பாரதி-100: தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி!

கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு – பகுதி – 39
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கண்ணம்மா என் காதலி – 3
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி

இந்தப் பாடலை பாரதியார் “முகத்திரை களைதல்” என்ற குறிப்போடு நாதநாமக்கிரியை இராகத்தில், ஆதிதாளத்தில், சிருங்கார ரசம் வெளிப்பட எழுதியிருக்கிறார். 1982இல் நான் இந்தி மொழியில் ‘கபி, கபி’ என்ற ஒரு திரைப்படம் பார்த்தேன். அந்தப் படத்தில் வரும் ‘கபி கபி மேரே தில் மே’ என்ற பாடலில் ‘சுஹாக் ராத் ஹை கூங்கட் உடா ரஹா ஹூம் மைம்’ என்ற வரியில்தான் நான் முதல் முதல் வடைந்தியாவில் மணப்பெண்ணின் முகத்திரை விலக்கிப் பார்க்கு வழக்கம் பற்றி அறிந்தேன். பாரதியார் காசியில் சிலகாலம் வாழ்ந்தவர் ஆதலால் அவர் இந்த வழக்கத்தை மையமாக வைத்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். இனி இரண்டு பத்திகள் மட்டுமே கொண்ட இந்தப் பாடலைக் காணலாம்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! – பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் – இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் – துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை – முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ? 1

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் – பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் – வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் – வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ட சப்பிலே – கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? 2

இராஜபுத்திரப் பெண்களும் முகம்மதியப் பெண்களும் முக்காடிட்டு முகத்தை மறைத்துக்கொள்ளும் வழக்கம் பாரதியார் வாழ்ந்த காலத்திலும் இருந்தது. இந்தக் காலத்தில் இவ்வழக்கம் குறைவாகக் காணப்படுகிறது. இப்பழக்கத்தைப் பற்றி இப்பாடல் குறிப்பிடுகிறது.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

காதலி கண்ணம்மா முகத்திரையுடன் காணப்படுகிறாள். அவளை நோக்கி நாயகன் பேசுகிறான். கண்ணன் வாழ்ந்த காலத்தில் துருக்கர்கள் கிடையாது. ஆயினும் பாரதியார், நாயகன் கண்ண்ம்மாவிடம் முகத்தைத் திரையிட்டு மறைக்கும் வழக்கம் தில்லியை ஆண்ட துருக்கர்களால் வந்தது எனக் குறிப்பிடுகிறார். இந்தியப் பெண்கள் அழகாக உடையுடுத்தி, மார்பகங்களையும் இடையினையும் மறைத்துக் கொண்டிருப்பதே தனியழகு. பாரதிதாசன் சொன்னதுபோல

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!
கோல முழுதும் காட்டிவிட்டால் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ?

என்று கேட்கவேண்டும் போலத் தோன்றும். இந்தப் பழக்கம் மகளிரின் அடக்கப் பண்பிற்கும் நாணத்திற்கும் ஓர் அறிகுறி. இவ்வாறு இடையையும் மார்பகத்தையும் மூடுவதால் மகளிரின் அழகு மறைந்து போவதில்லை என நாயகன் கண்ணம்மாவிடம் கூறுகிறான். மேலும் ‘சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை’ என்றும் கூறுகிறான். ‘முகத்தை மறைப்பதால் காதல் எப்படி மலரும்?’ எனக் கேட்கிறான்.
இதற்கு கண்ணம்மா ‘திரையிட்டு முகத்தை மறைக்கும் பழக்கம் ஆரிய முன்னெறி எனக் கூறுகிறாள். அதற்கு நாயகன் – பண்டைய ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ? ஓரிரு முறைகண்டு பழகிய பின்னர் வெறும் ஒப்புக்கு முகத்திற்கு திரையிட்டுக் காட்டுகின்ற இந்த நாணம் எதற்கு? என்னை யாரேனும் இங்கு தடுக்க முடியுமா? நான் வலுக்கட்டாயமாக உன் குகத்திரையை அகற்றினால் என்னைத் தடுப்பவர் யாரேனும் உளரோ? உண்ணக்கூடிய கனியைக் கண்டவன் எவனேனும் அதன் தோலுரிக்கக் காத்திருப்பானா? – எனக் கேட்கிறான்.

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.