December 3, 2021, 5:42 am
More

  பாரதி-100: தீராத விளையாட்டுப் பிள்ளை… கண்ணன்!

  (பாரதியாரின் கற்பனையில் ஊறிய இந்த அற்புதப் பாடலின் விளக்கத்தை இங்கே நான் ஒரு சிறு கதையாக அளித்துள்ளேன்)

  subramania bharati 100 1
  subramania bharati 100 1

  பாரதியாரின் கண்ணன் பாட்டுபகுதி – 26

  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  தீராத விளையாட்டுப்பிள்ளை – சிறுகதை, தொடர்ச்சி

  ஹாசினி மீண்டும் பேச ஆரம்பித்தாள். யசோதா நீ அவனைக் கண்டித்து வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகள் பெண்களிடத்து தொல்லைகள் செய்யாமல் இருக்க வேண்டும். இப்படித்தான் பிரேமா போன வாரம் வந்தாள் கண்ணன் அவளிடம் ”பிரேமா  இங்கே வாயேன் உனக்கு ஒரு அழகான பூ நந்தவனத்தில் இருந்து பறித்துக் கொண்டு வந்திருக்கிறேன்” என்று அந்தப் பூவை அவளிடம் காட்ட அவள் பெருமிதத்தோடு ஓடிவந்திருக்கிறாள். மற்ற பெண்கள் “கண்ணா, எங்களுக்கும் பறித்துக் கொண்டுவந்து தாயேன்” என்று கெஞ்ச பிரேமாவின் அருகில் சென்று ”நீ கண்ணை மூடிக்கொள் உன் தலையில்  நானே இதை அழகாகச் சூட்டுகிறேன்” என்று சொல்லியிருக்கிறான்.  அந்தப் பெண்ணும் அவனை நம்பி கண்ணை மூடிக்கொண்டு நிற்க, அந்த திருட்டுப்பயல் அருகில் இருந்த இராதையின் தலையில் அந்தப் பூவை சூட்டிவிட்டு ஓடிவிட்டான். ஏமாந்த பிரேமா அவனைத் துரத்தினால் அகப்படுவானா?

       இதற்குள் நந்தகோபன் வந்துவிட்டார். “என்ன இரண்டு பெண்களும் கதை பேசுகிறீர்களா?” எனக் கேட்டுகொண்டே கைகால் கழுவினார். அதற்குள் ஹாசினி “வாங்க அண்ணா, கதைதான் எல்லாம் உன்னுடைய துஷ்டப்பையன் கண்ணனைப் பற்றித்தான்” என்றாள்.

       நந்தகோபன் தன் முகத்தைத் துடைத்தவாரே “ஆமாம். அவன் தொல்லை அதிகமாகிவிட்டது. போன சனிக்கிழமை இங்கே ஒரு வீட்டில் விசேஷம். ஒரு பெண் தனது பிறந்த தினம் என்பதற்காக தானும் நீளமாக தலையைப் பின்னி, தாழம்பூ வைத்து மற்ற தோழிகளுக்கும் பின்னிவிட்டு, எல்லோரும் தாழம்பூ மணம் கம கமக்க விளையாடிக் கொண்டிருந்திருக்கின்றனர்.  நம் பயல் அங்கே அப்போது போயிருக்கிறான். அவன் கவனம் அவர்கள் பின்னல் மேல் சென்றிருக்கிறது. ஒளிந்து கொண்டே அவர்கள் அறியாமல் பின் பக்கமாக வந்து அவர்களது பின்னலை பிடித்து இழுத்து விட்டு யார் என்று அவர்கள் பார்க்குமுன்பு ஓடிப்போயிருக்கிறான்.   

       அதற்குள் “நானும் உங்களுடன் இதைப்பற்றிப் பேசவேண்டும் என நினைத்திருந்தேன். உங்களுக்கு மைதிலி கதை தெரியுமா? ஒருநாள் கோவிலில் விசேஷம் என்று மைதிலி புதிதாக நீல வண்ணச் சேலை  ஒன்றை எடுத்து, கட்டிக்கொண்டு வந்திருக்கிறாள். எங்கே காட்டு, உன் புடவை ரொம்ப புதிதாக அழகாக இருக்கிறதே என்று அதைப் பார்ப்பதுபோல் அருகே வந்து அந்த புடவையில் நிறைய சேற்றைப் பூசிவிட்டு ஓடியிருக்கிறான். அவள் அழுது புலம்பி ஊரையே கூட்டிவிட்டாள். நான் எப்படியோ அந்த பெண்ணின் தாயை சமாதானம்  செய்து அன்று சாயந்திரம் ஒருவாறு அனுப்பி வைத்தேன்.  

       உடனே ஹாசினி, ”அடடா பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத பிள்ளையாக இருக்கிறான் உன் வீட்டுக் கண்ணன். இந்த 6 வயதிற்குள் இவ்வளவு விஷமமா? அதுசரி அவன் எங்கே சங்கீதம் படித்தான்?  புல்லாங்குழலில் வெகு நன்றாக ஊதுகிறானே. எப்படி இந்த நந்தகோபன் பிள்ளை இவ்வளவு நன்றாக குழல் ஊதுகிறான் என நாங்கள் அதிசயிப்போம்”

       ”அதை ஏன் கேட்கிறாய் ஹாசினி, எங்கள் குடும்பத்தில் இதுவரை யாருமே இப்படி ஒரு வாத்தியம் உபயோகித்ததில்லை. எதிலுமே இந்தப் பயல் கண்ணன் தானே முதல்வன். ஒருநாள் சில பயல்களோடு யமுனா நதிக்கரையோரம் ஒரு மூங்கில் கொத்தில் இருந்து ஒரு சில மூங்கில்களைக் கொண்டுவந்தார்கள். இவன் அதில் ஒன்றை எடுத்து  வெட்டி, துளை போட்டு, ஊத ஆரம்பித்தான்.  எங்கிருந்தோ மந்திரம் போட்டது போல் இசை வெள்ளம்” என்றார் நந்தகோபன்.

