
கண்ணனும் கண்ணதாசனும்….
– K.G. ராமலிங்கம்
கோகுலத்து குழந்தைக்கு கொஞ்சு தமிழ் கவி வடித்தேன்…. யார் குலத்தில் பிறந்தாலென்ன…. மாதவா உன்னைக் காதலித்தேன்…..
அவர் வைணவரும் அல்லர் , மத போதகரும் அல்லர். எந்த மதத்தையும் ஆன்மீகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பவர் – அவர் கண்ணனின் தாசன், ஆம் கண்ணதாசன், ஆம் அவர்தான் கவிஞர் கண்ணதாசன்.
அவர் ஒரு நல்ல ரசிகர் அவர் பாடல்களில் அவர் கண்ணனைக் கண்ட விதம் அதை நாம் கண்டு அணுகினால் அவரது சிந்தனை, அவரது கவிதைகளுக்குள் ஒரு ஆன்மீக பயணத்தை தேடித் சென்றிருப்பதை பார்க்கலாம் – அவர் பாடல்களுள்
“கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா , கிருஷ்ணா….. கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா .” இந்தப் பாடல் இடம் பெற்ற படம் தெய்வமகன் – படத்தின் கதையின்படி குரூரமான முகத்தோடு பிறந்தான் என்று தனிமைப் படுத்தப்பட்டு வெறுக்கப்படும் குழந்தை – அந்த குழந்தையின் இடத்தில் தன்னை வைத்து படைத்த பாடல் தான் இந்தப் பாடல். இதில் அவரது வாழ்க்கையை படம் பிடித்து காட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம் –
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா (கேட்டதும்)
தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா அதை
உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா (கேட்டதும்)
(மேலே உள்ள சரணத்தில் அவர் சுவீகாரம் போனதை சொல்லி தனக்கு ஒரு வாழ்வை கொடுத்ததற்கு நன்றி கூறியிருப்பார்)
நீ உள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா
கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா
எண்ணெயில்லாதொரு தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கண்களைப் போலிமை காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா.. கிருஷ்ணா…
(2)
“கங்கைக்கரைத் தோட்டம் கண்ணிப் பெண்கள் கூட்டம் , கண்ணன் நடுவினிலே ..” இந்தப் பாடல் பொன்னெழுத்துக்களால் பொறித்து வைக்க வேண்டிய பாடல்களில் ஒன்றாகும். இந்த பாடலின் சரணங்களில் –
கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓ.. ஓ.. கண்ணன் நடுவினிலே
கண்ணன் முகத்தோட்டம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்(2)
கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்(2)
என்ன நினைந்தேனோ? தன்னை மறந்தேனோ..
கண்ணீர் பெருகியதே..
ஓ.. ஓ.. கண்ணீர் பெருகியதே..
கண்ணன் என்னை கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளிக்கொண்டான்(2)
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் கோடி தந்தான்(2)
கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை கண்ணீர் பெருகியதே..
ஓ.. ஓ.. கண்ணீர் பெருகியதே..
அன்று வந்த கண்ணன்
இன்று வரவில்லை என்றோ அவன் வருவான்..
ஓ.. ஓ.. என்றோ அவன் வருவான்..
கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை(2)
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை(2)
கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ…காற்றில் மறைவேனோ
ஓ.. ஓ.. காற்றில் மறைவேனோ
நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன்
ஓ.. ஓ…நானே தவழ்ந்திருப்பேன்
கண்ணா.. ஆ.. ஆ…ஆ…கண்ணா.. ஆ.. ஆ…ஆ…கண்ணா.. ஆ.. ஆ…ஆ.
இந்தப் இரண்டு பாடல்களையும் தனிமையில் ஒரு பெரிய ஹாலில் ஜன்னல்களை எல்லாம் மூடிவிட்டு வெளிச்சம் குறைவாக உள்ள ஒரு நீல நிற விளக்கொளியில், ஸ்டீரியோவில் லோ வாய்ஸில் கண்ணை மூடிக் கொண்டு பெருமாளை ஆழ்ந்த த்யானத்தில் கேட்டுப் பாருங்கள் – அந்த ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் அத்தனையும் ஒருங்கே கேட்டு அமையப் பெற்றது போல உணர்வீர்கள்.
” கண்ணா கருமை நிறக் கண்ணா ..”
