~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
பாரதியாரின் கண்ணன் பாட்டு
பகுதி – 42, கண்ணம்மா என் காதலி – 5
தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையிலே
(குறிப்பிடம் தவறியது)
பாரதியார் இந்தப் பாடலை செஞ்சுருட்டி இராகத்தில், ஆதி தாளத்தில், சிருங்கார ரசம் வெளிப்படும் வண்ணம் இயற்றியிருக்கிறார். இந்தப் பாடல் கமலஹாசன் படங்களில் இருமுறை பயன்படுத்தப்பட்டது. முதலில் “இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தில் ‘வார்த்தை தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா, மார்பு துடிக்கு தடீ, பார்த்த விடத்திலெல்லாம் – உன்னைப்போலவே பாவை தெரியு தடீ’ என்ற வரிகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் “வறுமையின் நிறம் சிகப்பு” படத்தில் முதலிரண்டு பத்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
‘குறியிடந் தவறியது’ என்று பாரதியார் குறிப்பிட்டிருக்கும் துறை சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ‘அல்ல குறிப்பிடுதல்’ என்ற அகத்துறையுடன் ஒத்துப் போகிறது. கண்ணம்மா தன்னுடைய தோழியுடன் வருவதாகக் குறியிடம் கூறியிருக்கிறாள்.
தீர்த்தக்கரை, தெற்கு மூலை, செண்பகத் தோட்டம், வெண்ணிலவு காயும் இரவு இவைதான் அடையாளங்கள். நாயகன் அங்கு வந்து காத்திருக்கிறான். கண்ணம்மா வரவில்லை. அந்தத் தவிப்பிலே, ஏக்கத்திலே இந்தப் பாடல் பிறக்கிறது. இனி பாடலைக் காணலாம்
தீர்த்தக் கரையினிலே – தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் – வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம் – உன்னைப்போலவே
பாவை தெரியு தடீ! 1
மேனி கொதிக்கு தடீ! – தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் – இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும் – பிரி வென்பதோர்
நகரத் துழலுவதோ? 2
கடுமை யுடைய தடீ! – எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் – எண்ணும்போது நான்
அங்கு வருவதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை – கட்டுங் காவலும்
கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள் – எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள். 3
கூடிப் பிரியாமலே – ஓரி ரவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே,
ஆடி விளை யாடியே, – உன்றன் மேனியை
ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் – குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே,
பாடிப் பரவசமாய் – நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி! 4
குறியிடத்திற்கு வந்து நாயகன் காத்திருக்கிறான், அங்கே அவன் பார்க்கும் பொருள்களெல்லாம் அவனுக்கு கண்ணம்மாவைப் போலத் தோன்றுகிறது.
கண்ணம்மாவைக் காணாததால் நாயகனின் மேனி கொதிக்கின்றது; தலைசுற்றுவதால் அவனுக்கு வேதனையாக இருக்கிறது. வானத்தைப் பார்த்தால் வெண்ணிலா வானத்தில் உள்ளவைகளைத் தழுவுவது போல அவனுக்குத் தோன்றுகிறது. இந்த வையகமே தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவன் மட்டும் தூக்கமின்றி, பிரிவு என்னும் நரகத்தில் உழல வேண்டியுள்ளதே என அவன் புலம்புகிறான்.
உன்னுடைய வீட்டுப் பக்கம் வந்து பார்க்கலாம் என்றால் அங்கே காவல் மிகுதியாக இருக்கிறது. எப்படியாவது வந்து பார்க்கலாமென்றால் காதலில் உனக்கு அடிமையான என்னால் நினைத்த நேரத்தில் உன்னைப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு கடுங்காவல். இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்ல.
காவலில் இருக்கும் கண்ணம்மாவோ எதற்காகவோ நாணிக் குலைந்து அமர்ந்திருக்கிறாள்” இரவு நேரத்தில், குறியிடத்தில் பார்த்துவிட்டுப் போகாமல், இரவு முழுவதும் கூடிக் குலவி, ஆடி விளையாடி, கண்ணம்மா உன்னுடைய மேனியைத் தழுவி மனக் குறை தீர்த்துக் கொள்ளவே நான் தவம் செய்யவில்லையடி” என நாயகன் பாடுகிறான்.
நாயகனை சீவாத்மா எனவும் கண்ணபெருமானை பரமாத்மாவாகவும் கொண்டு இப்பாடலை நோக்கினால், இறைவனை அடைய பக்தன் விரும்பும் மனநிலையை இப்பாடல் எடுத்துரைக்கிறது. பண்டைய சங்க இலக்கியப் பாடல்களிலும் ஆழ்வார் பாசுரங்களிலும் பிரிவாற்றாமையைத் தாங்க முடியாமல் நாயகி தவிப்பதாகக் கூறப்பட்டிருக்கும். இதுவே அகத்திணை நெறி. ஆனால் இப்பாடலில் நாயகன் தவிப்பதாக பாரதியார் ஒரு புதுநெறியை வகுக்கிறார்.