       அதற்கு ஹாசினி “அண்ணா, உனக்குத் தெரியாது. நாங்களெல்லாம் எப்படி அவனுக்கு இவ்வளவு இனிமையாக குழலூத முடிந்தது என்று அடிக்கடி யோசிப்போம். யோசித்தால், களைப்புதான் மிஞ்சும். இந்த ஊரே திரண்டு அவன் பின்னே ஓடுகிறது. கையில் இருந்த வேலையைப் போட்டுவிட்டு மந்திரத்தால் கட்டுண்டது போல் அல்லவோ அந்தப் பெண்களும், அவர்கள் தாய்மார்களும் மற்ற கோபியரும் இந்த ஊரில் அவன் குழலூதும் இடத்தை நோக்கி ஓடுகிறார்கள். என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை” என்றாள்.

       “அவனது வேணுகானம் கிடக்கட்டும். அவன் ஒரு பெண்ணின் வாயில் கட்டெறும்பைப் பிடித்து போட்டுவிட்டான் தெரியுமா?” என்று கேட்டாள் யசோதா.

       நந்தகோபன் அதிர்ச்சியுடன் என்ன கட்டெறும்பை வாயில் போட்டானா? என்றார்.

       அதற்கு யசோதா, “ஒரு பெண் அடிக்கடி எப்போதும் வாயைத் திறந்து சத்தமாகச் சிரித்துக்கொண்டிருப்பாள். என்ன தோன்றியதோ நம் கண்ணனுக்கு, அருகே ஓடிக் கொண்டிருந்த ஆறு ஏழு பெரிய கருப்பு நிற  கட்டெறும்புகளைப் பிடித்து அவள் வாயில் போட்டு விட்டான்.  பயந்துபோன பெண் அப்படியே துப்பிவிட்டு பேச்சு வராமல் உளறலோடு ஓடி விட்டாள். அவளுடைய அம்மா வந்து என்னிடம் புலம்பினாள்.

       அப்போது ஹாசினி “இரண்டு நாட்களுக்கு முன்னர் சுந்தரி ஆற்றங்கரையில் என்னோடு பேசிகொண்டிருந்தாள். அப்போது அவள் “கண்ணன் குறும்புகளை பட்டியல் போட்டு காணாது. ஒரு புத்தகமே தனியாக எழுதவேண்டும்.  ”ஏய், வாடி விளையாடலாம் என்று வீடு வீடாகப் போய் பெண்களைக் கூட்டி வருவான். ”நீ போடா எங்களுக்கு வேலை நிறைய இருக்கிறது என்றால் கூட விடமாட்டான். கையைப் பிடித்து தர தர என்று இழுத்துக் கொண்டு ஓடுவான். சின்னக் குழந்தைகளைக் கூட விடமாட்டான். எல்லோரோடும் அவனுக்கென்று ஒரு தனி விளையாட்டிருக்கும். பாதி விளையாட்டில் திடீரென்று காணாமல் போய்விடுவான். வீட்டுக்கு ஓடிவந்துவிடுவான். அவர்கள் அவனைத்தேடி   கூட்டமாக வருவார்கள். அவன் எங்கோ ஒளிந்து கொள்வான்.

       அது மட்டுமல்ல. நம்ம கண்ணன் கிட்டே ஒரு சாமர்த்தியம் உள்ளது, அது என்ன தெரியுமா?  எல்லோருக்கும் நல்லவன். அம்மா, அப்பா, பாட்டி, அத்தை, சித்தி எந்த வீட்டிலும் அவன் நல்ல பிள்ளை என்ற பெயர் வாங்கும் திருட்டுப் பிள்ளை. கூசாமல் பொய் சொல்வான். தான் செய்ததை அப்படியே அபாண்டமாய் அடுத்தவன் செய்தான் என்று நம்பும்படியாக நடிப்பான். ஆளுக்குத் தகுந்தபடி மன நிலையை அந்த வயதிலேயே தெரிந்து அதன் படி நடந்து அவர்களை தன் வழிக்குக் கொண்டுவரும் சமர்த்தன்.  என்ன சொக்குப் பொடி போடுவானோ தெரியாது கோகுலம் ஆயர்பாடி பிருந்தாவனம் பூரா அவன் ஆட்டுவித்தபடி ஆடாத பெண்ணே கிடையாது போங்கள்”  என்று  நநகோபனிடம்  சொல்லி முத்தாய்ப்பு  வைத்தாள் ஹாசினி.

  ​     உண்மையிலேயே இன்றும் அந்த கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை என்பதில் ஒரு சந்தேகமும் இல்லையே.​

  (பாரதியாரின் கற்பனையில் ஊறிய இந்த அற்புதப் பாடலின் விளக்கத்தை இங்கே நான் ஒரு சிறு கதையாக அளித்துள்ளேன்)

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,776FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-