூக்களுடன் சேர்த்துக் கட்டுவார்கள். இந்த மாடுகளை ஊர்வலம் வர வெளியே அனுப்பி வைப்பார்கள். அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்கு பூஜை செய்து, தீபாராதனை காட்டி மகிழ்வார்கள். ஒரு ராஜ தோரணையில் இந்த மாடுகள் ஊரைச்சுற்றி வரும். இதை ஊரே வேடிக்கைப் பார்க்கும்.
எங்களது கிராமத்தில் மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை வெளியே அனுப்பும் பொழுது மாட்டின் கொம்புகளில் இரண்டு ரூபாயோ ஐந்து ரூபாயோ(அந்தக் காலத்தில் இது பெரிய பணம்) வைத்து அனுப்புவார்கள்!
எங்களது வீட்டில் செங்கோடன் என்கின்ற ஒரு மாடு இருந்தது. என்னுடைய தாத்தா திருமங்கலம் சுப்பையா ஐயர் வாஞ்சையுடன் வளர்த்த மாடாகும். இந்த மாட்டின் கொம்புகளில் கட்டப்படும் கரும்பு, பனங்கிழங்கு, பணம் இவைகளை யாருக்கும் கொடுக்காமல் வீட்டுக்கு கொண்டு வந்து விடும். அதி புத்திசாலியான மாடு என்று எனது சித்தப்பா அய்யாசாமி அவர்களும் எங்களது வீட்டில் நீண்ட காலம் வேலை செய்த திரு கந்தன் என்கிற உதவியாளரும் சொன்னதுண்டு! இப்படி தங்களுடைய வளர்ப்பு பிராணியைப் பற்றி கிராமத்தில் பெருமையாகப் பேசுவார்கள்.

ஜல்லிக்கட்டு என்பது மதுரை மாவட்டத்தைச் சுற்றிய கிராமங்களில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜல்லிகட்டு, ஏறுதழுவுதல் என்பது தமிழர்களிள் பாரம்பர்ய காலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழக்கூடியது.
சங்ககாலத்திலேயே இவ் திருவிழாவை தமிழர்கள் கொண்டாடியுள்ளனர் என அறிகிறோம்.
சங்ககாலத்தில் கூட ஐந்தினைகளில் முல்லை நிலத்துக்கு உரிய வீர விளையாட்டாகவே ஏறுதழுவுதல் இருந்துள்ளது.
கலித்தொகையில் ஆயர்குலப் பெண்கள் ஏறுதழுவுதலில் வெற்றிபெரும் மகனே தனக்கு கணவனாக வாய்க்க வேண்டும் என்று முல்லைநிலக் கடவுளிடம் வேண்டுவதாக உள்ளது.
கோயில்களுக்கு காளைமாட்டை (நேர்ச்சிக்கடன்) வேண்டி விடுவார்கள்.இந்த கோயில் காளை ஊரைச் சுற்றிய படி வளர்ந்துவரும்.இந்தமாட்டை கோயில்மாடு என்று கருதி யாரும் அடிக்கமாட்டார்கள்.விவசாய நிலத்தில் மேய்ந்தால் கூட விரட்டி விடுவார்களே தவிர தாக்கமாட்டார்கள்.
இந்த காளை மாடுகள் மந்தையில் பசுமாடுகளுடன் சேர்ந்து நல்ல காளை கன்றுகளை ஈன்று அடுத்த தலைமுறைக்கு நமது ‘நாட்டுமாடுகளை’ விட்டுச்செல்கின்றன……
“நமது இல்லவிழாக்கள், கோயில் விழா,கும்பாபிஷேகம் போன்ற வைபவங்களில் பசுவைப் பாதுகாக்க கோபூஜை,காளையைப் பாதுகாக்க ரிஷப பூஜை, யானையைப் பாதுகாக்க கஜபூஜை,குதிரையைப் பாதுகாக்க அஸ்வபூஜை என்று ஒவ்வொரு இனத்தையும் பாதுகாக்க ஒருபூஜையை முறையை உருவாக்கி நமது கால்நடை தெய்வங்களைப் பாதுகாத்தது நமது சமய சாஸ்த்திரங்கள்” என்கிறார் ஆனித்தரமாக என் இனிய நண்பர் தில்லை திரு கார்திகேய சிவம்.
பல்லவ மன்னர்கள் எருதுமுத்திரையை அரசு சின்னமாக வைத்திருந்தனர்.சிந்து சம வெளி நாகரீகத்தின் முத்திரைகளில் (நாணயங்களில்) ஒருபக்கம் சிவலிங்கமும் மறு பக்கம் எருது முகமும் இருந்துள்ளது!
தை மாதம் முதல் நாள் பொங்கல் வைத்து நாம் அறுவடை திருநாளைக் கொண்டாடுகிறோம் சூரியனை வணங்குகிறோம். பொங்கலோ பொங்கல் என்று மனம் உருகி இறைவனை வணங்குகிறோம்.
அதேபோல் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக மாட்டுப் பொங்கலைச் சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்!!
தை முதல் தேதிக்கு அடுத்த நாளில் காலை எழுந்தவுடன் ‘கனுப்பிடி’ வைத்து பெண்கள் கொண்டாடுவார்கள். சித்ரான்னங்கள் செய்து இறைவனுக்குப் படைப்பார்கள். முந்தைய நாள் உணவில் மீதி இருந்ததை மஞ்சள் பொடியுடன் சேர்த்து அழகான இலையில் சூரியனுக்கு முன்பாக வைத்து தனது சகோதரர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்மணிகள் வேண்டிக் கொள்வார்கள்.
தை முதல் தேதி எவ்வளவு முக்கியமானதோ அதேபோன்றுதான் அடுத்த நாளும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சென்னை போன்ற நகரங்களில் மூன்றாம் நாளை காணும் பொங்கல் என்று கொண்டாடி ஊர் சுற்றி மகிழ்கிறார்கள்.