
இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்… என்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது…
போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.
அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இதனிடையே, அவரது பதிவுக்கு பின்னூட்டமாக இன்று திருவள்ளுவர் பிறந்த நாள் இல்லை என்றும், வைகாசி அனுஷ நட்சத்திரமே அவரது பிறந்த தினம் என்றும் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். தமிழினத்தின் அடையாளமாகத் திகழக் கூடிய திருவள்ளுவரின் பிறந்த தினத்தையே மாற்றி அமைத்து, அவரை வழிபட முடியாமல் செய்துவிட்டவர்கள் திராவிட இயக்கத்தினர் என்றும், கருணாநிதி முதலமைச்சராக வந்து, தமிழர் அடையாளங்களைச் சிதைத்தவற்றில் இது மிகவும் முக்கியமான ஒன்று என்றும் கருத்துகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
திருவள்ளுவர் தினம் வைகாசி அனுஷம் தான்.
மயிலாப்பூரில் பல நூற்றாண்டுகளாக உள்ள திருவள்ளுவர் திருக்கோயிலில் வைகாசி அனுஷம் தான் திருவள்ளுவர் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இன்று திருவள்ளுவர் தினம் என்பது திமுக வரலாற்றை அழிக்கும் நோக்குடன் கொண்டு வந்தது… என்று ஒருவர் கருத்திட்டிருக்கிறார்…