உன்னைக் காணாத கண்ணில்லையே(2)
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
(கண்ணா…)
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா(2)
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா (கண்ணா)…
பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா(2)
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா(2)
எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா (கண்ணா…)
கார்மேக வண்ணம் நிறமே அதுதான் என்றிருக்க தாழ்வு மனப்பான்மை அங்கேயே அடிபட்டு விடுகிறது .
தனது ஆற்றாமையை அழகான வரிகளில் வடித்திருப்பார் – அந்த வரிகளுடன் இசையைத் தாண்டி அன்றைக்கும் இன்றைக்கும் கேட்பவர் மனதில் ஒரு அழியாத தாக்கத்தைக் கொடுத்து வருகிறது என்றால் அது மிகையில்லை.
“கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி …” பாடலில் கண்ணன் செய்த கள்ளத்தனங்களை சொல்லி சொல்லி மாய்கிறார். மேலும் அவர் கண்ட வெற்றி …. இன்னும் யோசிக்க வைத்துள்ளது .
“ராதைக்கேற்ற கண்ணனோ , சீதைக்கு கேற்ற ராமனோ கோதைக்கேற்ற கோவலன் யாரோ …?” இப்படியும் எழுதி பார்க்கிறார்….
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்த பொல்லாத கண்ணனின் ராதை ,…. புல்லாங்குழல் மொழிக் கோதை “…… பிறகு இறுதியாக, கோதையின் காதல் ஆன்மீகக் காதல் உன்னதம் என்ற கூற்றில் நிலை கொள்கிறார். இந்த இடத்தில் கண்ணன் தத்துவக் கண்ணனாக மாறுகிறான் ….
“கண்ணன் வந்தான் , அங்கே கண்ணன் வந்தான் …” பாடலில் ,
” கேட்டவருக்கு கேட்டபடி கண்ணன் வந்தான் , கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் …”
என்ன ஒரு அருமையான தெளிந்த நீரோடையைப் போன்ற வரிகள்….
“திருமால் பெருமைக்கு நிகரேது
திருமால் பெருமைக்கு நிகரேது
உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது
பெருமானே உந்தன் திருநாமம்
பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம்
கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம்
தன்னைக் காப்பதற்கே கொண்ட அவதாரம் மச்ச அவதாரம்
அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும்
எங்கள் அச்சுதனே உந்தன் அவதாரம்
கூர்ம அவதாரம்
பூமியைக் காத்திட ஒரு காலம்
நீ புனைந்தது மற்றொரு அவதாரம்
வராக அவதாரம்
நாராயணா என்னும் திருநாமம்
நிலை நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்
நரசிம்ம அவதாரம்
மாவலிச் சிரம் தன்னில் கால் வைத்து
இந்த மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம் வாமன அவதாரம்
தாய் தந்தை சொல்லே உயர் வேதம்
என்று சாற்றியதும் ஒரு அவதாரம்
பரசுராம அவதாரம்
ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம்
எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம்
ராம அவதாரம்
ரகு குலம் கொண்டது ஒரு ராமன்
பின்பு யது குலம் கண்டது பலராமன்
பலராமன்
அரசு முறை வழிநெறி காக்க
நீ அடைந்தது இன்னொரு அவதாரம்
கண்ணன் அவதாரம்
விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக
நிலை மறந்தவரும் நெறி இழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக
இன்னல் ஒழித்து புவி காக்க
நீ எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
கல்கி அவதாரம்”
திருமால் பெருமைக்கு நிகரேது – கண்ணதாசனே உந்தன் பெருமைக்கு
விலையேது…..
உண்ணும் போதும் உறங்கும் போதும் எண்ணம் முழுதும் கண்ணன் தானே…
கண்ண(தாசனை)னை நினைக்காத நாளில்லையே….
இவரின் பாடல்கள், ரசனை, பக்தி, ஆன்மீகம் என்பது நமக்கு உணர்த்துகிற விதத்தில் அமைந்ததில் வியப்பே… ஆனாலும் அவரிடம் கண்டது வியப்பில்லை… அவரே எளிய முறையில் கண்ணனை உணர்ந்தவர்..
தனது புனை பெயரைத் தானே அவசர நிமித்தம் அமைத்துக் கொண்ட பிறகே கண்ணனை நேசிக்கலானார் கவியரசர் கண்ணதாசன். அது அந்தக் கண்ணன் அருள் என்றால் அது மிகையில்லை .. எந்த பக்தி கொண்ட நெஞ்சமும் இதை உணரும்…..